/உள்ளூர் செய்திகள்/மதுரை/நெல்லை பல்கலை., எம்.டெக்.,மாணவர்களுக்கு சிக்கல்நெல்லை பல்கலை., எம்.டெக்.,மாணவர்களுக்கு சிக்கல்
நெல்லை பல்கலை., எம்.டெக்.,மாணவர்களுக்கு சிக்கல்
நெல்லை பல்கலை., எம்.டெக்.,மாணவர்களுக்கு சிக்கல்
நெல்லை பல்கலை., எம்.டெக்.,மாணவர்களுக்கு சிக்கல்

திருநெல்வேலி: நெல்லை பல்கலை., யில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த எம்.டெக்.,படிப்பிற்கு உரிய சான்றிதழ்கள் வழங்கப்படாததால் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
வழக்கமாக பி.டெக்.,போன்ற இன்ஜினியரிங் பாடங்களை பல்கலைக்கழகங்களில் துவங்கும்போது அகில இந்தியதொழில் நுட்ப கவுன்சில்(ஏஐசிடிஇ) அனுமதி பெறவேண்டும். ஆனால் நெல்லை பல்கலையில் அத்தகைய அனுமதி எதையும் பெறவில்லை. வேலைவாய்ப்பு தரும் நிறுவனங்கள் தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி உள்ளதா என பார்க்கின்றனர். எனவே அந்த கவுன்சிலின் அனுமதி பெற இப்போதுதான் விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்தந்த ஆண்டு மாணவர்கள் தேர்வு எழுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் பல்கலையின் முத்திரையுடன், தேர்வாணையர் கையெழுத்துடன் வழங்கப்படும். ஆனால் எம்.டெக்.,மாணவர்களுக்கு வெறும் வெள்ளைத்தாளில் அந்த துறை தலைவர் கையெழுத்து மட்டும் போட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறதாம்.இத்தகைய பேப்பருக்கு எந்த இடத்திலும் அங்கீகாரம் இருக்காது என்பது மாணவர்களின் ஆதங்கமாகும்.
மேலும் இதுவரையிலும் மொத்த படிப்பே 5 ஆண்டுகள்தான் என கூறிவந்த பல்கலை நிர்வாகம் தற்போது பி.டெக்.,4 ஆண்டுகள், எம்.டெக்.,இரண்டு ஆண்டுகள் என கூறி இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களை மேலும் ஒரு ஆண்டு பயில வேண்டும் என கட்டாயப்படுத்தி வருகின்றனர். இதையெல்லாம் முன்பே ஏன் தெரிவிக்கவில்லை.
மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுவதா? : பின்தங்கிய பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகளின் வாழ்க்கையில் நெல்லை பல்கலை., நிர்வாகம் விளையாடுகிறதா என மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் வெகுண்டெழுந்துள்ளனர். தற்போது எம்.டெக்.,ஐந்து ஆண்டுகளிலும் பயிலும் சுமார் 260 மாணவ, மாணவிகள் நெல்லை பல்கலைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். நெல்லை பல்கலையில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளதால் பல்கலை நிர்வாகத்தை கவனித்துவரும் கன்வீனர் கமிட்டியிடம் புகார் தெரிவித்தனர். விரைவில் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து துறைத்தலைவர் கிருஷ்ணன் கூறுகையில், இந்த பிரச்னைகள் இருப்பது உண்மைதான். அவை சரிசெய்யப்பட்டு மாணவர்களுக்குமுறையான சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்தார். இருப்பினும்இதுவரையிலும் நடவடிக்கை எடுக்காத பல்கலை ., நிர்வாகத்தினர் இனியும் தங்களை தெருவில் விட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளனர்.


