நெடுஞ்சாலை ஆணையத்திற்கு புதிய தலைவர் நியமிக்க உத்தரவு
நெடுஞ்சாலை ஆணையத்திற்கு புதிய தலைவர் நியமிக்க உத்தரவு
நெடுஞ்சாலை ஆணையத்திற்கு புதிய தலைவர் நியமிக்க உத்தரவு
ADDED : ஜூலை 24, 2011 11:57 PM
புதுடில்லி : தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்துக்கு, மூன்று மாதங்களுக்குள், புதிய தலைவரை நியமிக்கும்படி, சாலைப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு, மத்திய அமைச்சரவை செயலகம் உத்தரவிட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் (என்.எச்.ஏ.ஐ.,) தலைவராக இருந்த பிரிஜேஸ்வர் சிங்கின் பதவிக்காலம், கடந்தாண்டு டிசம்பருடன் முடிவுக்கு வந்தது.
இவருக்குப் பதிலாக, புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, போக்குவரத்துச் செயலர் ஆர்.எஸ்.குஜ்ரால், கூடுதலாக, இந்தப் பதவியை கவனித்து வருகிறார். நெடுஞ்சாலைத் துறை ஆணையத்துக்கு, நிரந்தரத் தலைவர் இல்லாததால், நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய, சாலைப் பணிகள் தேக்கம் அடைந்ததாக, கவலை தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, தேசிய மேம்பாட்டு திட்டத்தின் கீழ், செயல்படுத்த வேண்டிய மூன்று லட்சம் கோடி ரூபாய் அளவிலான பணிகளில் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. கடந்த மாதம் நடந்த வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், பிரதமரும் இதுகுறித்து கவலை தெரிவித்தார். நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தினார்.இந்நிலையில், மத்திய அமைச்சரவைச் செயலகத்தில் இருந்து, மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு, ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்துக்கு, மூன்று மாதங்களுக்குள், முறையான புதிய தலைவரை நியமிக்கும்படி, தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைப் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள், இந்தத் தகவலை உறுதி செய்தனர்.