/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/விவசாய பயன்பாட்டிற்கு புதிய மாற்றுப் பாதை தேவைவிவசாய பயன்பாட்டிற்கு புதிய மாற்றுப் பாதை தேவை
விவசாய பயன்பாட்டிற்கு புதிய மாற்றுப் பாதை தேவை
விவசாய பயன்பாட்டிற்கு புதிய மாற்றுப் பாதை தேவை
விவசாய பயன்பாட்டிற்கு புதிய மாற்றுப் பாதை தேவை
ADDED : செப் 14, 2011 02:56 AM
பள்ளிப்பட்டு:விவசாய மக்களின் பயன்பாட்டிற்கும், பள்ளிப்பட்டில்
போக்குவரத்து நெரிசலை தடுக்கவும், ஊராட்சிக்குட்பட்ட புறம்போக்கு
நிலத்தில், புதிய மாற்றுப் பாதை அமைத்துத் தர வேண்டுமென, கலெக்டருக்கு
அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.பள்ளிப்பட்டு அடுத்த,
வெளியகரம் ஊராட்சிக்குட்பட்டது கீழ்கால்பட்டடை, வெளியகரம் காலனி, வெளியகரம்
ஆகிய கிராமங்கள். இக்கிராமங்களை சுற்றி அமைந்துள்ள விவசாய நிலங்களில்
கரும்பு, நெல் மற்றும் வேர்க்கடலை பயிர்கள் விளைகின்றன.
இந்த விளை
நிலங்களில், பள்ளிப்பட்டு மேம்பாலத்திலிருந்து, வெளியகரம் செல்லும் சாலையை
ஒட்டி அமைந்துள்ள, கொற்றலை ஆற்றின் ஒரு பகுதியான, குசா ஆற்றின் கரையை
ஒட்டியுள்ள விளை நிலங்களுக்கு, டிராக்டர் போன்ற வாகனங்கள் செல்ல
வழியில்லை.இந்த விளை நிலங்களுக்கு செல்ல வசதியாக, ஆற்றின் கரையை ஒட்டி
அமைந்துள்ள, புறம்போக்கு நிலம் வழியாக, ஆந்திர மாநிலத்தை இணைக்கும்
சித்தூர் சாலை வரை, புதிதாக சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென, அப்பகுதி
விவசாய மக்கள், திருவள்ளூர் கலெக்டருக்கு கோரிக்கை மனு
அளித்தனர்.அம்மனுவில், 'கீழ்கால்பட்டடை, வெளியகரம், வெளியகரம் காலனி ஆகிய
பகுதியில், ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இவற்றில், ஆற்றங்கரையை ஒட்டி
அமைந்துள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல, பொது வழி இல்லை.
இதனால், சாகுபடி செய்த கரும்பு, நெல் மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை,
வாகனங்களில் எடுத்து செல்லவும், ஏர் உழுவதற்கு டிராக்டர் செல்வதற்கும்
முடியாமல் உள்ளது. எதிர்பாராத விதமாக, கரும்பு பயிர் தீப்பற்றி எரிந்தால்,
அதை அணைக்க தீயணைப்பு வண்டி செல்ல வழியில்லை.இதனால், சில ஆண்டுகளுக்கு
முன், 20 ஏக்கர் கரும்பு பயிர் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இதனால்,
விவசாயிகள் விவசாயம் செய்ய ஆர்வம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே,
பள்ளிப்பட்டு மேம்பாலத்திலிருந்து, வெளியகரம் ஆற்றின் கரையை ஒட்டி
ஆக்கிரமித்துள்ள புறம்போக்கு நிலத்தை (சர்வே எண்கள்99, 100 மற்றும் 103
லிருந்து 108 வரை) சர்வே செய்து, புதிதாக சாலை அமைப்பதன் மூலம், விவசாயிகள்
பயனடைவார்கள்.இந்த புதிய சாலையை அமைக்க, வெளியகரம் ஊராட்சியில், 2009ம்
ஆண்டு அக்., 2ம் தேதி நடந்த கிராம சபைக் கூட்டத்தில், கிராம பொதுமக்கள்
முன்னிலையில், ஒப்புதல் அளிக்கப்பட்டது. மீண்டும், கடந்த மாதம் 15ம் தேதி
நடந்த கிராம சபைக் கூட்டத்திலும், பொதுமக்கள் இப்பிரச்னை குறித்து கேள்வி
எழுப்பினர். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த புதிய மாற்றுப்பாதை
அமைப்பதன் மூலம், பள்ளிப்பட்டு நகரின் வழியாக, சித்தூர் செல்லும் கரும்பு
லாரி, டிராக்டர், வேன், கார் போன்ற வாகனங்களுக்கு, புறவழிச் சாலையாகவும்
இது அமையும். இதனால், நகரில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், விபத்துகள்
நடைபெறுவதும் குறையும்.