நெல்லை மேயர் ஊழலை கண்டித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
நெல்லை மேயர் ஊழலை கண்டித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
நெல்லை மேயர் ஊழலை கண்டித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு

திருநெல்வேலி : நெல்லை மேயரின் ஊழல்களை கண்டித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
முன்னாள் முதல்வர் படங்களை உங்கள் செலவிலேயே வைத்துக் கொள்ளுங்கள் என, மேயர் சுப்பிரமணியன் கூறினார். அதனடிப்படையில், நேற்று, அ.தி.மு.க., கவுன்சிலர்கள், முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., படங்களை கொண்டுவந்து மேயர் முன்னிலையில் சுவரில் மாட்டினர்.
அப்போது ஒரு தி.மு.க.,கவுன்சிலர்,''முன்னாள் முதல்வர் என்றால், ஜானகி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது படங்களை ஏன் அ.தி.மு.க.,வினர் கொண்டு வரவில்லை,'' என கேட்டார்.
நெல்லை கலெக்டர் நடராஜன், மாநகராட்சியின் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்வதற்காக இதுவரை வழங்கப்பட்ட 35 லட்சம் லிட்டர் தண்ணீருடன், மேலும் 70 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க போர்க்கால நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஆனால், நீங்கள் கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் அத்தகைய முயற்சியில் ஏன் இறங்கவில்லை என, மார்க்சிஸ்ட் கவுன்சிலர் தியாகராஜன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மேயர் உள்ளிட்ட தி.மு.க.,கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களை கலந்தாலோசிக்காமலேயே கலெக்டர் இவ்வாறு தண்ணீர் வழங்கியுள்ளது, 'கண்டனத்திற்குரியது' என தெரிவித்தனர்.
அ.தி.மு.க.,கவுன்சிலர் சுதா.பரமசிவன், கடந்த ஐந்து ஆண்டுகளாக குடிநீர், சுகாதாரம், அடிப்படை வசதிகளுக்கு நடவடிக்கை எடுக்காத தி.மு.க.,மேயர், தற்போதைய கலெக்டர் எடுத்த நடவடிக்கையை குறைசொல்வது ஏற்புடையதல்ல. எந்த பணிகளையும் செய்யாத மேயரை கண்டித்து அ.தி.மு.க., உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு, வெளியேறினர்.
வெளியே நிருபர்களிடம் பேசிய அ.தி.மு.க.,கவுன்சிலர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் நெல்லை மாநகராட்சியில் வண்ணார்பேட்டையில் கிழக்கு மேற்குமாக புதிய மேம்பாலம் அமைக்க ஆய்வு நடந்தது. ஆனால், ஒரு பெரிய நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு பாலத்தின் திசையையே வடக்கு தெற்காக திருப்பிவிட்டார். இதில் பல கோடி ஊழல் நடந்துள்ளது. எனவே, அவரது ஊழலை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம், என தெரிவித்தனர்.


