அறிவாலயத்தில் உள்ள மாநகராட்சி இடம் மீட்கப்படும் : உள்ளாட்சி துறை அமைச்சர் அறிவிப்பு
அறிவாலயத்தில் உள்ள மாநகராட்சி இடம் மீட்கப்படும் : உள்ளாட்சி துறை அமைச்சர் அறிவிப்பு
அறிவாலயத்தில் உள்ள மாநகராட்சி இடம் மீட்கப்படும் : உள்ளாட்சி துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை : ''அறிவாலயத்தில் உள்ள, மாநகராட்சிக்கு சொந்தமான இடம் மீட்கப்படும்.
வெற்றிவேல் - அ.தி.மு.க : 10 ஆயிரம் ச.அடிக்கு மேல் வீடு கட்டினால், குறிப்பிட்ட அளவு இடத்தை பூங்காவாக மாற்றி, மாநகராட்சியிடம் ஒப்படைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும். ஆனால், சென்னை, அண்ணா அறிவாலயத்தில், பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை, தி.மு.க.,வே பயன்படுத்தி வருகிறது. பூங்காவில் தார்ச்சாலை அமைத்து, அதனை, கார் நிறுத்தும் இடமாக மாற்றிக் கொண்டனர். கடந்த 2001ம் ஆண்டு முதல், மாநகராட்சிக்கு சொந்தமான அந்த இடத்தை மீட்க, கவுன்சிலராக இருக்கும் போதே போராடி வருகிறேன். இப்போது எம்.எல்.ஏ.,வாகவும் ஆகிவிட்டேன். தற்போது எனக்கும் வயதாகி விட்டது. ஆனால், இதுவரை அந்த இடத்தை மீட்க முடியவில்லை.
அமைச்சர் வைத்திலிங்கம்: தி.மு.க.,வினர் பொதுமக்கள் இடத்தை மட்டுமின்றி, வீட்டு வசதி வாரிய இடங்களையும் ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் ஆக்கிரமித்துள்ள இடங்களை மீட்கும் நடவடிக்கையில், இந்த அரசு ஈடுபட்டுள்ளது.
வெற்றிவேல்: அறிவாலயத்தில் உள்ள பூங்காவைச் சுற்றி, சுற்றுச் சுவர் எழுப்பியுள்ளனர். அதை மீட்டு, மாநகராட்சி பூங்காவாக மாற்ற வேண்டும்.
அமைச்சர் வைத்திலிங்கம்: தற்போது மேயராக இருப்பவர், தி.மு.க.,வைச் சேர்ந்தவர் என்பதால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்னும் இரண்டு மாதத்தில், உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர் தான் சென்னை மேயராக வருவார். அப்போது, அறிவாலயத்தில் உள்ள மாநகராட்சி இடம் நிச்சயமாக மீட்கப்படும்.
வெற்றிவேல்: பூங்காவை தனியார் பாதுகாக்கலாம் என்ற அடிப்படையில் தான், அவற்றை தி.மு.க.,வினர் பராமரித்து வருகின்றனர். மாநகராட்சி தான் அதை மீட்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில்லை. சி.எம்.டி.ஏ., வீட்டு வசதி வாரியம், உள்ளாட்சித் துறையும் நடவடிக்கை எடுக்கலாம்.
அமைச்சர் சண்முகம்: அறிவாலயத்தில் மட்டுமல்ல, தி.மு.க.,வைச் சேர்ந்த அமைச்சர்களும் பொதுமக்கள் இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் பொன்முடி, தனது மாமியார் பெயரில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து, கட்டடமே கட்டியுள்ளார்.
அமைச்சர் முனுசாமி: அறிவாலயத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சவுந்தர்ராஜன் - மா.கம்யூ : மாமியார் பெயரில் இடத்தை ஆக்கிரமித்தவர்களை மாமியார் வீட்டுக்கு அனுப்புவது எப்போது?
அமைச்சர் முனுசாமி: சட்டத்தை மதித்து நடைபெறும் இந்த ஆட்சியில், சட்டத்தை மீறி இடத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.