Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மருத்துவ கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க அதிரடி நடவடிக்கை

மருத்துவ கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க அதிரடி நடவடிக்கை

மருத்துவ கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க அதிரடி நடவடிக்கை

மருத்துவ கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க அதிரடி நடவடிக்கை

ADDED : ஜூலை 24, 2011 02:15 AM


Google News

சென்னை : தமிழக மருத்துவக் கல்லூரிகளில், ராகிங்கை தடுக்க, கடும் நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரி முதல்வர்களுக்கு, மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

ராகிங்கை தடுக்க, இந்திய மருத்துவக் கவுன்சில் கடும் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகளை, அரசு கல்லூரிகள் மட்டுமின்றி, தனியார் கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் கனகசபை, இது குறித்து கூறியதாவது: ராகிங் கொடுமையைத் தடுக்க, இந்திய மருத்துவக் கவுன்சில், கடும் விதிமுறைகளை உருவாக்கி, 2009ம் ஆண்டில் வெளியிட்டது. இதில், எந்தெந்த செயல்கள் எல்லாம் ராகிங் கொடுமைகளாகக் கருதப்படும், அவற்றுக்கு என்ன தண்டனை என தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை ஆவணமாக தயாரித்துள்ளோம். இதில், புதிதாக சேர்ந்துள்ள மாணவர்கள், தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் என, அனைவரிடமும் கையொப்பம் பெற்று, ராகிங் செய்ய மாட்டோம் என, உறுதிமொழியும் பெற்றுள்ளோம். இந்த ஆவணத்தில் மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோரும் கையெழுத்து போட்டு உறுதியளித்துள்ளனர்.

இது தவிர, ஆறு புதிய மாணவர்களுக்கு, ஒரு மூத்த மாணவர் என்ற அடிப்படையில், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். மூத்த மாணவரின் மொபைல் போன் எண், புதிய மாணவர்களிடம் இருக்கும். ராகிங் செய்தால் உடனடியாக அவரிடம் புகார் செய்யலாம். இது போன்ற மூன்று குழுக்களுக்கு, ஒரு விரிவுரையாளர் நியமிக்கப்படுவார்; 10 விரிவுரையாளருக்கு, ஒரு பேராசிரியர் நியமிக்கப்படுவார்.

மேலும், கல்லூரியில், ஒவ்வொரு துறைக்கும் ஒரு ராகிங் தடுப்புக் குழு அமைக்கப்படும். நூலகம், கேன்டீன், விளையாட்டு அரங்கம் ஆகிய இடங்களிலும் ராகிங் தடுப்பு குழுக்கள் அமைக்கப்படும். விடுதிகளில் புதிய மாணவர்கள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக, தங்க வைக்கப்படுவர். விடுதியிலும் ஆசிரியர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவர். இவற்றுக்கும் மேலாக, கல்லூரி, விடுதி வளாகங்களை பறக்கும் படை கண்காணித்துக் கொண்டே இருக்கும். கல்லூரியில் புகார் பெட்டியும் வைக்கப்பட்டிருக்கும். ராகிங் கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, வரும் 30ம் தேதி மனிதச் சங்கிலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கனகசபை கூறினார்.

டி-சர்ட், ஜீன்சுக்கு தடை : மருத்துவ மாணவ, மாணவியர், 'டி-சர்ட், ஜீன்ஸ் பேன்ட்' அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கு வரும்போது, கண்ணியக் குறைவான ஆடைகளை அணியக்கூடாது. மாணவியர், சுடிதார், புடவை போன்ற ஆடைகளை அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவர்களை, மக்கள் தெய்வத்துக்கு சமமாகப் பார்ப்பதால், கண்ணியமான முறையில் உடைகளை அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது என, முதல்வர் கனகசபை கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us