/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தமிழர் நீதிக்கட்சி தலைவரிடம் போலீஸ் விசாரணைதமிழர் நீதிக்கட்சி தலைவரிடம் போலீஸ் விசாரணை
தமிழர் நீதிக்கட்சி தலைவரிடம் போலீஸ் விசாரணை
தமிழர் நீதிக்கட்சி தலைவரிடம் போலீஸ் விசாரணை
தமிழர் நீதிக்கட்சி தலைவரிடம் போலீஸ் விசாரணை
ADDED : ஜூலை 28, 2011 01:56 AM
ஓசூர்: தமிழகத்தில், 27 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட, தமிழர் நீதிக்கட்சி தலைவர் சுப இளவரசனிடம், திருட்டு காரை வாங்கியது தொடர்பாக, ஓசூர் தனிப்படை போலீஸார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அவரது கூட்டாளிகளுக்கும் போலீஸார் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம் கோ.வல்லம் பகுதியை சேர்ந்தவர் சுப இளவரசன். இவர் மீது கடந்த காலத்தில் கடலூர் மாவட்டத்தில் தண்டாவளத்தை வெடிவைத்து தகர்த்தது, பல்வேறு இடங்களில் டிரான்ஃபார்மர், மொபைல்ஃபோன் டவர், போலீஸ் ஸ்டேஷன் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட, 27 வழக்குகள் உள்ளன. கடந்த 2004ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் வீரப்பனுக்கு வெடிகுண்டுகள் சப்ளை செய்ததாக அப்போதைய, சேலம் மாவட்ட எஸ்.பி., பொன்மாணிக்கவேல் மேட்டூர் அடுத்த கொளத்தூரில் வெடிகுண்டுகளுடன் சுப.இளவரசனை கைது செய்தார். தி.மு.க., ஆட்சியில் சுதந்திரமாக நடமாடிய சுப இளவரசன் தீவிரவாத பாதையில் இருந்து மாறி தமிழர் நீதிக்கட்சி என்ற அமைப்பை நடத்தி வந்தார். தொடர்ந்து நீதிமன்றகளில் நடக்கும் பல்வேறு வழக்குகளிலும் ஆஜராகி வருகிறார். ஓசூர் ஜி.கே.டி., நகரை சேர்ந்த ஜாய் கிரண், இவரது சொகுசு கார் சில மாதங்களுக்கு முன் திருடு போனது. இது குறித்து அவர் ஓசூர் ஹட்கோ போலீஸில் புகார் செய்தார். போலீஸார் மாயமான காரை தேடிவந்தனர். சென்னை அரும்பாக்கத்தில், ஓசூரில் மாயமான அந்த கார் அனாதையாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காரை திருடிய கும்பல், சுபஇளவரசனிடம் விற்றதாக போலீஸாரிடம் வாக்கு மூலம் அளித்தனர். அதனால் கார் திருட்டு கும்பல் நெட்வொர்க்கை பிடிக்க போலீஸார், சுப இளவரசனை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பினர். ஓசூர் ஹட்கோ போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் இரவு ஆஜரான சுப இரவரசனிடம் மூன்று மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தினர். கூடுதல் எஸ்.பி., செந்தில்குமார், ஏ.எஸ்.பி., ரம்யா பாரதி, இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ., ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர்.
நேற்று காலை விசாரணையை முடித்ததோடு, கூப்பிடும் நேரத்துக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அவரை அனுப்பினர். அடுத்தக்கட்டமாக சுப இளவரசனின் கூட்டாளி பாக்கியராஜ் உள்ளிட்ட சிலரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஓசூர் ஹட்கோ போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர். சாதாரண கார் திருட்டு வழக்குக்கு தனிப்படை போலீஸார், அதிக முக்கியத்துவம் கொடுத்து தமிழர் நீதிக்கட்சி நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தாக ஆஜராக உள்ள பாக்கியராஜ், வீரப்பனால் கடத்தி கொலை செய்யப்பட்ட கர்நாடகா முன்னாள் அமைச்சர் நாகப்பன் கடத்தல் வழக்கில் தொடர்புடைவர் ஆவார். ஓசூர் ஏ.எஸ்.பி., ரம்யா பாரதி கூறுகையில், ''கார் திருட்டு வழக்கு தொடர்பாக தான் சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கிறோம், '' என்றார்.


