PUBLISHED ON : ஆக 07, 2011 12:00 AM

மாஜி எம்.எல்.ஏ., கைது எதிரொலி... கூட்டாளிகள், 'எஸ்கேப்!'
''கட்சிக்கு ஒத்து வராதவங்களை எல்லாம் மாத்திட்டாங்க பா...!'' என, விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''ஆளுங்கட்சி விவகாரமா ஓய்...'' என்று கேட்டார் குப்பண்ணா.
''ஆமாம் பா... கோவை மாவட்டத்துல, கட்சியினருக்கு ஒத்து வராத மக்கள் நலப்பணியாளர்களை எல்லாம் வேற, வேற ஊர்களுக்கு மாத்திருக்காங்க... கட்சிக்காரங்க சொன்னதைக் கேட்டு, ஆளுங்கட்சியைச் சேர்ந்த ரெண்டு எம்.எல்.ஏ.,க்கள் தான், இந்த வேலையை செஞ்சிருக்காங்க...
''தேர்தல்ல, வேற கட்சிக்காரங்களுக்கு வேலை பார்த்தாங்கன்னு சொல்லி, அதிரடியா வெவ்வேற ஊர்களுக்கு மாத்திருக்காங்க... இதுல வேடிக்கை என்னன்னா, தங்களுக்கு ஆகாத சொந்தக் கட்சியைச் சேர்ந்தவங்களையும் கும்பலோட கும்பலா மாத்திட்டாங்களாம்... இதனால, ஆளுங்கட்சியைச் சேர்ந்த மக்கள் நலப் பணியாளர்கள் புலம்பிட்டு இருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பதவிக்கு, 400 பேர் மோதுனாங்களாம் வே...'' என, அடுத்த மேட்டருக்குள் நுழைந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலர், பொதுச் செயலர் மற்றும் மாநில பொறுப்பாளர்கள், தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட பல பதவிகளுக்கு, 'இன்டர்வியூ' நடத்தித் தான் நிர்வாகிகளை தேர்வு செய்யறாங்க வே...
''இந்தியா முழுவதும் இருந்து 400 பேரும், தமிழகத்துல இருந்து கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர் ரஞ்சன்குமார், வாசன் ஆதரவாளர் புரு÷ஷாத்தமன் உட்பட 20 பேர் கலந்துகிட்டாவ... சிலருக்கு மொழிப் பிரச்னை இருந்ததால, பதில் சொல்ல முடியாம திணறிட்டாங்களாம் வே...'' என்று நடந்த சம்பவத்தை விளக்கினார் அண்ணாச்சி.
''முன்னாள் எம்.எல்.ஏ., சிக்கிட்டதால, அவரோட கூட்டாளிகள் பயந்து போய் வெளியூர்களுக்கு பறந்துட்டாங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.
''தினமும் நிறைய பேர் கைதாகறா... நீர், யாரைப் பத்தி சொல்றீர் ஓய்...'' என்று கேட்டார் குப்பண்ணா.
''சென்னையைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதன், நில மோசடி வழக்குல சிக்கி ஜெயில்ல இருக்காருங்க... இவர் மேலேயும், கூட்டாளிகள் மேலேயும் புதுசு புதுசா புகார்கள் வந்துட்டு இருக்குங்க... ஆவடி பக்கத்துல மோரை கிராமத்துல இருக்கற ஜமீன் பரம்பரை சொத்துக்களை எல்லாம் வளைச்சு பிளாட் போட்டு வித்ததுல, எக்கச்சக்கமா சம்பாதிச்சிருக்காங்க...
''இதுல, தி.மு.க., தலைமைக்கு நெருக்கமான ஒருத்தர், மகனை வைச்சு சினிமா படம் எடுத்திருக்கார்... சமீபத்துல, ரெண்டு படங்களுக்கு பூஜையும் போட்டுருக்காருங்க... இப்ப, ரங்கநாதன் கைதால, எல்லாரும் வெளியூர்களுக்கு, 'எஸ்கேப்' ஆகிட்டாங்க...'' என்றபோது, பாக்கெட்டில் சிணுங்கிய மொபைலை எடுத்து, 'சையது... நாளைக்கு சந்திக்கலாம்ங்க...' எனக் கூறிவிட்டு, அந்தோணிசாமி நடையைக் கட்ட, மற்ற பெரியவர்களும் கிளம்பினர்.
வசூலுக்காக போடப்பட்ட இடமாற்றல் உத்தரவுகள்...!
''வசூலுக்காகவே, 40 பேருக்கு இடமாற்றல் உத்தரவு கொடுத்திருக்காங்க...!'' என சொல்லிக் கொண்டே பெஞ்சில் வந்தமர்ந்தார் அந்தோணிசாமி.
''எந்த துறையிலங்க... வசூல் எவ்வளவு வே...'' எனக் கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
''தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பா தமிழகம் முழுக்க ஓட்டல் நடத்தறாங்க... இதுல, மேனேஜர்களா இருக்கற, 40 பேரை, திடீரென இடமாற்றம் செஞ்சுட்டாங்க... பெரிய ஓட்டல்கள்ல மேனேஜரா இருந்தவங்களை சிறிய ஓட்டல்களுக்கும், சிறிய ஓட்டல்கள்ல மேனேஜரா இருந்தவங்களை பெரிய ஓட்டல்களுக்கும் இடமாற்றம் செஞ்சுட்டாங்க...
''ஒரே நேரத்துல, 40 பேரை இடமாற்றியதால, இந்தத் துறையில பணியாற்றும் எல்லாரும் அதிர்ந்து போயிருக்காங்க... இடமாற்றத்துல சிக்கியவங்களை மீண்டும் இருந்த இடத்துக்கு அல்லது விரும்பற இடத்துக்கு மாற்ற, கீழ் மட்டத்துல பணிபுரியும் ஒருத்தர், இடைத்தரகரா செயல்பட ஆரம்பிச்சுட்டாருங்க... தலைக்கு ஒன்றரை லட்ச ரூபாய் வசூல் பண்றார்...'' என்றார் அந்தோணிசாமி.
''கிலோ அஞ்சு ரூபாய்க்கு வெளிமார்க்கெட்ல கிடைக்குது பா...'' என, அடுத்த மேட்டருக்குள் நுழைந்தார் அன்வர்பாய்.
''என்னதுன்னு சொல்லும்...'' என்றார் அண்ணாச்சி.
''இந்த ஆட்சி வந்ததுக்கப்பறம், ரேஷன் கடைகள்ல, 20 கிலோ அரிசி இலவசமா தர்றாங்க... அதை வாங்கி வெளியில கிலோ அஞ்சு ரூபாய்க்கு விக்கறாங்க பா... பெண்கள்ட்ட இருந்து கடைக்காரர்கள் வாங்கிட்டுப் போறாங்க... ரேஷன் கடை வாசல்லேயே சில பெண்கள் நின்னு, இந்த வியாபாரத்தை பண்றாங்க பா... அதுமாதிரி, பருப்பு, சர்க்கரை, உளுந்தையும் சிலர் கடை வாசல்லேயே கூடுதல் விலைக்கு வாங்கிக்கறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''துறையே பயப்படுதாம்ங்க...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''யாரைக் கண்டு ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''குடும்ப நலத்துறையில கண்காணிப்பாளரா ஒருத்தர் இருக்காருங்க... இவர், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராம்... சுகாதாரத் துறை அமைச்சரும் வேலூர் மாவட்டத்துக்காரர்... அதனால, அமைச்சர் தனக்கு நெருக்கமானவர்ன்னு சொல்லிட்டு, இந்த கண்காணிப்பாளர் போடுற ஆட்டத்துல, துறையில உள்ளவங்க எல்லாம் பயந்து போய் இருக்காங்கங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''புரமோஷன்களை எல்லாம் நிறுத்தி வைக்கச் சொல்லிட்டாங்க பா...'' என, அடுத்த மேட்டரைச் சொன்னார் அன்வர்பாய்.
''ஏதாவது பிரச்னையா ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''அதெல்லாம் தெரியாது... தலைமைச் செயலகத்துல, 141 துணைச் செயலர் பதவிகள், 123 சார்பு செயலர் பதவிகள், அப்புறமா நிறைய பிரிவு அலுவலர் பதவிகளுக்கு புரமோஷன் கொடுக்க, பேனல் எல்லாம் தயாராகி இருந்ததாம்... ஆனால், எந்த புரமோஷனும் கொடுக்க வேண்டாம்ன்னு நிறுத்தி வைச்சிட்டாங்களாம்... தலைமைச் செயலக சங்கத்தினர் முதல்வரை சந்திச்சு முறையிட முயற்சி எடுத்துட்டு இருக்காங்க பா...'' என முடித்தார் அன்வர்பாய்; பெஞ்ச் அமைதியானது.


