ஈரோடு: விவேகானந்தர், 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பயணிக்கும் விவேகானந்தர் கண்காட்சி ரயில், நேற்று ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வந்தது.
ரயிலில் 'ஏசி' வசதியுடன் கூடிய ஆறு பெட்டிகள் இடம் பெற்றுள்ளன. அதில், நான்கு பெட்டிகளில் விவேகானந்தரின் புகைப்படங்கள், அவரது சேவைகள் மற்றும் கருத்துகள் அடங்கிய தொகுப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி ரயிலை ஜனவரியில் கொல்கத்தாவில், மம்தா பானர்ஜி துவக்கி வைத்தார். நாடு முழுவதும் சுற்றி வரும் இந்த ரயில், கோவையிலிருந்து நேற்று காலை ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வந்தது.
கலெக்டர் காமராஜ் கண்காட்சி ரயிலை துவக்கி வைத்து பேசுகையில், ''இளைஞர்களின் ஊன்றுகோலாக விவேகானந்தர் திகழ்ந்தார். இளைஞர்களுக்கும், சமுதாயத்துக்கும், அவர் என்ன தொண்டாற்ற நினைத்தாரோ; அதை கண்காட்சியாக படைத்துள்ளனர். இந்தியாவின் புகழை வெளிநாடுகளிலும் பரவச் செய்தவர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே நாடு முன்னேற வேண்டும் என்று பாடுபட்டவர்,'' என்றார். மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அருள்முருகன், ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் ராஜன் உள்பட பலர் பங்கேற்றனர். நேற்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பள்ளி மாணவ, மாணவியர் நீண்ட வரிசையில் காத்திருந்து ரயில் கண்காட்சியை பார்த்தனர்.


