அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக கோவையில் இன்று உண்ணாவிரதம்
அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக கோவையில் இன்று உண்ணாவிரதம்
அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக கோவையில் இன்று உண்ணாவிரதம்

கோவை : அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, தமிழ்நாடு ஓட்டல் முன், இன்று உண்ணாவிரதம் நடக்கிறது.
ஊழலுக்கு எதிராக, அன்னா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, 'ஐந்தாவது தூண்' சார்பில், இன்று முதல், தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. இன்று, கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன், உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. போராட்டத்தில் திரளான மக்கள் பங்கேற்கவும், வீடுகளில் நீல நிறக்கொடி ஏற்றவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐந்தாவது தூண், கோவை மண்டல இயக்குனர் ராஜ்குமார் வேலு கூறியது: நாளை (இன்று) நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை, சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன் துவக்கி வைக்கிறார். சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், வியாபாரிகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துதரப்பு மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. இது, உண்மையான போராட்டம்; அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும். போராட்ட திடலில் ஊழலுக்கு எதிரான ஜீரோ ரூபாய் நோட்டின், 30 அடி பேனர் வைக்கப்பட உள்ளது. இதில், 'யாருக்கும் லஞ்சம் கொடுக்கமாட்டோம்; லஞ்சம் வாங்க மாட்டோம்' என, மக்கள் கையெழுத்திட்டு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளலாம். அரசின் வெளிப்படையான நடவடிக்கையை, நீல நிறக்கொடி வெளிப்படுத்தும். இதை வலியுறுத்தும் வகையில், மக்கள் தங்கள் வீடுகளில் நீல நிறக் கொடி ஏற்ற வேண்டும். ஒரு நாள் போராட்டத்திற்கு மட்டும் போலீசார் அனுமதி கொடுத்தனர். ஆனால், அன்னா ஹசாரே போராட்டம் முடியும் வரை, கோவையிலும் போராட்டம் தொடரும். ஐந்தாவது தூண் அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு ராஜ்குமார் வேலு கூறினார்.


