Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/கோவையில் இருந்து திருப்பதிக்கு கூடுதலாக சிறப்பு ரயில் இயக்கம்

கோவையில் இருந்து திருப்பதிக்கு கூடுதலாக சிறப்பு ரயில் இயக்கம்

கோவையில் இருந்து திருப்பதிக்கு கூடுதலாக சிறப்பு ரயில் இயக்கம்

கோவையில் இருந்து திருப்பதிக்கு கூடுதலாக சிறப்பு ரயில் இயக்கம்

ADDED : ஆக 19, 2011 02:13 AM


Google News
சேலம்: பண்டிகை காலத்தை முன்னிட்டு, கோவையில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கு, பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கோவையில் இருந்து திருப்பதிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என, திருப்பூர், ஈரோடு, சேலத்தை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பக்தர்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்தாண்டு அக்டோபரில் கோவையில் இருந்து திருப்பதிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் விடப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்த ரயில் திருப்பூர், ஈரோடு நகரில் நிற்காமல் செல்லும் என அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடி, நடப்பாண்டு ஜனவரி 25ம் தேதி கோவையில் இருந்து முதன் முதலாக திருப்பதிக்கு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் திருப்பூர், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன்களில் நிற்காமல், சேலம் வழியாக சென்றது. ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து, பக்தர்கள், வியாபாரிகள் என பலரும் ஈரோடு, திருப்பூர், சேலம் நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பதி ரயில் ஈரோடு, திருப்பூரில் நின்று செல்ல வேண்டும் என, பல மனுக்கள் ரயில்வே அமைச்சருக்கு அனுப்பப்பட்டன, ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தியும் தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்தித்து, ஈரோடு, திருப்பூரில் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார். போராட்டம் வலு பெற்றதையடுத்து, திருப்பூர், ஈரோடு நகரில் ரயில் நின்று செல்லும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இரண்டு இடத்திலும் ரயில் நின்று செல்ல ஆரம்பித்தது. இதற்கு பக்தர்கள், பயணிகள் மற்றும் வியாபாரிகள் வரவேற்பு தெரிவித்தனர். கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று, மதியம் 1.30 மணிக்கு திருப்பதி சென்றடைகிறது. கோவையில் இருந்து ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாள் புறப்படுகிறது. திருப்பதியில் இருந்து சனி, திங்கள், புதன்கிழமை ஆகிய நாட்களில் இயக்கப்படுகிறது. ஆறு பெட்டிகளுக்கு மேல் பொது வகுப்புக்கான பெட்டி இருப்பதால், பக்தர்கள் வசதியுடன் திருப்பதி சென்று வருகின்றனர். இந்நிலையில், மேலும் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் கோவையில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்பட்டுள்ளது. வாரம் ஒரு முறை வியாழன் அன்று கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படுகிறது.

தென்னக ரயில்வே முன்னாள் ஆலோசனைக்குழு உறுப்பினர் பாட்ஷா கூறியதாவது: பல போராட்டங்களுக்கு பின், கோவை- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் மூலம் பக்தர்கள் பலர் சுலபமாக திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய முடிகிறது. அதேபோல், புதிதாக வாரம் ஒரு முறை வியாழன் அன்று கோவையில் இருந்து, திருப்பதிக்கு ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் ரயில் விட்டிருப்பதும் பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் கூறினார். ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது. அந்த மாதம் முழுவதும் திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு, கூடுதலாக ஒவ்வொரு வாரமும் வியாழன் அன்று கோவையில் இருந்து ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பதிக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில் அக்டோபர் மாதம் முடிய இயக்கப்படும். ஆயுதபூஜை, தீபாவளி என தொடர்ந்து பண்டிகை காலமாக இருப்பதால், ஸ்பெஷல் ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us