Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/வண்டலூர் பூங்கா விலங்குகளுக்கு வெள்ளைப்பன்றி இறைச்சி?

வண்டலூர் பூங்கா விலங்குகளுக்கு வெள்ளைப்பன்றி இறைச்சி?

வண்டலூர் பூங்கா விலங்குகளுக்கு வெள்ளைப்பன்றி இறைச்சி?

வண்டலூர் பூங்கா விலங்குகளுக்கு வெள்ளைப்பன்றி இறைச்சி?

ADDED : செப் 27, 2011 10:58 PM


Google News

வண்டலூர் உயிரியல் பூங்காவில், பராமரிக்கப்பட்டு வரும் விலங்குகளுக்கு மாட்டிறைச்சிக்கு பதில், வெள்ளை பன்றி இறைச்சியை வழங்கும் திட்டம் ஒன்று பரிசீலனையில் உள்ளது.

இத்திட்டம் செயல்படுத்தும் போது, மாமிசம் உண்ணும் விலங்குகளுக்கு சுகாதாரமான, சுவையான இறைச்சி கிடைக்கும். வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் யானை, ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி, காட்டு மாடுகள் ஆகிய விலங்குகளுக்கு தேவையான தினசரி 1,500 கிலோ தீவன புற்கள் முன்னர் வெளியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன. ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் இதற்கு செலவானது. இந்நிலையில், பூங்காவில், நீர் பறவைகள் சரணாலயம் அருகே, ஓட்டேரி முனையில், தீவனப் புற்கள் விளைவிக்கப்பட்டன. இந்த ஏற்பாட்டின்படி, தற்போது தினசரி 3,000 கிலோ தீவன புற்கள் கிடைக்கின்றன. பூங்கா நிர்வாகத்தின் இந்த புதிய முயற்சியால், ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய் செலவு குறைந்ததுடன், விலங்குகளுக்கும் சுத்தமான தீவன புற்கள் கிடைத்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக, மாமிசம் உண்ணும் விலங்குகளுக்கான இறைச்சியை, பூங்கா வளாகத்திலேயே உருவாக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.



சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளுக்கு வாரத்திற்கு ஆறு நாட்கள் மாட்டிறைச்சி வழங்கப்படுகிறது.

இந்த வகையில், தினசரி 500 கிலோ மாட்டிறைச்சி, வெளியிடங்களில் இருந்து பெறப்பட்டு, விலங்குகளுக்கு உணவாக தரப்படுகிறது.இறைச்சி வாங்குவதற்கான செலவுத்தொகையை குறைக்கும் வகையில், வெள்ளை பன்றிகளை வளர்த்து, அவற்றின் இறைச்சியை விலங்குகளுக்கு வழங்கும் ஒரு திட்டம் பரிசீலனையில் உள்ளது.

இது குறித்து பேசிய பூங்கா அதிகாரி ஒருவர், ''பூங்கா வளாகத்திலேயே குறிப்பிட்ட ஒரு இடத்தில், வெள்ளை பன்றிகளை வளர்ப்பதன் மூலம் விலங்குகளின் இறைச்சி தேவையை சமாளிக்க முடியும். இத்திட்டம் தற்போது பரிசீலனையில் தான் உள்ளது, அரசு அனுமதி அளித்த பின்னரே செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.



'டிராம்' இயக்க திட்டம் : வண்டலூர் உயிரியல் பூங்காவில் 6 கி.மீ., தூரம் வரை நடந்து சென்றால் தான், பார்வையாளர்கள் அனைத்து விலங்குகளையும் பார்க்க முடியும். வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் நடக்க முடியாது என்பதற்காக, தற்போது பேட்டரி கார்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒரு பேட்டரி காரில் 12 பேர் வரை செல்லலாம். ஆனால், அதிகரித்து வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு, தற்போதுள்ள பேட்டரி கார்கள் போதுமானவையாக இல்லை. எனவே, ஒரே நேரத்தில் 50 பேர் செல்லக்கூடிய, 'டிராம்' வண்டிகளை இயக்க, வண்டலூர் பூங்கா நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது. இதற்கான திட்டம் வடிவமைக்கப்பட்டு, உயர் அதிகாரிகளின் பார்வைக்கும், அனுமதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



- எஸ்.உமாபதி -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us