மாஜி அமைச்சர் இன்று போலீசில் சரண்? முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
மாஜி அமைச்சர் இன்று போலீசில் சரண்? முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
மாஜி அமைச்சர் இன்று போலீசில் சரண்? முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
ADDED : ஜூலை 25, 2011 12:06 AM

சேலம் : சேலம், அங்கம்மாள் காலனி நில விவகார வழக்கு, பிரிமியர் ரோலர் மில் வழக்குகளில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், ஐகோர்ட் உத்தரவுப்படி, இன்று சேலம் மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு மீட்புக் குழு அலுவலகத்தில் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம், அங்கம்மாள் காலனி நில விவகாரம், ரோலர் மில் அபகரிப்பு புகார்கள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது, எட்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, சென்னை கோர்ட்டில் முன்ஜாமின் கோரினார். வழக்கை விசாரித்த ஐகோர்ட், வீரபாண்டி ஆறுமுகத்தை, இன்று (ஜூலை 25) காலை 10 மணிக்கு, சேலம் மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு மீட்புக் குழு முன், ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. அவர் ஆஜரானால், ஜூலை 27ம் தேதி மாலை 5 மணி வரை விசாரணை நடத்தி விட்டு, அன்றைய தினமே சேலம் ஐந்தாவது குற்றவியல் நடுவர் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்த வேண்டும் என, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அடுத்து, முன்னாள் அமைச்சர் இன்று, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் சரண் அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, சேலம் மாநகர போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம், சட்டம் - ஒழுங்கு துணை கமிஷனர் பாஸ்கரன் ஆகியோர், மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு மீட்புக் குழு அலுவலகத்தை, பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷன், மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தை சுற்றி, துணை கமிஷனர், மூன்று உதவி கமிஷனர்கள், ஆறு இன்ஸ்பெக்டர்கள், 15 எஸ்.ஐ.,க்கள் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், போலீஸ் ஸ்டேஷனுக்குள் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது வழக்கறிஞர்கள் இருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது. குறிப்பிட்ட எல்லையைக் கடந்து உள்ளே வர முயற்சி செய்பவர்களை கைது செய்யவும், போலீசார் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து, போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கத்திடம் கேட்டபோது, ''முன்னாள் அமைச்சர் சரணடையும் போது மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, நுண்ணறிவு பிரிவில் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் அல்லது சட்டம் - ஒழுங்கு துணை கமிஷனரிடம் கேளுங்கள்,'' என்றார்.


