ADDED : செப் 08, 2011 01:52 AM
கோவை : போபாலில் நடந்த தேசிய அளவிலான தடகள போட்டியில், கோவை வீரர்கள் எட்டு தங்க பதக்கங்களை கைப்பற்றி திரும்பியுள்ளனர்.
மத்திய பிரதேச தடகள சங்கம் சார்பில் 23வது தேசிய அளவிலான தடகள போட்டி, போபால் டி.டி., ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் இந்தியா முழுவதுமிருந்து விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து 166 பேர் கொண்ட குழு பங்கேற்றது. கோவை சார்பில் அத்லடிக் கிளப், அச்சீவர் அத்லடிக் கிளப், அத்லடிக் பவுண்டேஷன் ஆகிய தடகள அமைப்புகளை சேர்ந்த ஒன்பது பேர் இதில் இடம்பெற்றனர். இவர்களில் ஹேமா ஸ்ரீ,கௌசல்யா, ப்ரவின் முத்துகுமார், முகமது சலாவுதின், சிவ அன்பரசி ஆகியோர் 100 மீ., ஓட்டம், 100 மீ., தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், 400 மீ., ரிலே, ட்ரிபிள் ஜம்ப் போட்டிகளில் எட்டு தங்க பதக்கங்களை வென்றனர். இதில் நீளம் தாண்டுதல்,400 மீ., ரிலே, ட்ரிபிள் ஜம்ப் போட்டிகளில் இரண்டு தங்கங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. சுபாஷினி, மதுப்பிரியா, ஷிவானி உள்ளிட்டோர் வெள்ளி, வெண்கலம் வென்றனர். இப்போட்டியில் பெண்கள் பிரிவில் 13, ஆண்களில் 11 தங்க பதக்கங்களை அள்ளிய தமிழகம் முறையே முதல் மற்றும் மூன்றாம் இடங்களை கைப்பற்றியது. இரு பிரிவுகளிலும் சேர்த்து 32 தங்கப் பதக்கங்கள் வாங்கிய அரியானா ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.


