அப்பாவி தமிழ் மக்களை கொன்றது உண்மைதான்: இலங்கை
அப்பாவி தமிழ் மக்களை கொன்றது உண்மைதான்: இலங்கை
அப்பாவி தமிழ் மக்களை கொன்றது உண்மைதான்: இலங்கை

இலங்கையில், 2009ல் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின் போது, அப்பாவி மக்கள் மீது ராணுவம் கொத்துக் குண்டுகள் வீசியது.
உலக நாடுகள் குற்றச்சாட்டு:இதுகுறித்து உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கை அரசின் மீது குற்றம்சாட்டி வருகின்றன. போரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை, ஐ.நா.,வின் போர்க் குற்ற அறிக்கையும் உறுதிப்படுத்தியிருந்தது. போரின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில், 75 ஆயிரத்தில் இருந்து மூன்று லட்சத்து ஐந்தாயிரம் பேர் வரை இருந்திருக்கலாம் என, ஐ.நா., அறிக்கை கூறியுள்ளது.போரில் மனித உரிமை மீறல் நடந்ததை, பிரிட்டனில் இருந்து வெளிவரும் 'சேனல் 4' ஆதாரப்பூர்வமான வீடியோக்கள் மூலம் நிரூபித்தது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு, இதுநாள் வரை மறுத்துவந்தது.
இலங்கை ஒப்புதல் அறிக்கை:இந்நிலையில், நேற்று இலங்கை அரசு வெளியிட்ட 'மனிதாபிமான நடவடிக்கைகள்: உண்மை பகுப்பாய்வுகள்' என்ற தலைப்பிலான அறிக்கையில், தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளது.
இலங்கை ராணுவச் செயலரும், அதிபர் ராஜபக்ஷேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்ஷே நேற்று வெளியிட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பாதுகாப்பு வளையப் பகுதிகளை உருவாக்குவதன் மூலம், போர்ப் பகுதிகளில் இருந்த மக்களைப் பாதுகாக்க, இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. போரின் போது மக்களில் ஒருவர் கூட கொல்லப்படக் கூடாது என்பது தான், அரசின் கொள்கை முடிவு.இது பல்வேறு பயிற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் இலங்கை ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி, போர்ப் பகுதிகளில் அப்பாவி மக்கள் மீதான தாக்குதலைத் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தபய விளக்கம்: ஐ.நா.,வின் இலங்கை போர்க்குற்ற அறிக்கையில், 'சரண் அடைய வந்த விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், அமைதிப் பிரிவுச் செயலர் புலித்தேவன் இருவரையும், இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றதாக' தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கை அரசின் தற்போதைய அறிக்கையை வெளியிட்டுப் பேசிய கோத்தபய இதுகுறித்துக் கூறியதாவது:உறுதிமொழி அளிக்கப்பட்டனவோ இல்லையோ, 11 ஆயிரம் விடுதலைப் புலிகள், சரண் அடைந்தனர். அவர்கள் சமூகத்தோடு மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர். ஆனால், நடேசனும், புலித்தேவனும் சரண் அடையப் போகின்றனர் என்பது பற்றி, உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு யாரும் தெரிவிக்கவில்லை.


