"லோக்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமரை கொண்டு வரக்கூடாது' : ராகுல்
"லோக்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமரை கொண்டு வரக்கூடாது' : ராகுல்
"லோக்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமரை கொண்டு வரக்கூடாது' : ராகுல்
UPDATED : ஜூலை 15, 2011 11:57 PM
ADDED : ஜூலை 14, 2011 11:17 PM

புவனேஸ்வர்: ''லோக்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமரை கொண்டு வரக்கூடாது,'' என, காங்., பொதுச் செயலர் ராகுல் கூறியுள்ளார். ஒடிசா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல், புவனேஸ்வர் நகரில் பத்திரிகையாளர்களிடம் நேற்று கூறியதாவது: லோக்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமரை கொண்டு வரக்கூடாது. அப்படி கொண்டுவந்தால், அது பிரதமர் அலுவலகத்தின் செயல்பாட்டை சீர்குலைத்து விடும். ஆரோக்கியமான நடைமுறையை பாழாக்கி விடும். பிரதமர் என்பவர் நாட்டின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்; பல்வேறு பிரச்னைகளில் அவரது கவனம் தேவைப்படுகிறது. எனவே, அவரை லோக்பால் வரம்பிற்குள் சேர்க்கக் கூடாது. வேண்டுமானால், பிரதமர் பதவியில் இருந்து விலகியபின், அவரை லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வரலாம். லோக்பால் சட்ட மசோதா ஒரு நல்ல முயற்சி. இதன்மூலம், ஊழல் நடந்தபின் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். ஊழலை முன்கூட்டியே தடுக்கும் வகையிலான சட்டம்தான் நமக்கு தேவை. தற்போதைய சூழலில், அரசியலுக்கும், ஊழலுக்கும் இடையே பிரிக்கமுடியாத உறவு நிலவுகிறது.
ஊழல் இல்லாத அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டுமானால், தரமான நபர்கள் அரசியலுக்கு வரவேண்டும். இதற்கு, இன்றைய இளைஞர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது. ஏனெனில், அரசியல் என்பது இளைஞர்கள் தொடர்புடையது. அவ்வகையில், ஏராளமான இளைஞர்களை அரசியலுக்குள் கொண்டுவரும் முயற்சியில், இளைஞர் காங்., ஈடுபட்டுள்ளது. ஊழல் குற்றம் சாட்டப்பட்ட முதல்வர்களை பதவி நீக்கம் செய்தும், அமைச்சர்களை சிறையில் அடைக்கவும், காங்., மற்றும் பிரதமர் தரப்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஊழலை எதிர்த்து போராடுவதாகக் கூறும் பா.ஜ., தரப்பு, கர்நாடகா முதல்வர் எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது வேடிக்கையாக உள்ளது. இந்த நிலை, உத்தரப் பிரதேசம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களுக்கும் பொருந்தும். உ.பி., முதல்வர் மாயாவதி, ஊழலில் நிபுணத்துவம் பெற்றவர். அவருக்கும், அவரது கட்சியினருக்கும் ஊழல் தவிர வேறெதுவும் தெரியாது. இதனால், நாட்டில் எங்கும் இல்லாத அளவுக்கு, உ.பி., மாநிலம், ஊழலில் மலிந்து கிடக்கிறது. பாஸ்கோ தொழிற்சாலை விவகாரத்தில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் விதித்துள்ள 30 நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய, ஒடிசா மாநில அரசு முன்வரவேண்டும். இந்த விவகாரத்தில், காங்., இரட்டைவேடம் போடவில்லை. ஏழை விவசாய மக்கள் புறக்கணிக்கப்படுவதை ஏற்கமுடியாது. ஏழை மக்களை பாதுகாக்க வேண்டியது ஜனநாயகக் கடமை.
பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்கி, அவர்கள் மறுகுடி அமர்த்தப்பட வேண்டும். இந்தப் பிரச்னையில், விவசாய நிலங்கள் அல்லாமல், முற்றிலும் வேறொரு இடத்தில் பாஸ்கோ தொழிற்சாலை அமைக்கப்படுவது, சரியான தீர்வாக அமையும். தற்போதைய அரசியல் சூழலில், செல்வாக்குடைய நபர்கள்தான் இடம்பெறுகின்றனர். சராசரி மக்களும் அரசியலில் சேர்ந்து பணியாற்றும் முயற்சிகளை, இளைஞர் காங்., மேற்கொண்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள பழங்குடியின மற்றும் தலித் இனத்தை சேர்ந்த இளைஞர்களை ஈர்க்கும் விதமாக, இந்த சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். இவ்வாறு ராகுல் கூறினார்.
'பயங்கரவாத தாக்குதல்களை முழுமையாக தடுப்பது கடினம்' : ''நாடு முழுவதும் நடைபெறும் அனைத்து பயங்கரவாத தாக்குதல்களையும் தடுத்து நிறுத்துவது கடினம்,'' என, ராகுல் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதம் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டிய ஒன்று. பயங்கரவாதச் செயல்களை கையாளும் நடவடிக்கைகளில், நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம். உளவுத்துறையின் தீவிர முயற்சி மற்றும் கடும் கண்காணிப்பு காரணமாக, 99 சதவீத அளவுக்கு பயங்கரவாத தாக்குதல்கள் நடக்காமல் தடுக்கப்படுகிறது. அதையும் மீறி, ஒரு சில இடங்களில் தாக்குதல்கள் நடக்கின்றன. நாட்டில் நடக்கும் ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதல்களையும் தடுத்து நிறுத்துவது என்பது கடினமானது. உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் வழிகாட்டுதலில், பயங்கரவாதம் மீதான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பயங்கரவாதத்தை முற்றிலுமாக, தடுப்பதுதான் நமது நோக்கம். அமெரிக்காவில், இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின், எந்த பயங்கரவாதச் செயல்களும் நடக்கவில்லை எனக் கூறும் நபர்கள், ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம், அமெரிக்க ராணுவம் சிக்கித் தவிப்பதை கவனிக்க வேண்டும். இவ்வாறு ராகுல் கூறினார்.


