/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/உடுமலையில் தொழிலாளர் தட்டுப்பாடு:நாற்றங்காலில் வீணாகும் நெல் நாற்றுகள்உடுமலையில் தொழிலாளர் தட்டுப்பாடு:நாற்றங்காலில் வீணாகும் நெல் நாற்றுகள்
உடுமலையில் தொழிலாளர் தட்டுப்பாடு:நாற்றங்காலில் வீணாகும் நெல் நாற்றுகள்
உடுமலையில் தொழிலாளர் தட்டுப்பாடு:நாற்றங்காலில் வீணாகும் நெல் நாற்றுகள்
உடுமலையில் தொழிலாளர் தட்டுப்பாடு:நாற்றங்காலில் வீணாகும் நெல் நாற்றுகள்
ADDED : ஜூலை 25, 2011 09:15 PM
உடுமலை : தொழிலாளர் தட்டுப்பாட்டால், நடவு பணியை மேற்கொள்ள முடியாமல் நெல் நாற்றுகள் நாற்றாங்காலில் வீணாகி வருகின்றன.
உடுமலை அருகே கல்லாபுரம், பூச்சிமேடு, மீன் பண்ணை, பூளவாடிபுதூர், வேல்நகர், ருத்ராபாளையம் ஆகிய பகுதிகள் அமராவதி அணை பழைய ஆயக்கட்டு பாசனத்தில் பாசன வசதி பெறுகின்றன. இப்பகுதிகளில் ஆண்டுக்கு இரண்டு போகம் நெல் பயிரிடப்படுகிறது. நடப்பு போகத்தில் நெல் நடவு பணியை மேற்கொள்ள அமராவதி அணையில் இருந்து கல்லாபுரம் வாய்க்காலுக்கு கடந்த ஜூன் 19ல் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதையடுத்து, நடவு பணிக்காக விவசாயிகள் நாற்றாங்கால் அமைத்தனர். குண்டு ரக விதை நெல் 25 ரூபாய் என்ற விலையில் நாற்றாங்கால், உழவு, வரப்பு கட்டுதல் போன்ற பணிகளுக்கு, ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகள் செலவிட்டுள்ளனர். ஜூலை இரண்டாவது வாரத்தில் நெல் நடவு பணியை மேற்கொண்டால் மட்டுமே பருவ நிலை மற்றும் அணையின் நீர் இருப்பு ஆகியவை சாகுபடிக்கு சாதகமாக அமைந்து போதிய விளைச்சல் கிடைக்கும். இந்நிலையில், கல்லாபுரம் சுற்றுப்பகுதிகளில் நிலவும் தொழிலாளர் தட்டுப்பாட்டால் நெல் நடவு பணி முழுவதுமாக ஸ்தம்பித்துள்ளது.நாற்றாங்காலில் உள்ள நெல் நாற்றுகளை குறித்த நேரத்தில் பிடுங்கி விளைநிலத்தில் நடவு செய்யாவிட்டால், அவை முழுவதுமாக வீணாகும் நிலை ஏற்படும். நாற்று விட்டு 40 நாட்களுக்கு மேலாகியுள்ளதால், அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை செலவிட்டு தொழிலாளர் பற்றாக்குறையால் நெல் சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதியில் மட்டும் 2,600 ஏக்கரில் நெல் நடவு பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. திருந்திய நெல் சாகுபடிக்காக வேளாண் துறையினர் இப்பகுதியில் எவ்வித விழிப்புணர்வு பணிகளையும் போதுமான அளவு மேற்கொள்ளவில்லை. மேலும், இப்பகுதியில் 2 முதல் 3 ஏக்கர் வரை மட்டும் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் அதிகளவு உள்ளனர். இதனால், இயந்திரங்களை பயன்படுத்தி நெல் நாற்று நடவு பணியை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. தேவையான இயந்திரங்களும் இப்பகுதியில் கிடைப்பதில்லை. மாவட்ட நிர்வாகத்திற்கு கல்லாபுரம் விவசாயிகள் சார்பில் அனுப்பியுள்ள மனுவில், 'வேலை உறுதியளிப்பு திட்டத்துக்கு அதிகளவு தொழிலாளர்கள் செல்வதால் விவசாய சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே செய்த வேலைகளை திருப்பி செய்தல் போன்ற நடவடிக்கைகளால் மனித உழைப்பு வீணாகிறது. மாவட்டத்தின் முக்கிய நெல் உற்பத்தி மையமான கல்லாபுரத்தில் நெல் நடவு பணிகளுக்கு தொழிலாளர்கள் கிடைக்கும் வகையில், வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை அளிக்க வேண்டும் அல்லது திட்ட தொழிலாளர்களை விவசாய சாகுபடி பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,' என குறிப்பிடப்பட்டுள்ளது.