Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தலைவர்கள் பெயரில் கைதிகள் விடுதலை: நடுநிலையாளர்கள் எதிர்ப்பு

தலைவர்கள் பெயரில் கைதிகள் விடுதலை: நடுநிலையாளர்கள் எதிர்ப்பு

தலைவர்கள் பெயரில் கைதிகள் விடுதலை: நடுநிலையாளர்கள் எதிர்ப்பு

தலைவர்கள் பெயரில் கைதிகள் விடுதலை: நடுநிலையாளர்கள் எதிர்ப்பு

UPDATED : செப் 13, 2011 05:41 AMADDED : செப் 12, 2011 11:47 PM


Google News
Latest Tamil News
இந்தியத் தலைநகரான டில்லியிலேயே, அதுவும் நீதி வழங்கும் ஐகோர்ட்டிலேயே குண்டுகள் வெடிக்க, நாட்டின் பாதுகாப்புக்கு உச்சகட்ட அச்சுறுத்தல்கள் வந்துள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் அண்ணாதுரை பிறந்தநாளை ஒட்டி, முன்கூட்டி விடுதலை செய்யும் நடவடிக்கைகள் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளன.நீதித் துறைக்கே மிரட்டல் வந்து விட்டதோ... என, அச்சப்படும் அளவுக்கு, டில்லி ஐகோர்ட்டில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. 13 பேர் பலி, பலர் படுகாயம் என, தகவல்கள் வந்தாலும், பாதுகாப்பைப் பலப்படுத்துங்கள் என்ற கோரிக்கை, நாடு முழுவதும் எழுந்துள்ளது.

அனைத்து ஐகோர்ட்டுகளிலும், கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்த, உடனடியாக அவசரக் கூட்டங்கள் நடத்தி, முக்கிய முடிவுகளும், தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தான், வெகு அருகில் வந்து கொண்டே இருக்கிறது... அண்ணாதுரை பிறந்தநாள். அண்ணாதுரையின் பெயரைச் சொல்லி, கடந்த காலங்களில், சிறைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்தனர். தலைவர்கள் பிறந்த நாளில், கைதிகளை ஏன் விடுதலை செய்ய வேண்டும். தலைவர்கள் பிறந்தநாள் என்றால், அவர்களது பெயரைச் சொல்லும்படி, நல்ல திட்டங்கள் அறிவிக்கலாம்; செயல்படுத்தலாம்; ஏழைகளுக்கு உதவிகள் செய்யலாம்.

ஆனால், தமிழகத்தில் தான் வித்தியாசமாக, தண்டனை பெறும் குற்றவாளிகளை, நன்னடத்தை என்ற பெயரில் விடுவிக்கின்றனர். இந்த விடுவிப்பு தேவையா? இதனால், மக்களுக்கு என்ன பயன் என்பதை சம்பந்தப்பட்ட அரசும், கோரிக்கை விடுப்போரும், இன்னும் தெளிவுபடுத்த வில்லை.



உண்மையிலேயே ஒரு மனிதர், சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டு, சூழ்நிலையாலும், விரக்தியாலும் மட்டுமே குற்றம் செய்தார் என்று இருந்தால் தான், அவரை அரசியலமைப்புச் சட்ட சிறப்பு அதிகாரத்தின் படி, முன் விடுதலை செய்ய முடியும்.

ஆனால், உண்மையில் நடப்பது என்னவென்றால், அரசியல் கட்சிகள், தங்களது ஆட்சிக் காலத்தில், தங்களுக்கு வேண்டியவர்களின் ஆதரவாளர்கள், கட்சிகளுக்குத் தொண்டு செய்தவர்கள் என்ற பட்டியலை, மறைமுகமாகத் தயாரித்து, அதையும் விடுதலையாகும் கைதிகளின் பரிசீலனைப் பட்டியலில் சேர்த்து விடுவதாக, பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் உள்ளன.



கடந்த 2008ல், தி.மு.க., ஆட்சியில், 1,405 தண்டனைக் கைதிகளை, தமிழக அரசு விடுவித்தது. இதற்கு, அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மார்க்சிஸ்ட் கட்சியின், மதுரை மாநகராட்சி கவுன்சிலர் லீலாவதி, அரசியல் காரணங்களுக்காக, 1997ல் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற தி.மு.க., ஆதரவாளர்களும், நன்னடத்தையில் விடுதலையானதாக, அ.தி.மு.க.,வும், மார்க்சிஸ்டும் குற்றம்சாட்டின. தி.மு.க.,வுக்கு ஆதரவான, 500 கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, கடந்த காலங்களில் தெரிவித்தார்.தற்போதும், கைதிகளுக்கு வாழ்வு தரும், அண்ணாதுரை பிறந்தநாள் வருகிறது; 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிக்க, கோரிக்கைகள் எழுந்துள்ளன.



தலைவர்கள் பிறந்தநாளை, கைதிகள் விடுதலை நாளாக்க வேண்டுமா? இதனால், மீண்டும் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க, தலைவர்கள் பிறந்தநாள் உதவ வேண்டுமா? அல்லது நல்லதாக நான்கு திட்டங்களை அமல்படுத்தி, மக்களை வாழவைக்க வேண்டுமா? என்பதை, அரசுதான் இந்த நேரத்தில் குடிமக்களின் குடி சிறக்க எடுக்க வேண்டிய முக்கிய முடிவாகும்.



சொத்து கொலைகள் அதிகரிப்பு:தமிழகத்தில் சில ஆண்டுகளாக, சொத்து தொடர்பான கொலைகள் அதிகரித்துள்ளன. சென்னையில் 2006ல் வேளச்சேரியில், வயதான தம்பதியர் கொலை, 2008ல், எம்.ஜி.,ஆரின் உறவினர் விஜயன் கொலை, அசோக் நகரில், டாமின் முன்னாள் தலைவர் சரவணன் உள்ளிட்ட மூவர் கொலை ஆகியவை சொத்துக்காக நடந்தவை.வேளச்சேரி கொலை நடந்து ஐந்தாண்டுகள் ஆகியும், குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை. கடந்த மே மாதம் சென்னை மேற்கு மாம்பலத்தில், தனியாக இருந்த இரண்டு வயதான பெண்கள் நகை, பணத்திற்காக கொல்லப்பட்டனர்.



இதிலும், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.2007ம் ஆண்டு கொலை சம்பவங்களில் 278 அதாவது 17 சதவீதம், 2008, 2009ல் 14 சதவீதம், 2010ல் 17 சதவீதம் சொத்துப் பிரச்னை மற்றும் ஆதாயத்திற்காக நடந்தவை. அதிகப்படியான சொத்துகளுடன் தனியாக இருக்கும் வயதான தம்பதியினர், வயதான பெண்கள் அதிகளவில் கடந்த சில ஆண்டுகளில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.சொத்துக்காகவும், பல்வேறு காரணங்களுக்காகவும், 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், 2007ம் ஆண்டு 314 பேரும், 2008ம் ஆண்டு 327 பேரும், 2009ம் ஆண்டு 339 பேரும், 2010ம் ஆண்டு 337 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். கொலை சம்பவங்களை பொருத்தவரை 2007 முதல் 2010ம் ஆண்டு வரை சென்னை நகரில் அதிகளவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



சட்டம் என்ன சொல்கிறது?இந்திய அரசியல் சட்டப்படி, ஒரு அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, நன்னடத்தை கைதிகளை, முன்கூட்டியே விடுவிக்க வேண்டுமென்றால், சம்பந்தப்பட்டவரின் வழக்கு, சி.பி.ஐ., போன்ற மத்திய குற்றப் புலனாய்வுத் துறையால் விசாரிக்கப்பட்டதாகவோ, மத்திய அரசுத் துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதாகவோ, இந்திய அரசு சார்ந்த அதிகாரிகள், பிரமுகர்கள், பணியாளர்களைப் பாதித்ததாகவோ இருந்தால், அதில், மத்திய அரசின் ஒப்புதல் இன்றி, மாநில அரசு முன்கூட்டி விடுதலை செய்ய முடியாது.

சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் சிராஜுதீன் எழுதிய, சிறைக் கைதிகளின் உரிமைகள் (தி ரைட்ஸ் ஆப் பிரிசனர்ஸ்) என்ற புத்தகம், ஐகோர்ட்டால் அங்கீகரிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் அனைத்து நீதிபதிகளுக்கும் வழங்கப்பட்டது. இப்புத்தகத்தில், 'ஆயுள் தண்டனை கைதிகள் என்றால், குறைந்தது 14 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டியது கட்டாயம்' என்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.



இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத வழக்கறிஞர் ஒருவர் கூறும்போது, 'ஒரு வழக்கு பல ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு, கீழ்கோர்ட் தண்டனை வழங்கி, பின், அடுத்தடுத்து ஒவ்வொரு மேல் கோர்ட்டிலும் முறையீடு செய்து, விசாரித்த பின், தண்டனை முடிவாகிறது. ஆனால், அரசாளும் கட்சிகள் தங்களது விருப்பத்திற்கேற்ப, 10 ஆண்டுகள் முடித்தவர்கள், ஏழு ஆண்டுகள் முடித்தவர் என, தண்டனையைக் குறைத்துக் கொண்டே போகின்றன. இப்படிப்பட்ட தண்டனையை, அரசியல் ரீதியாக பாரபட்சமாகப் பயன்படுத்துவது, நீதித் துறையின் அனைத்துச் செயல்பாடுகளையும் அவமதிப்பது போன்றது' என்றார்.



சமூக பாதுகாப்பிற்கு ஆபத்தாகும் விடுதலை:ராஜிவ் கொலை வழக்கு கைதி நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இவர், 17 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து சிறையில் இருப்பதால், நன்னடத்தை விதிப்படி, முன்கூட்டி விடுவிக்கக் கோரி, கடந்த ஆண்டில், ஐகோர்ட்டில் வழக்கு வந்தது; விசாரணைக்குப் பின், இந்த மனு தள்ளுபடியானது. இந்த வழக்கில், நளினிக்கு எதிராக சுப்பிரமணியசாமி சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞரான ராஜகோபாலன், 'மாநில முதல்வராக இருந்த அண்ணாதுரை பிறந்த நாளுக்காக, நாட்டின் பிரதமராக இருந்த ராஜிவை கொன்ற குற்றவாளிகளை, முன்கூட்டியே விடுதலை செய்ய முடியுமா' என, வாதாடினார்.



குற்றவாளிகளை, அரசியல் காரணங்களுக்காக பாரபட்சமான முறையில் விடுதலை செய்யக் கூடாது. அரசியல் கட்சிகள், இந்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால், குற்றங்கள் பெருகி, சமூகத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.எரூப் சுதாகருக்கும், ஆந்திர அரசுக்குமான வழக்கில், 2006ம் ஆண்டு, சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில், 'நன்னடத்தையில் முன்கூட்டி விடுதலை செய்ய, பொது நலனை மட்டுமே முன்னிறுத்த வேண்டும்' எனக் கூறியுள்ளது. எனவே, அரசியல் சார்பான விடுதலைகள், நீதித் துறையின் உத்தரவுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறான உத்தரவுகளை, ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டால் ரத்து செய்ய முடியும்.ஜி. ராஜகோபாலன்ஐகோர்ட் மூத்த வழக்கறிஞர்



கைதிகள் சிறைக் குற்றங்கள் செய்திருக்கக் கூடாது; பரோல் விடுப்பில் தாமதம் ஏற்பட்டால், விடுவிக்க முடியாது. கொடுங்குற்றங்கள், கள்ளக்கடத்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் போன்றவற்றில் ஈடுபட்ட மோசமான குற்றவாளிகளை விடுதலை செய்யக் கூடாது. அதேநேரம், ஒரு சில வயதான, 70 வயதை கடந்தவர்கள் சில வழக்குகளில், சூழ்நிலைகளால் சிக்கி தண்டனைக்கு ஆளாகின்றனர். இயலாதவர்கள், மாற்றுத் திறனாளிகள் பலர், சூழ்நிலைக் கைதிகளாகும் போது, அவர்களை விடுவிக்கும் போது, மனநிறைவாக இருக்கிறது. இதில், அரசியல் சாயமோ, உள்நோக்கமோ இருந்தால், அரசியலமைப்பு கொடுத்த அதிகாரத்தின் நோக்கம், சமூகத்தையே பாதிக்கும் வகையில் அமையும்.

ஆர். ­­நடராஜ்தமிழக சிறைத் துறை முன்னாள் இயக்குனர், ஓய்வு பெற்ற டி.ஜி.பி.,



சிறைக் கைதிகள் விடுதலையில், தி.மு.க., அ.தி.மு.க., எந்தக் கட்சியானாலும், சாதி, மத, இன, அரசியல் பாகுபாடு பார்க்கக் கூடாது. பாரபட்சம் பார்த்தால், அரசியல் கட்சியினருக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டும் தான் வெளிவருவர். உண்மையான தகுதியாளர்கள் பாதிக்கப்பட்டு, அவர்கள் திருந்த வாய்ப்பில்லாமல் போகும். பரோலில் ஒரு நாள் தாமதமானாலும், அவர்களை அனுமதிப்பதில்லை. சூழ்நிலைகளால், பரோலில் தாமதமாகும் நன்னடத்தை கைதிகளையும் விடுவிக்க, சட்டத் திருத்தம் வேண்டும். குடும்ப வன்கொடுமைச் சட்டத்தில், பலர் வேண்டுமென்றே சிறைத் தண்டனைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

புகழேந்திஐகோர்ட் வழக்கறிஞர், சிறைக் கைதிகள் பாதுகாப்பு அமைப்பு இயக்குனர்



- நமது சிறப்பு நிருபர் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us