Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்ய திணறல்

தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்ய திணறல்

தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்ய திணறல்

தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்ய திணறல்

ADDED : ஜூலை 24, 2011 01:06 AM


Google News

சேலம் அங்கம்மாள் காலனி நில விவகாரம், பிரிமியர் ரோலர் மில் வழக்குகளில், சிக்கியுள்ள முக்கிய பிரமுகர்களை கைது செய்ய, சேலம் மாநகர போலீஸார் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதோடு, கைது செய்ய முடியாமல் திணறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சேலம் அங்கம்மாள் காலனி நில விவகார வழக்கில், போலீஸார், மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தி.மு.க.,வை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் பாரப்பட்டி சுரேஷ்குமார், கௌசிக பூபதி, காங்கிரஸ் பிரமுகர்கள் எம்.ஏ.டி., கிருஷ்ணசாமி, உலகநம்பி, கவுன்சிலர் ஜிம்மு ராமு, மகேந்திரன், சித்தானந்தம், கனகராஜ், ஆட்டோ முருகன், கறிக்கடை பெருமாள், மாஜி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், மாஜி ஆர்.டி.ஓ., பாலகுருமூர்த்தி ஆகிய, 13 பேர் மீது எட்டு பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் எம்.ஏ.டி., கிருஷ்ணசாமி, கனகராஜ், ஆட்டோ முருகன், கறிக்கடை பெருமாள் ஆகியோர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியதை அடுத்து, அவரை நாளை சேலம் போலீஸில் ஆஜராகும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



மாஜி அமைச்சரை தவிர்த்து வழக்கில் தொடர்புடைய பாரப்பட்டி சுரேஷ்குமார், கௌசிக பூபதி, மாஜி இன்ஸ்பெக்டர் லெட்சுமணன், காங்கிரஸ் பிரமுகர் உலகநம்பி, கவுன்சிலர் ஜிம்மு ராமு, மகேந்திரன், சித்தானந்தம், மாஜி ஆர்.டி.ஓ., பாலகுருமூர்த்தி உட்பட எட்டு பேரை, கைது செய்யமுடியாமல் போலீஸார் தவிக்கின்றனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக, 12 தனிப்படையை அமைத்துள்ளதாக கமிஷ்னர் சொக்கலிங்கம் தெரிவித்தார். ஆனால், ஒரு குழு மட்டுமே அமைக்கப்பட்டு இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.



இந்த குழுவில் சட்டம் ஒழுங்கு போலீஸ் துணை கமிஷ்னர் பாஸ்கரன் தலைமையில், மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு மீட்பு குழு உதவி கமிஷ்னர் பிச்சை, டவுன் இன்ஸ்பெக்டர் அசோகன், இரண்டு எஸ்.எஸ்.ஐ.,க்கள், ஆறு ஆயுதப்படை போலீஸார் மட்டுமே இடம் பெற்று இருந்தனர். இந்தக் குழு சில தினங்களாக சென்னையில் முகாமிட்டும் மாஜி அமைச்சரை கைது செய்யாமல், உயர்நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி, நேற்று சேலம் திரும்பி உள்ளது.



இந்நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள எட்டு பேரை, கைது செய்ய மாநகர போலீஸ் சார்பில் எந்தக் குழுவும் வெளியூர் செல்லவில்லை. அதே நேரத்தில் ஆயுதப்படையில் இருந்து, ஒரே ஒரு அணி மட்டும் குற்றவாளிகளை தேடி வெளியூர் சென்றுள்ளது. இந்த அணியில் உள்ள முக்கிய அதிகாரிகள் வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருந்த போது அவரின் பாதுகாப்பு (எஸ்காடாக) அதிகாரியாக செயல்பட்டவர்கள் என்பதால் இந்த குழுவும் குற்றவாளிகளை கைது செய்யாது என்கின்றனர் சேலம் மாநகர போலீஸார்.



சேலம் மாநகரில் நேற்று காலையில் மேற் கொள்ளப்பட்ட ரோல் காலில் அனைத்து இன்ஸ்பெக்டர்களும் உயர் அதிகாரிகளும், நகரில் இருப்பதை உறுதி செய்தனர். இதனால், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள எட்டு குற்றவாளிகளும், தாமாக முன் வந்து நீதிமன்றங்களில் சரண் அடைய வேண்டும் அல்லது உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற வேண்டும். அதைத் தான் சேலம் மாநகர போலீஸ் அதிகாரிகளும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கு முன்போ, முன் ஜாமீன் பெறுவதற்கு முன் அவர்களை கைது செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. அப்படியே அவர்கள் கைது செய்தாலும், கணக்கு காட்டும் வகையில் முக்கிய பிரமுகர்களான பாரப்பட்டி சுரேஷ்குமார், கௌசிகபூபதி, மாஜி இன்ஸ்பெக்டர் லெட்சுமணன் ஆகியோரை தவிர்த்து, மற்றவர்கள் கைது செய்யப்படாலாம் என்கின்றனர் பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் உயர் அதிகாரிகள்.



-நமது சிறப்பு நிருபர்-







      Our Apps Available On




      Dinamalar

      Follow us