Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு வைகோ கடிதம்?

முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு வைகோ கடிதம்?

முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு வைகோ கடிதம்?

முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு வைகோ கடிதம்?

UPDATED : ஆக 22, 2011 01:01 AMADDED : ஆக 21, 2011 11:43 PM


Google News
Latest Tamil News
சென்னை:முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை, முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரில் சந்தித்து வலியுறுத்த அனுமதி கேட்டு, அவருக்கு ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கடிதம் எழுதியுள்ளதாக ம.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டசபை தேர்தல் கூட்டணி முறிவுக்கு பின், அவர்கள் இருவரின் முதல் சந்திப்பு கோட்டையில் நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியில் எழுந்துள்ளது.

கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி, முன்னாள் பிரதமர் ராஜிவை விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் படுகொலை செய்தனர்.

அக்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ம.தி.மு.க., - பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் போராடி வருகின்றனர்.



மூவரின் உயிரை பாதுகாக்கும் மக்கள் இயக்கம் ஒன்று, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ தலைமையில் துவக்கப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கம் அருகில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவு தலைவர் ஒருவரின் வீட்டில், வைகோ மற்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட ரகசியக் கூட்டம், கடந்த 18ம் தேதி நடந்தது.

அக்கூட்டத்தில், 'தமிழக சட்டசபையில் இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை மத்திய அரசை வலியுறுத்தி, முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றியதன் மூலம், அவரால் மட்டுமே தூக்குத் தண்டனை கைதிகளை காப்பாற்ற முடியும்' என்ற கருத்து உட்பட இது குறித்து பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டன.



முதல்வர் ஜெயலலிதாவை மக்கள் இயக்கத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் குழு நேரில் சந்தித்து, கோரிக்கை மனுவை அளிக்க வேண்டும்' என்ற முடிவும் எடுக்கப்பட்டது.

அக்கூட்டம் முடிந்த மறுநாள், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை கைதிகள் மூவரை, வைகோ மற்றும் அவரது சகாக்கள் சிலர் சந்தித்துப் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.தேர்தலுக்கு முன், அ.தி.மு.க., தலைமையை அரசியல் ரீதியாக விமர்சித்த வைகோ, தற்போது முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசி வருகிறார்.

இப்பிரச்னை குறித்து ம.தி.மு.க., மாநில நிர்வாகி ஒருவர் கூறும்போது, ''மக்கள் இயக்கத்தின் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்க அனுமதி கேட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது. விரைவில் முதல்வர் ஜெயலலிதா, வைகோ சந்திப்பு கோட்டையில் நடக்கும் வாய்ப்புள்ளது,'' என்றார். -எஸ்.சிந்தாஞானராஜ்-







      Our Apps Available On




      Dinamalar

      Follow us