Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு

PUBLISHED ON : செப் 25, 2011 12:00 AM


Google News
Latest Tamil News

தே.மு.தி.க., கோவை மாநாடு ரத்து பின்னணி...! ''தலைநகரை பிடிக்க, மேயர் வேட்பாளர்களை எல்லா கட்சிகளும் அறிவிச்சிடுத்து...

காங்கிரஸ்ல யார் ஓய்...?'' என்ற கேள்வியுடன் விவாதத்தை துவக்கினார் குப்பண்ணா.



''காங்கிரஸ்ல விருப்ப மனுக்களை வாங்கிட்டிருக்காவ... எம்.பி., ஆதரவாளர், நவாஸ் மேயர் சீட் கேட்டிருக்காரு வே... வசந்தகுமார் பேரும் அடிபடுது... ஆனா, அவருக்கு மேயரா போட்டியிடறதுல சுத்தமா விருப்பம் இல்லை...'' என்றார் பெரியசாமி அண்ணாச்சி.



''அவர் ஏன் விரும்பலை...'' என்றார் குப்பண்ணா.



''போன முறை ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டாருல்ல... அப்ப, அஞ்சாறு கோடி ரூபாய் வரை செலவாயிட்டாம்... 'நம்ம கட்சிக்காரங்களை நம்பி களத்துல இறங்க முடியாது... பணத்தை வாங்கிட்டு போய் படுத்துக்குவாங்க... கைக்காசு செலாவாகறது தான் மிச்சமா இருக்கும்'னு சொல்றாராம்...'' என்றார் அண்ணாச்சி.



''தேர்தல் செலவு கணக்குல சேர்ப்போம்ன்னு சொன்னதால, நிகழ்ச்சியை ரத்து செஞ்சுட்டா ஓய்...'' என, அடுத்த மேட்டரை ஆரம்பித்தார் குப்பண்ணா.



''எந்த நிகழ்ச்சியை பா...'' என்றார் அன்வர்பாய்.



''தே.மு.தி.க., ஏழாவது ஆண்டு மாநாட்டை கோவையில நடத்தறதா இருந்தா ஓய்... உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிச்சதால, மாநில தேர்தல் கமிஷனர் அய்யரை, பண்ருட்டி ராமச்சந்திரன் பார்த்தார்... மாநாட்டை ஏற்கனவே அறிவிச்சுட்டதால, நடத்த அனுமதி தரணும்னு கேட்டார்...



''ஆனா, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்ல இருக்கறதால, 'மாநாடு நடத்தினா அந்த செலவை அந்த பகுதி தே.மு.தி.க., வேட்பாளர் கணக்குல சேர்ப்போம்'ன்னு சொல்லிருக்கா... இதைக் கேட்டதும், அடுத்த அரை மணி நேரத்துல, மாநாட்டை ரத்து செய்யறதா விஜயகாந்த் அறிவிச்சுட்டார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.



''நானும் ஒரு ரத்து தகவலை சொல்றேனுங்க...'' என அடுத்த தகவலை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.



''சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.



''கடந்த 22ம் தேதி, கோவை வேளாண்மை பல்கலையில பட்டமளிப்பு விழா நடக்கறதா இருந்தது... கவர்னர் ரோசய்யா, வேளாண் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துக்கறதா இருந்தாங்க... 21ம் தேதி ராத்திரி, உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிச்சதும், அந்த விழாவை ரத்து செய்யச் சொல்லிட்டாங்க... விழா ரத்து ஆனதால, கவர்னர் ரோசய்யா நேரா ஊட்டிக்கு ரெஸ்ட் எடுக்க போயிட்டாருங்க...'' என்றார் அந்தோணிசாமி.



''அ.தி.மு.க.,வுல, சிதம்பரம் நகராட்சித் தலைவர் பதவிக்கு, நகர செயலர் தோப்பு சுந்தர் மனைவி நிர்மலாவை அறிவிச்சிருக்காங்க... சுந்தர், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வத்தின் உறவினராம்... சிதம்பரத்துல பட்டப் பகல்ல, நடுரோட்டுல போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய வழக்கு இவர் மேல இருக்கு... அதனால, அதிருப்தி அடைஞ்ச அப்பகுதி அ.தி.மு.க.,வினர், வேட்பாளரை மாத்தணும்னு கேட்டு, கட்சித் தலைமைக்கு மனு அனுப்பியிருக்காங்க பா...'' என, கடைசி மேட்டரை கூறிவிட்டு எழுந்தார் அன்வர்பாய்; பெஞ்ச் அமைதியானது.



எம்.எல்.ஏ., கனவில் மிதக்கும் தி.மு.க., வக்கீல்கள்!



''ஆதாயம் பார்க்காம வேலை பார்த்தா, உரிய நேரத்துல பலன் கிடைக்கும்னு, தி.மு.க., தலைவர் சொல்லிருக்காரு ஓய்...!'' என, விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.



''யாருக்கு, எதுக்காக இப்படிச் சொன்னாருன்னு சொல்லுங்க...'' என்று கேட்டார் அந்தோணிசாமி.



''தி.மு.க., வக்கீல்கள் அணி ஆலோசனைக் கூட்டம் சமீபத்துல நடந்துச்சோ இல்லியோ... அதுல, கருணாநிதி பேசறப்ப, 'சிறையில இருக்கற கட்சிப் பிரமுகர்களை, வக்கீல்கள் தங்களோட வாதத் திறமையால அவங்களை எல்லாம் வெளியில கொண்டுவரணும்... இதுக்காக, கட்சித் தலைமையை எதிர்பார்த்து காத்திருக்கக் கூடாது... இதற்கான பலன், பொதுத்தேர்தலப்ப கிடைக்கும்'னு, உறுதி கொடுத்திருக்கார் ஓய்...



''இதனால, கட்சித் தலைமை மேல அதிருப்தியில இருந்தவக்கீல்கள் எல்லாம், தலைவர் பேச்சைக்கேட்டதும், இப்பவே எம்.எல்.ஏ., கனவுல மிதக்க ஆரம்பிச்சுட்டா ஓய்...'' என்றார் குப்பண்ணா.



''பெரியாறு அணையில நடக்கற ஆய்வு விவரங்கள், தமிழக நிருபர்களுக்கு தெரியாம பார்த்துக்கறது அதிகாரிகளுக்கு முக்கிய வேலையா இருக்கு பா...'' என, அடுத்த மேட்டருக்குள் நுழைந்தார் அன்வர்பாய்.



''கேரள அதிகாரிகளா வே...'' என்று கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.



''சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, பெரியாறு அணையை ஆய்வு செய்யற பணி நடந்துட்டு இருக்குது பா... ஆய்வுப் பணிகள் நடக்கும் இடத்துல, நிருபர்களை அனுமதிக்கக் கூடாதுன்னு, சுப்ரீம் கோர்ட் சொல்லிருக்காம்... ஆனா, கேரள நிருபர்கள், அணைப் பகுதிக்கு சுதந்திரமா வந்து, செய்தி சேகரிச்சுட்டுப் போறாங்க...



''இதை, தமிழக அதிகாரிகள் சுத்தமாக கண்டுக்கறது கிடையாது... அதே நேரத்துல, தமிழக நிருபர்களை, அணைப்பகுதி பக்கம் நுழையவே விட மாட்டேங்கறாங்க பா...'' என விளக்கினார்அன்வர்பாய்.



''சென்னை அரசு பொது ஆஸ்பத்திரியில, 'ஏசி' அறைகள்ல, 'பலான' வேலைகள் ஜோரா நடக்குதாம் வே...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார் அண்ணாச்சி.



''விவரமா சொல்லுங்க...'' என்றார்அந்தோணிசாமி.



''ஆஸ்பத்திரியில 25 'ஏசி' அறைகள் கொண்ட கட்டண வார்டுகள் இருக்குது வே... இந்த 25 அறைகளும், நோயாளிகளுக்கு வாடகைக்குவிடுவதற்காக கட்டப்பட்டது... முந்தைய ஆட்சியில, எட்டு அறைகளை மட்டும் நோயாளிகளுக்கு விடலையாம்... ஓய்வு நேரத்துல, டாக்டர்கள் தங்கறதுக்கும், தூங்கறதுக்கும் பயன்படுத்தினாங்களாம்...



''டாக்டர்களுக்கு, அந்தந்த டூட்டி வார்டுகள்ல, 'ஏசி' அறைகள் இருக்கு வே... அதுபோக நோயாளிகளுக்கு பயன்பட வேண்டிய எட்டு, 'ஏசி' அறைகளையும் டாக்டர்கள் பயன்படுத்திட்டு இருக்காவ...



இதனால, போன ஐந்து வருஷத்துல 17 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுருக்குன்னு ஊழியர்கள் சொல்லுதாவ...



''அதோட, 'பலான' வேலைகளும் நடக்கறதா புகார் வருது வே... இதுக்கெல்லாம், மாஜி மந்திரியின் ஆசிர்வாதம் பெற்ற ஒரு அதிகாரி தான் காரணமாம்...'' என, முடித்துவிட்டு கிளம்பினார் அண்ணாச்சி; பெஞ்சில் அமைதி நிலவியது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us