Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/லோக்பால் மசோதா: பேச்சுவார்த்தை நடத்த தயார் -பிரதமர்

லோக்பால் மசோதா: பேச்சுவார்த்தை நடத்த தயார் -பிரதமர்

லோக்பால் மசோதா: பேச்சுவார்த்தை நடத்த தயார் -பிரதமர்

லோக்பால் மசோதா: பேச்சுவார்த்தை நடத்த தயார் -பிரதமர்

UPDATED : ஆக 21, 2011 02:30 PMADDED : ஆக 20, 2011 11:34 PM


Google News
Latest Tamil News

புதுடில்லி:''லோக்பால் மசோதா விவகாரத்தில் விட்டுக் கொடுக்கத் தயார்.

அது தொடர்பாக ஆலோசனை நடத்தவும், விவாதம் நடத்தவும் தயாராக இருக்கிறோம். நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் கேட்ட பின், அனைவரும் விரும்பும் பலமான லோக்பால் மசோதாவை கொண்டுவர வேண்டும்'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.



டில்லியில் நேற்று நடந்த திட்ட கமிஷன் கூட்டத்தில் பங்கேற்ற பின், பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:லோக்பால் மசோதா குறித்து ஆரம்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. அந்த சமயத்தில் எதிர்க்கட்சிகள் எல்லாம்,'அரசாங்கம் தன் தரப்பு மசோதாவை தயாரித்து அளிக்கட்டும். அதைப் பார்த்துவிட்டு, எங்கள் தரப்பு கருத்துக்களை கூறுகிறோம்' என்றன. தற்போது அரசு தரப்பில், லோக்பால் மசோதா தயாரிக்கப்பட்டு, அது பார்லிமென்டிலும் அறிமுகமாகி விட்டது. அரசு தன் கடமையைச் செய்து விட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் இன்னும் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கவில்லை.



லோக்பால் விவகாரத்தில் தேசிய அளவில் கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும். வலுவான லோக்பால் மசோதா வர வேண்டுமென்றே விரும்புகிறேன்.லோக்பால் மசோதா விவகாரத்தில், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்ல நிறைய வாய்ப்புகள் உள்ளன. மசோதாவை உருவாக்குவது தொடர்பான விவாதங்கள், பேச்சுவார்த்தைகள் என, அனைத்துக்கும் அரசு தயார். வரும் 30ம் தேதிக்குள், ஜன் லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற வேண்டும் என, அன்னா ஹசாரே கூறுகிறார். இதில், சில பிரச்னைகள் இருப்பதாக நான் கருதுகிறேன்.லோக்பால் மசோதாவை நிறைவேற்ற காலக்கெடு நிர்ணயிக்க முடியாது.



பார்லிமென்ட் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சில விஷயங்களை செயல்படுத்தும் போது, அதற்கு கால அவகாசம் தேவைப்படும். இவ்விஷயத்தில் உள்ள நடைமுறைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில், மற்றவர்களைப் போல், நானும் பேச முடியாது. மக்கள், இதற்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என நம்புகிறேன்.இந்தியாவில் உள்ள பல தரப்பு மக்களின் கருத்துக்களை எல்லாம் கேட்டுப் பெற்று, அதன் அடிப்படையில் வலுவான ஒரு லோக்பால் மசோதாவை உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கப்படும் மசோதா, அனைவரும் விரும்பும் மசோதாவாக இருக்கும்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.



9 சதவீத வளர்ச்சி சாத்தியமே:பன்னிரெண்டாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில், சில கடினமான முடிவுகளை எடுத்தால், 9 சதவீத பொருளாதார வளர்ச்சி என்பது சாத்தியமானது தான். ஏனென்றால், சர்வதேச அளவிலான பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படுவதற்கு முன் (2008ல்), நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 9 சதவீதமாக இருந்தது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.அரசின் முக்கியமான திட்டங்களை நிறைவேற்றுவதில், தீவிர கவனம் செலுத்த வேண்டும். 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், விவசாய துறையின் வளர்ச்சி, 3 சதவீதத்தை எட்டியுள்ளது என்பதை, மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்த விரும்புகிறேன். அடுத்த ஐந்தாண்டு திட்ட காலத்தில், விவசாயத் துறை வளர்ச்சி 4

சதவீதமாக இருக்க வேண்டும். இதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும் என்றார்.



-நமது டில்லி நிருபர்-







      Our Apps Available On




      Dinamalar

      Follow us