/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/எதிர்க்கட்சிகளை டிபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்எதிர்க்கட்சிகளை டிபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்
எதிர்க்கட்சிகளை டிபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்
எதிர்க்கட்சிகளை டிபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்
எதிர்க்கட்சிகளை டிபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்
ADDED : செப் 30, 2011 01:56 AM
புதுச்சேரி : 'இந்திரா நகர் தொகுதியில் எதிர்க்கட்சிகளை டிபாசிட் இழக்கச்
செய்ய வேண்டும்' என, முதல்வர் ரங்கசாமி பேசினார். என்.ஆர்.காங்.,
கட்சியின் ஆலோசனைக் கூட்டம் அண்ணாமலை ஓட்டலில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், என்.ஆர். காங்., வேட்பாளர் தமிழ்ச்செல்வனை முதல்வர்
அறிமுகப்படுத்தினார். முன்னதாக, கட்சியின் பொதுச் செயலாளர் பாலன்
வரவேற்றார். அமைச்சர்கள் ராஜவேலு, தியாகராஜன், எம்.எல்.ஏ.,க்கள் நேரு,
வைத்தியநாதன், அசோக் ஆனந்த், செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வு பெற்ற எஸ்.பி., விஜயக்குமார், வக்கீல்
பக்தவச்சலம் பங்கேற்றனர். கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: இடைத்
தேர்தல், நமது கட்சிக்குப் பட்டை தீட்டுவதாக இருக்க வேண்டும். கடந்த
தேர்தலை விட அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற வேண்டும்.
இடைத் தேர்தலில் நாம் தோல்வியடைந்தால், ஆட்சி மாற்றம் வரும் என எதிர்க்
கட்சிகள் கூறி வருகின்றன. ஒரு சில மாதங்களிலேயே ஆட்சி மாற்றம் வேண்டும்
என்றால் என்ன அர்த்தம்... அந்த எண்ணம் அவர்களுக்கு வரலாமா... இது, மக்கள்
விரும்பி கொடுத்த ஆட்சி. நல்லாட்சி வேண்டும் என்பது மக்களின் எண்ணம். அதைக்
கெடுக்க வேண்டும் என இரு எதிர்க்கட்சிகளும் செயல்படுகின்றன.
அப்படிப்பட்டவர்கள் இந்தத் தொகுதியில் போட்டியிட வரலாமா... அந்த எண்ணம்
அவர்களுக்கு எப்போதும் வராத அளவிற்கு, எதிர்க்கட்சிகள் டிபாசிட் இழக்கும்
அளவுக்கு நாம் தேர்தல் பணியாற்ற வேண்டும். ஆட்சியைப் பற்றி யாரும் குறை கூற
முடியாது. இலவச அரிசி, முதியோர் பென்ஷன், இலவச துணி, சென்டாக்
மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் என தேர்தல் வாக்குறுதிகளை, ஆட்சிக்கு வந்த
மூன்று மாதங்களிலேயே நிறைவேற்றி உள்ளோம். எந்த விதத்திலும் குறைவான ஆட்சி
அல்ல, நிறைவான ஆட்சிதான்.
நமது கட்சி மீதும், ஆட்சி மீதும் வெறுப்புள்ளவர்கள் யாருமில்லை. இந்திரா
நகரில் இந்த முறை இன்னும் அதிக வித்தியாசத்தில் என்.ஆர். காங்., வேட்பாளரை
வெற்றி பெறச் செய்ய வேண்டும். சிறு சிறு குறைகள் இருக்கலாம். அதை
கட்சியினர் பேசி சரி செய்ய வேண்டும். இடைத் தேர்தலில் மிக அதிக ஓட்டு
வித்தியாசத்தில் வெற்றி பெறும்வகையில் இன்றிலிருந்தே தேர்தல் பணிகளைத்
துவக்க வேண்டும். இவ்வாறு ரங்கசாமி பேசினார். வேட்பாளர் தமிழ்ச்செல்வன்
ஏற்புரையாற்றினார். கட்சி நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் ஆனந்தபாஸ்கரன்,
முன்னாள் சேர்மன்கள் ஜெயபால், நடராஜன், பாண்டியன், லூயி கண்ணையா, அனிபால்
நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.