நிலம் கையகப்படுத்த புதிய சட்டம் தயார்:அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும்
நிலம் கையகப்படுத்த புதிய சட்டம் தயார்:அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும்
நிலம் கையகப்படுத்த புதிய சட்டம் தயார்:அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும்

இதுதொடர்பாக, சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள சக்சேனா கூறியதாவது:தேசிய ஆலோசனைக் குழுவினரின் பரிந்துரைகளுக்கும் மேலாக மேம்படுத்தப்பட்ட சில அம்சங்களும், வரைவு மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன.கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேசுடன் இது பற்றி விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அம்சங்களுக்கும், அவர் ஒப்புதல் தெரிவித்துள்ளார். புதிய மசோதா வற்புறுத்தலின்பேரில் இல்லாமல், அவசியத்தைக் கருதியே கொண்டுவரப்படுகிறது.நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக, நொய்டா உட்பட அனைத்து இடங்களிலும் விவசாயிகள் போராட்டம் மட்டும் நடத்தவில்லை. பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்துகின்றனர். அதன்படியே இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.நிலம் கையகப்படுத்தும் போது, அதன் உரிமையாளர்களின் 70 சதவீத ஒப்புதலைப் பெற்றால் போதும் என, முதலில் கூறியிருந்தோம். தற்போது இதனை 80 சதவீதமாக அதிகரித்துள்ளோம். எனினும், இது பற்றிய முடிவு மேற்கொள்ள வேண்டியது மாநில அரசின் பொறுப்பு.நிலத்தை கையகப்படுத்துவது மற்றும் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது என, இரண்டு பிரச்னைகளுக்கும் இந்த ஒரே மசோதாவில் தீர்வு காணப்பட்டுள்ளது. அதன்படி, அரசு மற்றும் தனியாரால் கையகப்படுத்தப்படும் நிலம், அதன் உரிமையாளரின் ஒரே வாழ்வாதாரமாக இருந்ததெனில், அவர்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் வீதம், 20 ஆண்டுகளுக்கு நிவாரண உதவி வழங்கப்படும்.
உரிமையாளரின் பாதுகாப்பு பற்றிய பிரச்னைகளுக்கும் சிறப்புக் கவனம் செலுத்தப்படும். இதைப் பின்பற்றி, கையகப்படுத்தப்படும் ஒவ்வொரு 100 ஏக்கர் நிலங்களுக்கும் ஏற்ப சாலை வசதி, மின்சாரம், குடியிருப்பு, விளையாட்டு மைதானங்கள் உட்பட, 26 அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.கையகப்படுத்தும் நிலம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குச் சொந்தமானதெனில், சிறப்பு முன்னேற்பாடுகள் செய்து தரப்படும். அவர்களுக்கு ஒரு ஏக்கர் நிலம், இழப்பீடாக வழங்கப்படும்.
விவசாயம் மட்டுமே இவர்களின் வாழ்வாதாரம் என்பதால், நிலம் கையகப்படுத்தும் முயற்சிகளை இந்த மக்கள் எதிர்க்கின்றனர். எனவே, நீராதாரம் உட்பட அரசு, தனியார் திட்டங்கள் அனைத்திற்கும் தாழ்த்தப்பட்ட இன மக்களின் நிலம் கையகப்படுத்தப்பட்டால், அவர்களுக்கு ஒரு ஏக்கர் நிலமும் வழங்க, முடிவு செய்துள்ளது. இந்த வரைவு மசோதா இந்த வாரத்தில் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் ஆலோசனைகள் பெறப்படும்.இவ்வாறு சக்சேனா கூறினார்.