/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவைக்கு ரயில்கள் "டாட்டா'; மேலும் குறையப்போகுது "கோட்டா'கோவைக்கு ரயில்கள் "டாட்டா'; மேலும் குறையப்போகுது "கோட்டா'
கோவைக்கு ரயில்கள் "டாட்டா'; மேலும் குறையப்போகுது "கோட்டா'
கோவைக்கு ரயில்கள் "டாட்டா'; மேலும் குறையப்போகுது "கோட்டா'
கோவைக்கு ரயில்கள் "டாட்டா'; மேலும் குறையப்போகுது "கோட்டா'
ADDED : ஆக 22, 2011 12:03 AM
கோவை : போத்தனூர் வழியாக கேரளா செல்லும் ரயில்களை கோவைக்குத் திருப்ப வேண்டுமென்ற கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், மேலும் பல ரயில்களையும் இங்கு வராமல் திருப்புவதற்கான முயற்சியை ரயில்வே துறை துவக்கியுள்ளது.
வடகோவை - இருகூர் இரு வழிப்பாதை அமைக்கும் பணியைக் காரணம் காட்டி, கேரளா செல்லும் ரயில்கள் அனைத்தும் போத்தனூர் வழியாகத் திருப்பி விடப்பட்டன. அந்தப் பணி முடிவடைந்து, ஓராண்டுக்கு மேலாகியும், மீண்டும் அந்த ரயில்கள் கோவைக்குத் திருப்பப்படவில்லை. இவ்வாறு, 13 ரயில்கள், கோவையைப் புறக்கணித்து போத்தனூர் வழியாக கேரளா செல்கின்றன.கோவையிலிருந்து சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குச் செல்வதற்கு போதிய ரயில்கள் இல்லாத நிலையில், இந்த 13 ரயில்களும் இந்நகரைப் புறக்கணித்துச் செல்வதால், கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட மக்களுக்கான ரயில் போக்குவரத்து வசதி,பெருமளவில் நிராகரிக்கப்படுகிறது.இந்த மூன்று மாவட்ட மக்களுக்கு, ரயில்களில் ஒதுக்கீடு குறைவதோடு, கேரளா செல்லும் பயணிகளுக்குக் கூடுதல் ஒதுக்கீடு கிடைத்து வருகிறது. இதை எதிர்த்து, சிறிய அரசியல் கட்சிகள் மட்டும் ரயில் மறியல் போராட்டம் நடத்தின; பலர் கைது செய்யப்பட்டனர். தொழில் மற்றும் வர்த்தகசபை கோவை கிளையும் இந்தப் பிரச்னையை கையில் எடுத்துப் போராடுவதாகக் களம் இறங்கியது.ஆனால், கடந்த மாதம் வெளியிடப்பட்ட புதிய கால அட்டவணையிலும் இந்த 13 ரயில்களை கோவைக்குத் திருப்புவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மூன்று மாவட்ட மக்களும், இதற்காகப் போராடிய அமைப்பினரும் கடும் அதிருப்தியடைந்தனர். இருப்பினும், யாரும் ரயில்வே துறைக்கு எதிராகப் போராட்டத்தை தீவிரப்படுத்தவில்லை. எதிர்ப்பு வலுவாக இல்லாத காரணத்தால், ரயில்வே அதிகாரிகளும் கேரளாவுக்குச் செல்லும் ரயில்களைத் திருப்புவதில்லை என்பதில் திட்டவட்டமாக இருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில், இப்பிரச்னையை கோவை ரயில்வே பயணிகள் சங்கம் கையில் எடுத்து, மனுப்போரைத் துவங்கியுள்ளது. மக்களிடம் இதை எடுத்துச் செல்லவும் இந்த அமைப்பு தீர்மானித்துள்ளது. கோவைக்கு இந்த ரயில்களைத் திருப்பினால், இருகூர் - வடகோவை இரு வழிப்பாதையின் பயன்பாடு, பல மடங்கு அதிகரித்து விடும் என்பதே ரயில்வே அதிகாரிகள் சொல்லும், 'சப்பைக்கட்டு' காரணம். ஆனால், உண்மையில் இருகூர் - வடகோவை இரு வழிப்பாதையின் பயன்பாடு, தற்போது 65 சதவீதம் மட்டுமே இருப்பதாக இந்த சங்கம் சுட்டிக்காட்டுகிறது. மேற்கு நோக்கிச் செல்லும் ரயில்களால் இருகூர் - போத்தனூர் ஒரு வழிப்பாதை பயன்பாடு 91 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பதையும் இந்த அமைப்பு கண்டறிந்துள்ளது. கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கூடுதல் வழிப்பாதையை பயன்படுத்தாமல், போத்தனூர் வழியாக ரயில்களை இயக்குவதன் அவசியமென்ன என்பதே இவர்களின் கேள்வி. பாதை பயன்பாட்டைப் பொறுத்தவரை, கேரளாவில் உள்ள சில வழித்தடங்களில் பயன்பாடு பல மடங்கு அதிகமாக இருப்பதையும் ரயில்வே பயணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. உதாரணமாக, திருவனந்தபுரம் - கொல்லம் வழித்தடம் 120 சதவீதமும், எர்ணாகுளம் - காயங்குளம் (வழி: ஆலப்புழா) 150 சதவீதமும் பயன்பாட்டில் உள்ளன. அதேபோல, எர்ணாகுளம் - காயங்குளம் (வழி:கோட்டயம்) வழித்தடம் 170 சதவீதமும், எர்ணாகுளம் - சொர்ணூர் வழித்தடம் 120 சதவீதமும் பயன்பாட்டில் உள்ளதாகக் கூறும் இந்த அமைப்பின் நிர்வாகிகள், கடந்த 2009லேயே இந்த நிலை இருந்ததாகவும், இப்போது இந்த அளவு இன்னும் அதிகரித்திருக்கும் என்றும் கூறுகின்றனர். எனவே, பாதை பயன்பாடு அதிகரிக்கும் என்பதை விட, கேரளாவுக்கான ஒதுக்கீடு குறையும் என்பதே இதற்கான உண்மையான காரணமாகத் தெரிகிறது. இந்தச் சூழலில், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட எர்ணாகுளம் - பெங்களூரு புதிய ரயிலும், கோவையைப் புறக்கணித்து சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே, பெங்களூருவிலிருந்து (யஷ்வந்த்பூர்) கேரள மாநிலம் கண்ணூர் செல்லும் தினசரி ரயில், போத்தனூர் வழியாகத்தான் செல்கிறது. இவ்வாறு, கோவையை அப்பட்டமாக ரயில்வே அதிகாரிகள் புறக்கணித்து வரும் நிலையில், இன்னும் பல ரயில்களையும் கோவை வராமல் திருப்புவதற்கான முயற்சியும் துவங்கியுள்ளது. இருகூரிலிருந்து போத்தனூருக்கு இரண்டாவது வழிப்பாதை அமைப்பதற்கான வேலை, ஜரூராக ஆரம்பமாகியுள்ளது. கேரளா செல்வதற்கான முக்கிய வழித்தடம் என்பதால், இதற்கு அதிக நிதி ஒதுக்கி, விரைவாக முடித்து விடுவார்கள் என்பது நிச்சயம். அப்படி முடித்து விட்டால், இன்னும் பல ரயில்களும் கோவை வராமல் போக வாய்ப்புண்டு. என்ன செய்யப்போகின்றனர், கோவை மக்கள்?


