வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன் விசாரணையில் போலீசார் அதிர்ச்சி
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன் விசாரணையில் போலீசார் அதிர்ச்சி
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன் விசாரணையில் போலீசார் அதிர்ச்சி
ADDED : ஜூலை 25, 2011 12:11 AM
சென்னை : எழும்பூர் ரயில் நிலையத்திற்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த
சிறுவன், பயன்படுத்திய மொபைல் போன் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மும்பையில் கடந்த 13ம் தேதி, மூன்று இடங்களில் குண்டு வெடித்தது. இந்தச்
சம்பவத்தின் போது, சென்னையிலும் போலீசார் பதற்றத்திற்குள்ளான சம்பவம் ஒன்று
நடந்தது. அதே நாளில், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மொபைல்போன்
மூலம், தொடர்பு கொண்ட மர்ம குரல், 'எழும்பூர் ரயில் நிலையத்தின் பல
இடங்களில் குண்டு வைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் வெடிக்கும்' என்று
கூறியது. இதையடுத்து, எழும்பூர் ரயில் நிலையத்தில் அன்று, ரயில்வே
போலீசார், உள்ளூர் போலீசார் கொண்ட குழு, மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள்
சகிதம் ஆஜராகி, முழுவதுமாக சோதனை நடத்தியது. அதில், வெடிகுண்டு மிரட்டல்
புரளி என்பது உறுதியானது. இருந்தாலும், மிரட்டல் விடுத்த நபரை எப்படியாவது
பிடிக்க வேண்டும் என்று, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் இயங்கி
வரும், சைபர் கிரைம் பிரிவினரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இது
தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படைப் போலீசார் விசாரணையில்,
சம்பந்தப்பட்ட மொபைல்போன் எண், மும்பையில் வாங்கப்பட்டது
கண்டுபிடிக்கப்பட்டது. அந்த எண், தமிழகத்திலும், புதுச்சேரியிலும்
பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மேலும், அந்த சிம்கார்டு
போலியான முகவரி கொடுத்து வாங்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதனால், உடனடியாக
மொபைல்போனை பயன்படுத்தியவர் யார் என்பதை அறிய முடியாமல் போனது. எனவே, அந்த
எண்ணிற்கு தொடர்பு கொண்ட மற்ற எண்கள், அந்த எண்ணில் இருந்து தொடர்பு
கொள்ளப்பட்ட எண்கள் குறித்த விசாரணையில் சைபர் கிரைம் போலீசார் இறங்கினர்.
அப்போது தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த எண்களுக்கான
சிம்கார்டுகள் அனைத்துமே, போலியான முகவரி கொடுத்து வாங்கப்பட்டிருந்தது.
இறுதியாக, மிரட்டல் விடுத்தவரை போலீசார் பல நாட்களாகத் தேடி, கடந்த இரண்டு
தினங்களுக்கு முன் நெருங்கிய போது, அடுத்த அதிர்ச்சி போலீசுக்கு
காத்திருந்தது. மிரட்டல் விடுத்த நபரின் வயது 17 என்பதும், அவர், 'கேர் ஆப்
பிளாட்பார்ம்' என்பதும் தான் அதிர்ச்சிக்குக் காரணம். ரயில் நிலைய
பிளாட்பாரம், சாலையோரத்தில் தங்கியிருக்கும் இவன், சந்தர்ப்பம் கிடைக்கும்
போது, அசந்தவர்கள் மொபைல்போன்களைத் திருடி, விற்பதை தொழிலாக
வைத்திருந்தான். கடந்த 13ம் தேதிக்கு முன், ஒரு நாள் சென்ட்ரல் ரயில்
நிலையத்தில் படுத்திருந்த போது, ரயில்வே போலீசார் விரட்ட, அங்கு புறப்படத்
தயாராக இருந்த ரயிலில் ஏறி தப்பினான். மும்பை சென்ற அந்த ரயிலில் ஏறிய
அவன், மும்பையில் இந்த மொபைல்போனை திருடி, அதில் இருந்த சிம்கார்டை,
சென்னைக்கு வந்த பின் மற்றொரு மொபைல் போனில் போட்டு, வெடிகுண்டு மிரட்டல்
விடுத்ததாக கூறப்படுகிறது. இந்தச் சிறுவனை பிடித்த சைபர் கிரைம் தனிப்படை
போலீசார், சிறுவனை எழும்பூர் போலீசில் ஒப்படைத்துள்ளதாகத் தெரிகிறது.
தற்போது எழும்பூர் போலீசார், மிரட்டலுக்கு பயன்படுத்தப்பட்ட சிம்கார்டு
யாருடையது? போலியான முகவரி மூலம் வாங்கப்பட்ட சிம்கார்டுக்குரிய எண்களில்
மட்டும் அந்தத் தொடர்புகள் இருப்பதற்கான காரணம் என்ன? இந்தச் சிறுவன் யார்?
இவனின் பின்னணியில் யார் இருக்கின்றனர்? இவன் சொல்வது முற்றிலும் உண்மையான
தகவல்களா என்பது தொடர்பாக, தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.