Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நில அபகரிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்

நில அபகரிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்

நில அபகரிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்

நில அபகரிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்

UPDATED : செப் 13, 2011 05:42 AMADDED : செப் 12, 2011 11:50 PM


Google News
Latest Tamil News
தி.மு.க., ஆட்சிக் காலத்தில் மேற்கு மண்டலத்தில் நடந்த 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான, நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் அமைக்கும் பணி, கோவையில் துரிதமாக நடக்கிறது.தேர்தல் பிரசாரத்தின் போது உறுதியளித்தபடி, முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதும், நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு தோற்றுவிக்கப்பட்டு, கூடுதல் டி.ஜி.பி., ஜார்ஜிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

மாவட்டந்தோறும் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு, புகார்கள் பெறப்படுகின்றன.தனிப்பிரிவு போலீசாரின் விசாரணையில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் (மேற்கு மண்டலம்) மட்டும் 5,000 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளன. இவற்றில் 160 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டு, 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



நில அபகரிப்பு வழக்குகளில் முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், ஈரோடு ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ., மணி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் மகன் பாரி மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.கோவை, ஈரோடு, திருப்பூர், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, விழுப்புரம், திருச்சி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், நில அபகரிப்பு வழக்குகள் அதிகமாக உள்ளன. விரைவில் இவ்வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்ற நோக்கில், தமிழகத்தில் எட்டு சிறப்பு கோர்ட்டுகளைத் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.நில அபகரிப்பு வழக்குகள் அதிகமாக உள்ள கோவையிலும், சிறப்பு கோர்ட் அமைக்க உத்தரவாகியுள்ளது. அருகில் உள்ள சில மாவட்ட போலீசாரின் வழக்குகளும் இக்கோர்ட்டில் விசாரிக்கப்படலாம்.



இச்சிறப்பு கோர்ட், கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் மாஜிஸ்திரேட் கோர்ட்டுகள் அமைந்துள்ள முதல் தளத்தில் அமைக்கும் பணி, சில நாட்களுக்கு முன் துவங்கியது.

ஜே.எம்.எண்: 2 கோர்ட் அலுவலகமாக செயல்பட்ட அறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன. கட்டடப் பணி முடிந்து, பெயின்டிங் மற்றும் தளவாடங்கள் பொருத்தும் பணி நடக்கிறது. ஒரு சில நாட்களில், கோவையில் நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் தயார் நிலைக்கு வரும்.இதன் பின், மாவட்ட, மாநகர நில அபகரிப்பு தடுப்புப் பிரிவுகளில் இருந்து வழக்குகள் பெறப்பட்டு, விசாரணை துவங்கும். விரைவில் இக்கோர்ட்டுக்கான நீதிபதி, அரசு வழக்கறிஞர் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இம்மாத இறுதிக்குள் கோர்ட் திறப்பு விழா நடந்து, விசாரணை துவங்கி விடும் என கோர்ட் ஊழியர்கள் தெரிவித்தனர்.-எம்.கனகராஜ்-







      Our Apps Available On




      Dinamalar

      Follow us