Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பார்வையற்ற ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது

பார்வையற்ற ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது

பார்வையற்ற ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது

பார்வையற்ற ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது

ADDED : செப் 08, 2011 02:46 AM


Google News
ராசிபுரம்:கண் பார்வையற்ற முதுகலை ஆசிரியர் ஒருவருக்கு, தமிழக அரசு சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. அவர், தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக ஆங்கிலப்பாடத்தில், 100 சதவீதம் தேர்ச்சி அளித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ராசிபுரம், சிவானந்தாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு, முதுகலை ஆங்கில ஆசிரியர் வரதராஜ் (43) என்பவர் பணியாற்றி வருகிறார். அவருக்கு தற்போது மாநில அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. அவர், பிறவியில் இருந்தே, 80 சதவீத கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளியாவார்.பிறவியில் இருந்தே நரம்பு கோளாறால் பாதிக்கப்பட்டு கண் பார்வை இழந்தார். ராசிபுரம் அடுத்த பட்டணம், குச்சிக்காட்டைச் சேர்ந்த வரதராஜ், எம்.ஏ., எம்.எட்., எம்.பில்., படித்துள்ளார். தனக்கு கண்பார்வை இல்லை என்பதை ஒரு பொருட்டாக நினைக்காமல், சிறு வயதில் இருந்தே நன்கு படித்துள்ளார்.ஆசிரியர் பட்டப்படிப்பில் (எம்.எட்.,) தேர்ச்சி பெற்று, டி.ஆர்.பி., தேர்வு எழுதி, பதிவு மூப்பு அடிப்படையில் கடந்த, 1993ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.

தான் கற்ற கல்வியை மற்றவர்களுக்கு தக்க விதத்தில் தெரியப்படுத்தும் வகையில், மாணவ, மாணவியருக்கு சிறந்த கல்வியை புகட்டினார்.ஆங்கில பாடம் என்றாலே பள்ளி மாணவர்களுக்கு ஒருவித சலிப்பு ஏற்படும் என்ற நிலையை மாற்றி, வெறும் புத்தகத்தை மட்டும் வைத்து கல்வி சமூக அங்கீகாரத்துடன் கூடிய கல்வியை போதித்தார். தனது ஞாபக சக்தியால் மட்டுமே மாணவர்களுக்கு கல்வியை போதித்து வருகிறார். ஒரு நாளைக்கு, 16 மணி நேரத்துக்கும் அதிகமாக கல்விக் கற்று கொடுக்கிறார்.ஆசிரியர் வரதராஜூக்கு திருமணமாகி விஜயா என்ற மனைவியும், இந்துஜா, அபிநயா என இரண்டு மகள்களும், ஜெய்கி÷ஷார் என்ற மகனும் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து மாறுதாலாகி, வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றியவர், கடந்த, 1999ம் ஆண்டு முதல் சிவானந்தாசாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.இப்பள்ளியில், ஆங்கில பாடத்தில், கடந்த எட்டு ஆண்டுகளாக ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவ, மாணவியர், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து நல்லாசிரியர் வரதராஜ் கூறியதாவது:விருது கிடைத்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. இது, இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நிறைய சாதனை மாணவர்களை உருவாக்குவேன். இந்த விருது பெறுவதற்கு உறுதுணையாக இருந்த பள்ளி தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு கூறினார்.கடந்த, 2008ம் ஆண்டு 'காலைக்கதிர்' நாளிதழ், ராசிபுரம் ஞானமணி கல்வி நிறுவனம் சார்பில், சேலத்தில் நடந்த ஆசிரியர் தின விழாவில், சிறந்த ஆசிரியர் விருது வரதராஜூக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us