Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/உணவுப் பொருட்கள் கழிவு குப்பையால் மின்தடை:சென்னை நகரில் இதுவும் பிரச்னை

உணவுப் பொருட்கள் கழிவு குப்பையால் மின்தடை:சென்னை நகரில் இதுவும் பிரச்னை

உணவுப் பொருட்கள் கழிவு குப்பையால் மின்தடை:சென்னை நகரில் இதுவும் பிரச்னை

உணவுப் பொருட்கள் கழிவு குப்பையால் மின்தடை:சென்னை நகரில் இதுவும் பிரச்னை

ADDED : செப் 24, 2011 11:22 PM


Google News

சாலையோர மின் இணைப்பு பெட்டிகளுக்கு அருகே, குப்பைத் தொட்டிகளை வைப்பதால், குப்பையை,'ருசிக்க' வரும் எலி, பெருச்சாளி போன்றவை, மின் ஒயர்களை பதம் பார்த்து வருகின்றன.

இதனால், தேவையற்ற மின்தடையும், மின் வாரியத்திற்கு கூடுதல் செலவும் ஏற்பட்டு வருகின்றன.



சென்னை மாநகரத்திற்கு, குப்பை ஒரு சாபக்கேடு. தினமும் அதிகரிக்கும் குப்பையைக் கையாள, மாநகராட்சி மேற்கொள்ளும் வழக்கமான நடைமுறைகளைத் தாண்டி, குப்பை அதிகரித்து வருகிறது.சுகாதார சீர்கேடு, தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும் இந்த குப்பைக் குவியல், தற்போது அந்தந்த தெருக்களில், மின் துண்டிப்பு ஏற்படக் காரணமாக அமைந்து விடுகிறது. பொதுவாக, தெருக்களின் பிளாட்பாரங்களின் முன்பகுதியில், மின்இணைப்புப் பெட்டி அமைக்கப்பட்டிருப்பது வழக்கம்.



இது அந்தப் பகுதி மின் இணைப்புத் திறனுக்கு ஏற்ப, சிறிய இரும்பு அலமாரி அல்லது பெரிய அளவிலான அலமாரி போன்ற தோற்றத்தில் இருக்கும். இதன் முகப்பில், போஸ்டர்களை ஒட்டி நாசப்படுத்துவது உண்டு. மறைவிடமாகக் கருதி, சிறுநீர் கழிப்பதும் ஒரு சிலரது நாகரிகம் ஆகும்.ஆனால், மாம்பலம் போன்ற மக்கள் நெருக்கம் கொண்ட பகுதிகளில், இம்மாதிரி மின் இணைப்புப் பெட்டிக்கு அருகே, நீல்கமல் நிறுவன குப்பைத் தொட்டியும் இருக்கும்.



அது தவிர, பிளாட்பார ஓரங்களில் இருக்கும் இப்பெட்டிகளுக்கும், வீடுகளின் காம்பவுண்ட் சுவர்களுக்கும் இடையே சிறிய இடைவெளி கொண்டதாக இருக்கும்.

பெரிய குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழியும் போது, கொட்டப்படும் குப்பை, இந்த மின் இணைப்புப் பெட்டியின் அருகே குவிவதும் வழக்கமாக உள்ள விஷயம்.

அதே போல, வீட்டின் உணவுப் பொருட்கள்மீதமும் இப்பெட்டிகள் அருகே கொட்டப்படுவது உண்டு. மீதமான உணவுப் பொருட்கள், மாமிச உணவின் எச்சங்கள் இதனருகே போடப்படுவதும் உண்டு.



இரவு நேரங்களில் அந்த உணவை இழுத்துச் சென்று, அந்த மின்பெட்டிகளுக்கு அடியே வைத்துக் கொண்டு எலி, பெருச்சாளிகள் உண்ணும். அப்போது, அதிலுள்ள மின் இணைப்பு சர்க்யூட்டில் எலி, அல்லது பெருச்சாளி உடல் பட்டால், உடனே மின் இணைப்பு துண்டிப்பாகி மின் தடை ஏற்படும். இதுவே, பெரிய அளவிலான மின் இணைப்புப் பெட்டிகளில் ஏற்படுவதும் உண்டு.மாம்பலம் கோதண்ட ராமசாமி தெருவில் உள்ள மின் இணைப்பு நிலையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, மின்தடையை அகற்ற தகவல் வந்து, அதை சீர்செய்யச் சென்றால், பல சமயங்களில் இப்பிரச்னை காரணம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

அதைத் தவிர, இம்மாதிரி மின் இணைப்புப் பெட்டிகள் அருகே, ஈரம்மிக்க கழிவுகளை, கண்டபடி கொட்டுவதால் சிதறி, அதிலுள்ள ஈரப்பதம் மின்பெட்டிகளை காலப்போக்கில் பாதித்து, அடிப்பகுதியில் பெரிய துவாரம் ஏற்படுகிறது.



அதைத் தொடர்ந்து பெருச்சாளிகள், சமயத்தில் பூனை போன்றவை உணவுப் பொருட்களுடன் நுழைந்து, இம்மாதிரி மின்தடை ஏற்பட காரணமாகின்றன என்று கூறப்படுகிறது.சிறிய அளவிலான மின் இணைப்பு பெட்டியை, முழுவதும் மாற்ற, மின்துறைக்கு செலவு 6,000 ரூபாய். கூடுதல் செலவோடு, மின்வாரிய ஊழியர்களுக்கு பணிச்சுமையை தேவையற்ற வகையில் அதிகரிக்கிறது.



மின்சார இணைப்பில் கோளாறு அல்லது மற்ற பிரச்னைகளுக்காகஉடனடியாக கவனிக்க வேண்டிய நிலையில், இம்மாதிரி பிரச்னையால் ஏற்படும் மின்தடை அதிகரித்து வரும் புதிய பிரச்னையாகும்.தெருவில் குப்பை போடும் போது, மக்களின் அத்தியாவசியத் தேவைகளை பாதிக்கும் செயலாக அமைகிறதா என்பதை, சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொண்டால், தேவையற்ற மின்தடையை தவிர்க்கலாம்.- நமது சிறப்பு நிருபர் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us