சாய ஆலை பிரச்னை: குஜராத்துக்கு தமிழக குழு பயணம்
சாய ஆலை பிரச்னை: குஜராத்துக்கு தமிழக குழு பயணம்
சாய ஆலை பிரச்னை: குஜராத்துக்கு தமிழக குழு பயணம்
ADDED : ஜூலை 31, 2011 01:02 AM
சென்னை : சாய ஆலை பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் தலைமையில், தமிழக அரசின் சிறப்புக் குழு, குஜராத்துக்குச் சென்றுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: குஜராத்தில், பாரூச் என்ற இடத்தில், 20 சதவீத கழிவுநீரை, நானோ தொழில்நுட்பத்தில் ஏழு சதமாகக் குறைத்து, அதிலுள்ள நீரை ஆவியாக்கிப் பின், குளிர்வித்து, அதில் கிடைக்கும் உப்பையும், நீரையும் மீண்டும் தொழிற்சாலையில் பயன்படுத்துகின்றனர்.
இந்தத் தொழில்நுட்பத்தை, திருப்பூரில் கடைபிடிக்க முடியுமா என, நேரடி ஆய்வு நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதன்படி, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சங்கர் தலைமையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ராமச்சந்திரன், சுற்றுச்சூழல் இணை தலைமைப் பொறியாளர் குமார், கைத்தறி மற்றும் துணி நூல் துறை இணை இயக்குனர் நாகராஜ், திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர் சங்க இணைச் செயலர் மாதேஸ்வரன், செயற்குழு உறுப்பினர் பத்மநாபன் மற்றும் அங்கேரிப்பாளையம், பொது சுத்திகரிப்பு நிலைய இயக்குனர் பாஸ்கரன் ஆகியோர் குஜராத் சென்றுள்ளனர். அங்கு, பாரூச் பகுதியில் உள்ள, பிர்லா செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ் நிறுவன பூஜ்ய நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பார்வையிடுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


