அரசு கேபிள் "டிவி' செயல்பாட்டுக்கு வருவது எப்போது?
அரசு கேபிள் "டிவி' செயல்பாட்டுக்கு வருவது எப்போது?
அரசு கேபிள் "டிவி' செயல்பாட்டுக்கு வருவது எப்போது?
ADDED : ஜூலை 24, 2011 11:10 PM
பொள்ளாச்சி : ''மாநிலம் முழுவதும் அரசு கேபிள் 'டிவி'க்கான கட்டுப்பாட்டு
மையம் அமைக்க இடம் தேர்வு செய்து, ஆலோசனை நடத்திய பின், இதை
செயல்படுத்துவதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்,'' என, அரசு கேபிள்
'டிவி' வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார். பொள்ளாச்சி பி.ஏ.பி.,
அலுவலகத்தில் கேபிள் 'டிவி' ஆபரேட்டர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம்
நடந்தது. பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமி வரவேற்றார். அரசு
கேபிள் 'டிவி' வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து பேசியதாவது:
பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, ஆனைமலை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய
பொள்ளாச்சி தாலுகாவில், 50 ஆயிரம் இணைப்புகள் உள்ளன. இதை, பல்வேறு
'நெட்வொர்க்' மூலம் 200 ஆபரேட்டர்கள் வழங்கி வருகின்றனர். இதற்காக,
வாடிக்கையாளர்களிடம் அந்தந்த பகுதியை பொறுத்து, குறைந்தபட்சம் 85 ரூபாய்
முதல், அதிகபட்சமாக 150 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இதில், உள்ளூர்
சேனல்கள் மட்டுமின்றி 'பே' சேனல்கள் என்ற கட்டண அடிப்படையிலான சேனல்களும்
வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. கேபிள் 'டிவி' ஆபரேட்டர்கள் ஒரு
இணைப்பிற்கு 35 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வசூலிப்பதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது, தமிழக அரசு அறிவித்துள்ள அரசு கேபிள் 'டிவி' திட்டத்தின் கீழ்
அனைத்து சேவைகளையும் ஒன்றிணைத்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு
பகுதியிலும் கேபிள் 'டிவி' ஆபரேட்டர்களின் எண்ணிக்கை, வாடிக்கையாளர்கள்
எண்ணிக்கை, வழங்கப்படும் சேவைகள் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது. ஒவ்வொரு
பகுதியிலும், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்க ஆய்வு
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும், மாவட்டந்தோறும் மையம்
அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பகுதியில் இரண்டு
இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், மக்களுக்கு சிறந்த முறையில் சேவை
வழங்க தேவையான இடம் தேர்வு செய்யப்படும். அனைத்து மாவட்டங்களிலும்
கலந்தாலோசனையும், இடம் தேர்வும் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசுக்கு
தெரிவித்தபின், அரசு கேபிள் டிவி செயல்படுத்துவது குறித்து முதல்வர்
அறிவிப்பார், என்றார்.


