ஒட்டுமொத்த அரசாங்கமும் தோல்வி : அத்வானி பாய்ச்சல்
ஒட்டுமொத்த அரசாங்கமும் தோல்வி : அத்வானி பாய்ச்சல்
ஒட்டுமொத்த அரசாங்கமும் தோல்வி : அத்வானி பாய்ச்சல்
ADDED : ஜூலை 14, 2011 11:15 PM

மும்பை : 'மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள், மத்திய அரசின் ஒட்டு மொத்த கொள்கை முடிவுகள் தோல்வி அடைந்ததை பிரதிபலிக்கின்றன' என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறினார். பா.ஜ., தலைவர் அத்வானி, குண்டு வெடிப்பு நடந்த இடங்களை பார்வையிடுவதற்காக நேற்று மும்பை வந்தார். விமான நிலையத்தில் இருந்து நேரடியாக ஜவேரி பஜார் சென்று, குண்டு வெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட்டார். இதன்பின், ஒபேரா ஹவுஸ் சென்று, அங்கு ஏற்பட்ட பாதிப்பையும் பார்வையிட்டார். ஜி.டி. மருத்துவமனை, ஜே.ஜே. மருத்துவமனை ஆகியவற்றுக்கு சென்று, குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை சந்தித்து, ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசியதாவது: மும்பையில் தற்போது நடந்து முடிந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள், உளவுத்துறை தோல்வியால் ஏற்பட்டது என்று கூற முடியாது. இது அரசாங்கத்தின் ஒட்டுமொத்த கொள்கை முடிவுக்கான தோல்வி என்றே கூறவேண்டும். பயங்கரவாதம் தொடர்பான விஷயத்தில், தனது இரண்டுவிதமான மனப்போக்கை, மத்திய அரசு கைவிட வேண்டும். பயங்கரவாதத்தை இனிமேலும் சகித்துக் கொள்ள முடியாது என்ற அளவுக்கு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தாக்குதலுக்கு, இந்தியன் முஜாகிதீன் அமைப்பு தான் காரணம் என, சிலர் கூறுகின்றனர். அப்படியானால், குண்டு வெடிப்புகளை நிகழ்த்துவதற்கான உதவிகளை, பாகிஸ்தானிடம் இருந்து அவர்கள் பெற்றனரா. இவ்வாறு அத்வானி கூறினார்.
-நமது டில்லி நிருபர்-


