ADDED : செப் 28, 2011 11:44 PM
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக ஸ்ரீரங்கம் ராகவேந்திரா வளைவு தெப்பக்குளம் போல காட்சி அளித்து வருகின்றது.
இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீராகவேந்திரா வளைவு. இதன் அருகில் தான் ஸ்ரீரங்கம் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. ஸ்ரீரங்கம் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. பலத்த மழை பெய்தால் ராகவேந்திரா வளைவில் மழைநீர் தெப்பக்குளம் போல் தேங்கி நின்று விடுகின்றது. தண்ணீர் போக வழியில்லாமல் ஆங்காங்கே மழைநீர் பரவி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றது. பஸ்ஸூக்குச் செல்லும் பயணிகள் வெளியூரில் இருந்து ஸ்ரீரெங்கநாதரை தரிசிக்க வரும் பக்தர்கள் முகம் சுழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். இந்த அவலநிலை பல ஆண்டாக நீடித்து வருகின்றது. விரைவில் பருவ மழை தொடங்க உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே ஸ்ரீராகவேந்திரா வளைவு பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


