/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஊழலுக்கு எதிராக "ஒளி' ஆயுதம் ஏந்திய மக்கள்: திருப்பூரில் திரண்டது மக்கள் வெள்ளம்ஊழலுக்கு எதிராக "ஒளி' ஆயுதம் ஏந்திய மக்கள்: திருப்பூரில் திரண்டது மக்கள் வெள்ளம்
ஊழலுக்கு எதிராக "ஒளி' ஆயுதம் ஏந்திய மக்கள்: திருப்பூரில் திரண்டது மக்கள் வெள்ளம்
ஊழலுக்கு எதிராக "ஒளி' ஆயுதம் ஏந்திய மக்கள்: திருப்பூரில் திரண்டது மக்கள் வெள்ளம்
ஊழலுக்கு எதிராக "ஒளி' ஆயுதம் ஏந்திய மக்கள்: திருப்பூரில் திரண்டது மக்கள் வெள்ளம்
ADDED : ஆக 26, 2011 12:03 AM
திருப்பூர் : அன்னியர்களிடம் இருந்து இந்திய திருநாட்டை மீட்க நடந்த சுதந்திர போராட்டம் போல், ஊழல்வாதிகளிடம் இருந்து தேசத்தை மீட்க, காந்தியவாதி அன்னா ஹசாரே இரண்டாவது சுதந்திர போரை பிரகடனப்படுத்தி, ஊழல் புரியும் அனைவரையும் பாரபட்சமில்லாமல் தண்டிக்கவும், ஊழல் பணத்தில் சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நாட்டுக்கு தேவை வலுவான 'ஜன லோக்பால்' மசோதாவை அமல்படுத்த வேண்டும் எனக்கோரி, 10 நாட்களாக காந்திய வழியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே குழுவினர் கொளுத்திப்போட்ட போராட்ட நெருப்பு... தேசம் முழுவதும் மக்கள் மனதில் பற்றி எரிந்து, ஊழல்வாதிகளின் எண்ணங்களை பொசுக்க காட்டுத்தீயாய் பரவி வருகிறது. 'அறவழி ஆயுதம் ஏந்தி போராடும் அன்னா ஹசாரேவுக்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு... தேசத்தின் ஊழல் இருள் போக்க... இதே அறவழி ஆயுதம் ஏந்திய எங்கள் 'அன்னா'வுக்கு ஆதரவாக எங்கள் 'ஒளி ' ஆயுதம்...' என நேற்று களம் இறங்கினர் திருப்பூர் மக்கள். ஆங்கிலேயர் பூட்டிய அடிமை சங்கிலியை உடைக்க...தேச விடுதலைக்காக உழைத்த... போராட்ட களத்தில் ஆங்கிலேயர்களால் ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிர் பிரியும் நேரத்திலும் 'வந்தே மாதரம்' என கூறி... இத்தேசத்தின் கொடியை தனது உயிரை விட பெரிதாய் எண்ணி ...தேசியக்கொடியை விடாமல் பிடித்து, கடும் தாக்குதலை சந்தித்தபோதும்... வலிக்காக கதறாமல்... தேச விடுதலைக்காக கதறி... 'வந்தே மாதரம்... வந்தே மாதரம்' என முழங்கி, இத்தேசத்திற்காக உயிர் நீத்த திருப்பூர் குமரனின் நினைவாக எழுப்பியுள்ள அவரது சிலை முன் குவிந்தனர்.ஊழல்வாதிகளிடம் இருந்து எங்கள் தேசத்தை காக்க... நாங்கள் ஒற்றுமயாய் குவிந்துள்ளோம்... ஒரு கொடி காத்த குமரன் இல்லை... அவர் வழியில் வந்த ஆயிரக்கணக்கானோர் நாங்கள் இருக்கிறோம்... இத்தேசத்தை காக்க என அறை கூவல் விடுத்து அணிவகுத்தனர். முயற்சி மக்கள் அமைப்பு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா), டெக்பா, 'டிப்', மரியாலயா, விவேகானந்தா சேவாலயம், சமாதானம், 'சேவ்' என 30க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கூடினர். மேடையில் தேச பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன. தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. 'டெக்பா' சங்க தலைவர் ஸ்ரீகாந்த் வரவேற்றார். நட்புக்கரங்கள் தலைவர் மாரப்பன் தலைமை வகித்தார். சுப்ரமணியம் முன்னிலை வகித்தார். 'நிட்மா' தலைவர் ரத்தினசாமி, 'டெக்மா' தலைவர் கோவிந்தசாமி, 'டீமா' தலைவர் முத்துரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளி பாலா, ''ஊழல், லஞ்சம் காரணமாக இத்தேசம் ஊனமடைந்து விடக்கூடாது; ஊனத்தை பொருட்படுத்தாமல், குழந்தைகளுக்கு டியூசன் சொல்லி கொடுத்து பிழைத்து வருகிறேன். ஆனால், நம்மால், நம்மை ஆள உயர் பதவிகளுக்கு வருபவர்கள் ஊழலில் திளைத்து நாட்டை ஊனப்படுத்தி வருகின்றனர்; தேசத்தை காக்க நாம் அணி திரள்வோம்,'' என உணர்ச்சி பொங்க பேசி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார்.
பள்ளி சிறுமி வைசாலி, ''இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். அதில், பிரதமர் என்ன மற்றவர்கள் என்ன அனைவரும் சமமே; லஞ்சம், ஊழல் காரணமாக நாட்டின் வளர்ச்சி பாதித்துள்ள நிலையில், நாளைய இந்தியாவில் நாங்கள் எப்படி வாழ முடியும் என்ற அச்சம் ஏற்படுகிறது,'' என பேசி தங்கள் அச்ச உணர்வை பதிவு செய்து, அனைவரிடமும் கை தட்டல் பெற்றார்.உறுதிமொழி ஏற்பு : முயற்சி மக்கள் அமைப்பு தலைவர் சிதம்பரம்,'அரசின் சட்ட திட்டங்களை மதித்து, அதன் வழி நடப்பேன்; எல்லா உயிர்களையும் என் உயிர் போல் மதித்து அதன் உணர்விற்கும், உரிமைக்கும் மதிப்பளிப்பேன்; ஒழுக்கத்திற்கும், உழைப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து, நமது முன்னோர்களின் தியாகத்தை மதித்து எதிர்கால தலைமுறைக்கு நல்ல முன் உதாரணமாக திகழ்வேன்; சுற்றுச்சூழல் பாதுகாப்பில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வேன்; எனது உழைப்பில் ஒரு சதவீதமாவது சமுதாய நலனிற்காக பாடுபடுவேன்; சமூகத்தில் காணும் கொடும் வியாதியான லஞ்சம், ஊழல், தீவிரவாதம் போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுப்பேன்,' என உறுதிமொழி வாசிக்க... நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, பங்கேற்றவர்கள் அனைவரும் ஐந்து நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். ஊழல் என்னும் இருளை போக்க, தீ சுவாலையுடன் ஒருவர் மெழுகுவர்த்தி ஏந்த துவங்கினார்... அதைத்தொடர்ந்து மற்றொருவர்... அவர் இன்னொருவருக்கு என ஒருவருக்கு ஒருவர் ஒளி கொடுத்து சிறு துளியாய் துவங்கிய ஒளி.. இறுதியில் ஒளி வெள்ளமாய்... இருளை கிழித்துக்கொண்டு காட்சியளித்தது மெழுகுவர்த்தி ஏந்திய மக்களின் அணிவகுப்பு. அன்னாவுக்கு பின்னால் என்றும் நாங்கள் என்பதை உணர்ச்சி பொங்க உணர்த்தினர். கையில் ஒளி ஏற்றி, பங்கேற்ற அனைவரும் 'வந்தே மாதரம்' என விண்ணதிர முழங்கி, ஊழலுக்கு எதிராக தங்கள் கோபத்தை இந்நிகழ்வின் மூலம் பதிவு செய்தனர். பாரதியின் கோபத்தை போல... 'கொலை வாளினை எடுடா கொடுயோர் செயல் அறவே' என நாங்கள் வன்முறைக்கு போகவில்லை... அறவழியில் போராடுகிறோம்... சிறு பொறியாய் கிளம்பிய ஊழல் எதிர்ப்பு மிகப்பெரிய புரட்சியாய் மாறும்... ஊழக்கு எதிரான வலுவான 'ஜன லோக்பால்' மசோதாவை தாக்கல் செய்; காந்தியவாசி அன்னா ஹசாரேவின் கோரிக்கையை ஏற்றுக்கொள் என அரசுக்கு உணர்த்தும் வகையில் ஒவ்வொருவரின் உணர்வும் வெளிப்படுத்தியது. இதில், பள்ளி குழந்தைகள் பாரத மாதா போல், காந்தி, விவேகானந்தர் என தேசத்தலைவர்களை போல் வேடமணிந்து இந்திய தேசத்தை கட்டமைத்த, தேசத்திற்காக தியாகம் செய்த தலைவர்கள் எண்ணங்களை எங்கள் மனதில் இருத்தி, அவர்கள் போல் இன்று ஊழலுக்கு எதிராகவும் நாங்கள் களம் இறங்கியுள்ளோம் என சிறுவர்கள் உணர்த்தினர். 'ஊழலற்ற தேசம் தேவை'ஜன லோக்பால் சட்டம் ஏன் தேவை என்பது குறித்து ஸ்டாலின் குணசேகரன் பேசியதாவது: சுதந்திர போராட்ட முழக்கங்களான 'வந்தே மாதரம்' - 'பாரத் மாதாகி ஜெ' ஆகியவை உணர்வு பூர்வமாக 65 ஆண்டுகள் கழித்து, தற்போது மக்களிடையே உச்சரிக்கப்படுகிறது. இதற்கு காரணம், நம் நாடு லஞ்சம், ஊழலில் திளைத்து உலகில் தலைகுனிந்து நிற்கின்றோம். 110 கோடி மக்களை சுரண்டி, நாட்டின் வளர்ச்சியை பின்னுக்கு தள்ளி, பல நூறு பேர் ஊழலில் திளைத்து, நம்மை தலை குனிய வைத்துள்ளனர். இவர்களிடம் இருந்து தேசத்தை மீட்க அன்னா ஹசாரே குழுவினர் களம் இறங்கியுள்ளனர். இன்னும் நாம் மவுனம் காத்தால், நாம், நமது அடுத்த தலைமுறை பாதிக்கப்படும். ஜன லோக்பால் மசோதாவுக்கு, இன்று, நேற்றல்ல 50 ஆண்டு கால வரலாறு உண்டு. 1966ம் ஆண்டு, பரிந்துரை செய்யப்பட்டு, 1968ல் மாநிலங்களவையில் விவாதம் செய்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1969ல் இருந்து சட்டமாக இயற்றப்பட்டது. ஆனால், இன்று வரை நடைமுறைக்கு வரவில்லை. இன்று பல லட்சம் கோடியாக ஊழல் விரிந்து, இன்று நமது தேசத்தை பாதித்து வருகிறது. அரை நூற்றாண்டுகள் பொறுத்திருந்தும், இன்னும் எத்தனை நாட்கள் பொறுத்திருப்பது. ஊழலற்ற நமது தேசத்தை கட்டமைக்க, நமது பங்கு அவசியம். அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக இன்று கூடியுள்ளோம். சட்டம் அனைவருக்கும் சமம் என்றால், தனி அதிகாரம் மிக்க ஜன லோக்பால் சட்டம் அமைய வேண்டும், என்றார்.


