/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தென்னையில் ஈரியோஃபைட் நோய் தாக்குதலால் உற்பத்தி பாதிப்பு: கிருஷ்ணகிரி விவசாயிகள் கலக்கம்தென்னையில் ஈரியோஃபைட் நோய் தாக்குதலால் உற்பத்தி பாதிப்பு: கிருஷ்ணகிரி விவசாயிகள் கலக்கம்
தென்னையில் ஈரியோஃபைட் நோய் தாக்குதலால் உற்பத்தி பாதிப்பு: கிருஷ்ணகிரி விவசாயிகள் கலக்கம்
தென்னையில் ஈரியோஃபைட் நோய் தாக்குதலால் உற்பத்தி பாதிப்பு: கிருஷ்ணகிரி விவசாயிகள் கலக்கம்
தென்னையில் ஈரியோஃபைட் நோய் தாக்குதலால் உற்பத்தி பாதிப்பு: கிருஷ்ணகிரி விவசாயிகள் கலக்கம்
ADDED : ஜூலை 28, 2011 01:55 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சுற்றுவட்டார பகுதியில் நிலவும் வறட்சி மற்றும் ஈரியோஃபைட் நோய் தாக்குதல் காரணமாக தென்னை மரங்களில் தேங்காய் சிறுத்து உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தேங்காய் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்று படுகை பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பாரூர், நெடுங்கல், மருதேரி, அரசம்பட்டி, போச்சம்பள்ளி, மத்தூர், பர்கூர் ஆகிய பகுதி உள்ளிட்ட மாவட்டத்தில் மொத்தம் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. மாவட்டத்தில் தென்னை அதிகம் விளையும் பகுதிகளில் தேங்காய் மொத்த மண்டிகள் செயல்பட்டு வருகிறது. இதில் போச்சம்பள்ளி, மத்தூர், அரசம்பட்டி, மருதேரி ஆகிய பகுதிகளில் உள்ள மண்டிகளில் இருந்து சென்னை மற்றும் உள்ளூர் தேவைக்கு மிக அதிக அளவில் தேங்காய்கள் விற்பனைக்கு செல்கிறது. தற்போது, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் உள்ள உழவர் சந்தைக்கும் இப்பகுதிகளில் இருந்து அதிக அளவில் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மாவட்டத்தில் உற்பத்தியாகும் தேங்காய்கள், ஆந்திரா மாநிலம் திருப்பதி, காளஸ்தி, கர்நாடகா மாநிலம் பெங்களூர், மற்றும் குஜராத், டில்லி, மும்பை ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கடந்த ஆண்டில் ஓரளவுக்கு மழை பெய்ததால் தேங்காய் உற்பத்தி இரட்டிப்படைந்து அதிக விளைச்சலை கொடுத்தது. ஆனால் அப்போதும் கிருஷ்ணகிரி மற்றும் பர்கூர் பகுதியில் தென்னையில் ஈரியோஃபைட் நோயின் தாக்குதல் அதிகம் இருந்ததால் தேங்காய் மிகவும் சிறுத்து போனது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்ட தேங்காய்க்கு வெளி மார்க்கெட்டில் வரவேற்பு குறைந்தது. இதனால் விலை வீழ்ச்சி ஏற்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மற்றும் ஜூலை வரையில் பர்கூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் விளையும் தேங்காயில் 70 சதவீதத்துக்கு மேல் குஜராத் மாநிலத்துக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். இந்த ஆண்டு பர்கூர் பகுதியில் போதுமான மழை இல்லாத காரணத்தாலும், ஈரியோஃபைட் நோய் தாக்குதல் காரணமாகவும் தேய்காய் விளைச்சல் பாதிப்படைந்தது. மேலும், வறட்சி காரணமாக தென்னை மரங்கள் குருத்து வரை பட்டைகள் சாய்ந்து காய்ந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெளி மாநில மார்க்கெட்டில் பர்கூர் பகுதியில் விலையும் தேங்காய் விலை கடும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரை ஒரு தேங்காய் 3 ரூபாயில் இருந்து 6 ரூபாய் வரை விற்பனையானது. இந்த ஆண்டும் ஜனவரியிலிருந்து மே வரை ஒரு தேங்காய் 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விற்பனையானது. ஆனால் ஜூன் மாத இறுதியில் தேங்காய் விலையில் சரிவு ஏற்பட்டது. தேங்காய்கள் தண்ணீர் இன்றியும் நோய் தாக்கியும் சிறுத்ததாலும், புதுச்சேரி மற்றும் பொள்ளாச்சியில் இருந்து பெரிய தேங்காய்கள் வரவாலும் பர்கூர் பகுதி தேங்காய்க்கு வெளி மாநில மார்க்கெட்டில் வரவேற்பு குறைந்து, தற்போது ஒரு தேங்காய் 75 பைசாவில் இருந்து, 3 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. பர்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகளும் வியாபாரிகளும் தேங்காய்களை மண்டிகளில் தேக்கி வைத்துள்ளனர். மேலும், ஆந்திரா மாநிலத்தில் இந்தாண்டும் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளதால் அங்கும் தேங்காய் அனுப்பப்படுவது தடைபட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மாவட்டத்தில் நிலவிய கடும் வறட்சியால் தென்னை விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர். அப்போது ஏற்பட்ட வறட்சியால் ஏராளமான தென்னை மரங்கள் காய்ந்து போனது. இந்த ஆண்டு சராசரி மழை பெய்த நிலையில் பர்கூர் பகுதியில் ஏற்பட்ட வறட்சி மற்றும் ஈரியோஃபைட் நோய் தாக்குதலால் தேங்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


