அரசு சார்பில் மீன் விற்பனை நிலையங்கள்
அரசு சார்பில் மீன் விற்பனை நிலையங்கள்
அரசு சார்பில் மீன் விற்பனை நிலையங்கள்
ADDED : ஆக 03, 2011 01:00 AM
ராமநாதபுரம் : அரசு சார்பில் நீர்வள நிலவளத்திட்டத்தின் கீழ், நவீன மீன் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
நீர்வள நிலவளத்திட்டத்தின் கீழ் கூட்டின மீன் வளர்ப்பு முறையில் கட்லா, ரோகு, மிர்கால், சாதாக்கெண்டை, புல்கெண்டை, வெள்ளிக்கெண்டை போன்றவைகளுடன் இறாலும் சேர்ந்து வளர்க்கப்படுகிறது. இதற்காக மீன் துறையின் மூலம் கடன் உதவி வழங்கப்படுகிறது. வேளாண் பொறியியல் துறை மூலம் பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டு மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த மீன்கள் வளர்த்த பின்பு அவற்றை விற்பதற்கு தேவையான சந்தைகள் இல்லாமல் இருந்தது. இதனால் இதை வளர்ப்பதற்கோ, வாங்குவதற்கோ, யாரும் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் அரசு சார்பில் நீர்வள நில வள திட்டத்தின் கீழ் புதிய நவீன மீன் விற்பனை நிலையங்கள், மாவட்டம்தோறும் அமைக்கப்பட்டு வருகிறது.
அதிகாரி ஒருவர் கூறியதாவது: கண்மாய் மீன்கள் எனப்படும் உள்நாட்டு மீன்கள் விற்பனை செய்வதற்கு ஏற்ற இடம் இல்லாமல் இருந்தது. அரசு சார்பில் புதிய நவீன மீன் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் கண்மாய் மீன்கள் வராத பட்சத்தில், கடல் மீன்களும் வாங்கி விற்கப்படும். இதன் மூலம் நியாயமான விலையில் மக்களுக்கு மீன்கள் கிடைக்கும். இங்கு மீன்களை குளிர்பதன பெட்டியில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் விற்பனை நிலையம் பரமக்குடியில், இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. நாள்பட்ட மீன்கள் விற்கப்படமாட்டாது, என்றார்.


