ADDED : செப் 24, 2011 09:47 PM
பண்ணைக்காடு : பண்ணைக்காடு பேரூராட்சியை கைப்பற்ற, பலமுனை போட்டி நிலவும் நிலையில், அ.தி.மு.க., தீவிரமாக களப்பணியை துவக்கியுள்ளது.
சட்டசபை தேர்தலை கூட்டணியாக சந்தித்த கட்சிகள், உள்ளாட்சியில் தனித்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பண்ணைக்காடு பேரூராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளரை அறிவித்து தேர்தலுக்கு தயாராகி உள்ளது. தி.மு.க.,- தே.மு.தி.க.,- காங்., தொண்டர்கள், வேட்பாளர் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். மேலும், கட்சியில் 'சீட்' கிடைக்காத நிலையில், சிலர் சுயேச்சையாகவும் களம் இறங்க ஆயத்தமாகி வருகின்றனர். கடந்த முறை பேரூராட்சியை, தி.மு.க., கைபற்றியுள்ளது. சட்டசபை தேர்தலில் கணிசமான ஓட்டுக்களை பெற்று, அ.தி. மு.க.,வை பின்னுக்கு தள்ளி பலத்தை நிரூபித்துள்ளது. தே.மு.தி.க., வும் கணிசமான ஓட்டுக்களை தக்க வைத்துள்ளது. காங்., கட்சிக்கும் ஓரளவு பலம் உண்டு. இதனால் அ.தி.மு.க., விற்கு கடும் சவால் ஏற்பட்டுள்ளது. மேலும், சுயேச்சைகளின் ஆதிக்கமும் எதிர்பார்க்கலாம். 'எதுவாயினும் பேரூராட்சியை கைப்பற்றியே தீர வேண்டும்,' என்ற முனைப்பு, அனைத்து கட்சியினர் மத்தியிலும் நிலவுவதால், தேர்தல் சுறுசுறுப்பு அடைந்துள்ளது.


