ADDED : ஜூலை 28, 2011 09:10 PM
அவிநாசி : திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் லாரி, தங்க நகைகளை திருடிய கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.பெருமாநல்லூர் - குன்னத்தூர் ரோட்டில் கடந்த 2010 அக்., 21ல் நூல் லோடுடன் வந்த லாரியை மறித்த ஆறு பேர் கொண்ட கும்பல், டிரைவரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி, 165 பண்டல் நூல் திருடிச் சென்றனர்.
கடந்த மார்ச் முதல் தேதி, வாரணாசிபாளையம் தேவா காட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த உண்ணாத்தாளிடம், பைக்கில் வந்த இருவர் மூன்று பவுன் செயினை பறித்துச் சென்றனர். அதே மாதம் 4ம் தேதி, வள்ளிபுரம் மளிகைக்கடையில் இருந்த நாகமணியிடம், பைக்கில் வந்தவர்கள் மூன்று பவுன் செயினை பறித்துச் சென்றனர். இவ்வழக்குகளில் தொடர்புடைய திருடர்களை பிடிக்க, டி.எஸ்.பி., பழனிசாமி தலைமையில், இன்ஸ்பெக்டர் மணிமொழி, எஸ்.ஐ.,க்கள் வேலுசாமி, வாசு, விஜயமோகன் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படையினர், கோவை மற்றும் கேரள மாநிலத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். நேற்று முன்தினம் மதியம் நியூ திருப்பூர் அருகே பெருமாநல்லூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு ஒரு லாரி, கார் மற்றும் பைக் வைத்திருந்த மூன்று பேர் நீண்ட நேரமாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். போலீசார், அம்மூவரிடமும் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் லாரி, கார்களை திருடியது தெரிந்தது. தொடர் விசாரணையில், கேரள மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த நாகேந்திரன் (37), இடுக்கியை சேர்ந்த ராகுல் (26), அஜோமன் ஜார்ஜ் (22) ஆகியோர் என்பதும், பெருமாநல்லூர், ஆலுவாவில் லாரி, கார், பைக் திருடியதும் தெரிந்தது. அவர்களிடம் இருந்து 2 லாரி, 2 கார், பைக், 6 பவுன் நகை ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.12 லட்சம். எஸ்.பி., பாலகிருஷ்ணன் கூறுகையில், ''பெருமாநல்லூரில் லாரி திருடிய கும்பலை கைது செய்துள்ளோம். இம்மூவருக்கும் கேரளாவில் உள்ள பல கும்பலுக்கு தொடர்புள்ளது. இவர்கள் பெரும்பாலும் ரப்பர், ஸ்பிரிட், நூல் ஆகியவற்றை திருடுவர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை தேடுகிறோம்,'' என்றார்.தனிப்படை போலீசாரை, ஐ.ஜி., டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி., ஆகியோர் பாராட்டினர்.


