Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தென்மாவட்டங்களில் மாப்பிள்ளைகளுக்கு கடும் கிராக்கி : பிரச்னைகள் ஏற்படும் என "பகீர்' ரிப்போர்ட்

தென்மாவட்டங்களில் மாப்பிள்ளைகளுக்கு கடும் கிராக்கி : பிரச்னைகள் ஏற்படும் என "பகீர்' ரிப்போர்ட்

தென்மாவட்டங்களில் மாப்பிள்ளைகளுக்கு கடும் கிராக்கி : பிரச்னைகள் ஏற்படும் என "பகீர்' ரிப்போர்ட்

தென்மாவட்டங்களில் மாப்பிள்ளைகளுக்கு கடும் கிராக்கி : பிரச்னைகள் ஏற்படும் என "பகீர்' ரிப்போர்ட்

ADDED : ஆக 13, 2011 01:31 AM


Google News
திருநெல்வேலி : தமிழகத்தில் தென் மாவட்டங்களில் 'மாப்பிள்ளைகளுக்கு' தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆனால் வட மாவட்டங்களில் ஆண்கள் அதிக ஆதிக்கத்துடன் காணப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. உலக அளவில் மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக 2வது ரேங்க்கில் இந்தியா உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் தொகை 7.30 கோடியை எட்டியுள்ளது. அபரிதமான மக்கள் தொகை வளர்ச்சி நாட்டின் பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, சுற்றுசூழல் உட்பட பல்வேறு துறைகளில் பல தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. எனினும், மனித வளத்தில் சீனாவை, இந்தியா எட்டிப்பிடிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. மக்கள் தொகையில் ஆண், பெண் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. கடந்த 2001ம் ஆண்டிற்கு பிறகு தற்போது கணக்கிடும் பணி முடிவடைந்து புள்ளி விபரங்கள் தெரிவிப்பவை சில அதிர்ச்சிகரமானவை...சில சுவாராசியமானவை... இதோ சர்வே ரிப்போர்ட்... ''மாப்பிள்ளைகளுக்கு'' கிராக்கி: நெல்லை மாவட்டத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 1024 பெண்கள் உள்ளனர். ஆனால் கடந்த 2001ம் ஆண்டில் 1,042 பெண்கள் இருந்தனர். இதனால் 2வது ரேங்கில் இருந்து 5வது ரேங்கை நெல்லை மாவட்டம் பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயிரம் ஆண்களுக்கு கடந்த 2001ம் ஆண்டில் 1050 பெண்கள் இருந்தனர். தற்போது 1024 பெண்கள் உள்ளனர். இதனால் மாநில அளவில் முதலாவது ரேங்கை இம்மாவட்டம் பிடித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 2001ம் ஆண்டில் 1014 ஆக இருந்த பெண்களின் எண்ணிக்கை தற்போது 1010ஆக குறைந்துள்ளது. இதனால் இம்மாவட்டம் 10வது ரேங்கை பிடித்துள்ளது. இதே போல், வேலூர் மாவட்டத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 1004, நீலகிரி மாவட்டத்தில் 1040.09, கோவையில் 1001.07, கரூர் மாவட்டத்தில் 1014, திருச்சியில் 1013.45, பெரம்பலூர் 1005.82, அரியலூரில் 1015.65, நாகப்பட்டினத்தில் 1024.64, திருவாரூரில் 1030.9, புதுக்கோட்டையில் 1015, சிவகங்கையில் 1000, விருதுநகரில் 1008.72 பெண்கள் உள்ளனர். தமிழகத்தில் தென் மாவட்டங்களில் நெல்லை, குமரி, தூத்துக்குடி உட்பட 15 மாவட்டங்களில் ஆண்களை விட பெண்கள் அதிகமாகவே உள்ளதாக தெரிய வந்துள்ளது. இம்மாவட்டங்களில் இதே நிலை நீடித்தால் வருங்காலங்களில் மாப்பிள்ளைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அதிகமான மணப்பெண்களும், குறைவான மணமகன்களும் உருவாகி சமச்சீரற்ற சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உருவாகும். ஆண், பெண் பாலின விகிதத்தில் வித்தியாசம் அதிகமானால் சமுதாயத்தில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.பெண்கள் குறைவில் சேலம் முதலிடம்: சேலம் மாவட்டத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 2001ம் ஆண்டில் 929 பெண்கள் இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 954 ஆக அதிகரித்து 32வது ரேங்கை பெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தை பொறுத்தவரை ஆயிரம் ஆண்களுக்கு கடந்த 2001ம் ஆண்டில் 932 பெண்களும், 2011ம் ஆண்டில் 946 பெண்களும் உள்ளனர். இதனால் இம்மாவட்டம் 31வது ரேங்கை பெற்றுள்ளது. இதே போல், திருவள்ளூரில் 983.27, சென்னையில் 985.5, கிருஷ்ணகிரியில் 955.8, திருவண்ணாமலையில் 993.21, விழுப்புரத்தில் 984.88, சேலத்தில் 954.44, நாமக்கல்லில் 985.81, ஈரோட்டில் 992.26, திருப்பூரில் 988.15, திண்டுக்கல்லில் 997.69, கடலூரில் 983.66, மதுரையில் 989.81, தேனி மாவட்டத்தில் 990.14, ராமநாதபுரத்தில் 976.96 பெண்கள் உள்ளனர். இந்திய, தமிழக சராசரி: பொதுவாக இந்திய அளவில் கணக்கிட்டால் ஆயிரம் ஆண்களுக்கு 940 பெண்களும், தமிழகத்தில் 955 பெண்களும் உள்ளனர்.ஆனால் வட மாவட்டங்களில் பெண்களை விட ஆண்கள் அதிகமாக உள்ளனர். இதற்கு ஆரம்ப காலத்தில் பெண் குழந்தைகள் மீதான வெறுப்பு இம்மாவட்ட மக்களிடையே அதிகமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. கருவிலேயே பெண் சிசு கொலை, கள்ளிப்பால் ஊற்றி பெண் குழந்தைகளை அழித்தல் போன்ற காரணங்களினால் இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். தற்போது பெண் குழந்தைகள் குறித்து விழிப்புணர்வு, அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக சாதனைகளை படைத்து வருவது, பெண் குழந்தைகளுக்கு கருவறை முதல் கல்லறை வரை பல்வேறு திட்டங்கள் போன்றவற்றினால் இந்த நிலை மாறி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மொத்தத்தில் ஆண், பெண் பாலின விகிதத்தில் அதிக வித்தியாசம் இல்லாமல் இருந்தால் சமச்சீர் குடும்பங்கள் உருவாகும்...இல்லையெனில் ஒருபுறம் மாப்பிள்ளைகளுக்கு கிராக்கி...மறுபுறம் அதிக எண்ணிக்கையில் மணப்பெண்கள் போன்ற பிரச்னைகள் எழலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us