ADDED : ஜூலை 19, 2011 09:55 PM
திருப்பூர் : அரசு பணியாளர் தேர்வாணைய குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது.மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், அரசு துறையில் காலியாக உள்ள 7,000 பணியிடங்களுக்கு குரூப் 2 க்கான தேர்வு வரும் 30ம் தேதி நடக்கிறது.
இதில் பங்கேற்போருக்கு இலவச பயிற்சி வகுப்பு திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் நேற்று துவங்கியது. கலெக்டர் மதிவாணன் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து பேசியதாவது:பட்டை தீட்டினால் தான் வைரம் கூட மின்னும். மனிதன் படிக்க படிக்கத்தான் அறிவும் வளரும். எந்த தேர்வு என்றாலும், என்ன படிப்பு என்றாலும் ஆர்வமாக படிக்க வேண்டும்.அரசு துறையில் பல இடங்கள் காலியாக உள்ளன. கலெக்டர் அலுவலகத்தில் 165 பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 36 பேர் தான் பணியில் உள்ளனர். இது போன்ற பணியிடங்கள் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும். முயற்சியும் பயிற்சியும் தொடர்ந்து இருக்க வேண்டும். இதன் மூலம் நிச்சயம் வெற்றி பெற முடியும். தொடர்ந்து படித்துக் கொண்டேயிருக்க வேண்டும். வாய்ப்புகள் நிச்சயம் தேடி வரும்.பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்களுக்கு மாதிரி வினாத்தாள் புத்தகம் வழங்கப்பட்டது; வரும் 29ம் தேதி வரை இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.


