Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சியில் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை : அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் பங்கேற்பு

திருச்சியில் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை : அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் பங்கேற்பு

திருச்சியில் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை : அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் பங்கேற்பு

திருச்சியில் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை : அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் பங்கேற்பு

ADDED : செப் 16, 2011 12:26 AM


Google News

திருச்சி: 'திருச்சியில் நடந்த மேற்கு தொகுதி இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து அரசியல் கட்சியினரும், பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும்' என தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் கோரிக்கை விடுத்தனர்.

திருச்சி மேற்கு சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்.,13ம் தேதி நடக்கிறது. இதுதொடர்பாக அரசியல் கட்சிகளுடன், தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நடத்திய ஆலோசனைக் கூட்டம் நேற்று காலை திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில், தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கட்சியினருடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். அவருடன் திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ, மாநகராட்சி கமிஷனர் வீரராகவ ராவ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். அ.தி.மு.க.,வினருடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ., மனோகரன், அவைத்தலைவர் நடராஜன் பங்கேற்றனர். கூட்டத்தில், 'தேர்தல் அமைதியாக நடத்த அ.தி.மு.க., முழு ஒத்துழைப்பு கொடுக்கும்' என்று தெரிவிக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டால், மேற்கு தொகுதியில் தொடர்ந்து பிரச்சாரம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. அதற்கு பிரவீன்குமார், இடைத்தேர்தலுக்கு முதல்நாளும், அன்றும் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் செய்ய கண்டிப்பாக அனுமதி கிடையாது என்று தெரிவித்து விட்டார். தி.மு.க.,வினருடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., சேகரன், முத்துச்செல்வம், அவைத்தலைவர் வண்ணை அரங்கநாதன் பங்கேற்றனர். 'பூத் சிலிப் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விநியோகிக்க வேண்டும், பணம் கொடுப்பதை முழுமையாக கண்காணிக்க வேண்டும், வேட்பாளர் பற்றி தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க நடவடிக்கை வேண்டும்' ஆகிய கோரிக்கைகளை தெரிவித்தனர். கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரவீன்குமார் தெரிவித்தார். தே.மு.தி.க.,வினருடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், மாநகர் மாவட்ட தே.மு.தி.க., செயலாளர் விஜயராஜன், அவைத்தலைவர் அலங்கராஜ் ஆகியோர் பங்கேற்றனர். 'எடமலைப்பட்டிபுதூரில் ரயில்வே மேம்பாலப்பணிகள் நடப்பதால், அப்பகுதியில் மக்களின் வசதிக்கேற்ப ஓட்டுச்சாவடியை மாற்றியமைக்கவேண்டும், அனைத்து கட்சியினருக்கும் பாரபட்சமின்றி ஒரேமாதிரியான வாய்ப்புகள் வழங்கவேண்டும், பணப்பட்டுவாடாவை தீவிரமாக கண்காணிக்கவேண்டும்' என்று தே.மு.தி.க., சார்பில் கோரிக்கை விடப்பட்டது. அதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரவீன்குமார் தெரிவித்தார். இவர்கள் தவிர, காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், பாரதிய ஜனதாக்கட்சி மாவட்ட தலைவர் பார்த்திபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகர செயலாளர் சுரேஷ், மார்க்சிஸ்ட் சார்பில் மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் ஆகியோருடனும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து கட்சியினரும் ஒட்டுமொத்தமாக இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடக்காமல் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை வேண்டும் என்ற தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரை கேட்டுக் கொண்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us