வறுமைக்கோடு வரம்பு: நாளொன்றுக்கு 32 ரூபாய்; அலுவாலியா கைவிரிப்பு
வறுமைக்கோடு வரம்பு: நாளொன்றுக்கு 32 ரூபாய்; அலுவாலியா கைவிரிப்பு
வறுமைக்கோடு வரம்பு: நாளொன்றுக்கு 32 ரூபாய்; அலுவாலியா கைவிரிப்பு

வறுமைக் கோட்டுக்கான வரம்பு குறித்து, மத்திய திட்ட கமிஷன் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நகர்ப்புறங்களில் வசிப்போர், தினமும் 32 ரூபாய்க்கு மேல் செலவிட்டால், அவர்கள் வறுமைக் கோட்டு வரம்பிற்குள் வரமாட்டார்கள். அதேபோல், கிராமப்புறங்களில் வசிப்போர், தினமும் 26 ரூபாய்க்கு மேல் செலவிட்டால், அவர்களும் இந்த வறுமைக் கோட்டுக்கு கீழ் வரமாட்டார்கள் என, தெரிவிக்கப்பட்டது.
திட்ட கமிஷனின் இந்த வரையறை, சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக, தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சக்சேனா உள்ளிட்டோர், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'திட்ட கமிஷன் கூறிய 32 ரூபாயை வைத்து, நாய்கள் போன்ற விலங்குகள் மட்டுமே வாழ முடியும்'என, சக்சேனா கூறியிருந்தார்.
காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலும், இதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம், திட்ட கமிஷன் துணை தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார்.
இதையடுத்து, திட்ட கமிஷனின் வறுமைக் கோட்டுக்கான வரம்பில் மாற்றம் கொண்டு வரப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய ஊரக மேம்பாட்டு துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேசை, திட்ட கமிஷன் துணை தலைவர் அலுவாலியா நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், திட்ட கமிஷன் உறுப்பினர்கள் அபிஜித் சென், மிர் ஷா, செய்யது ஹமீது, நரேந்திரா ஜாதவ் ஆகியோரும் பங்கேற்றனர். அப்போது, வறுமைக்கோட்டுக்கான வரையறை குறித்தும், அதற்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்தும், விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதன்பின், ஜெய்ராம் ரமேசும், அலுவாலியாவும், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: வறுமையில் உள்ளோர் குறித்து, மாநில அளவில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளுக்கும், அரசு திட்டங்களின் பயனாளிகளின் எண்ணிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை. தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள 32 ரூபாய் என்ற வரையறை, கைவிடப்படும். இது தொடர்பாக, திட்ட கமிஷனும், ஊரக மேம்பாட்டு துறை அமைச்சகமும் இணைந்து, புதிய முறையை அறிவிக்கவுள்ளன. இந்த புதிய முறையில், எந்த ஒரு ஏழைக்குடும்பமும் விடுபட்டு போகாது. வறுமைக்கோட்டுக்கும், ஊரக மேம்பாட்டுக்கும் உள்ள தொடர்பு குறித்த விஷயத்தில், அனைத்து தரப்பினரிடையே ஒருமித்த கருத்து எட்டப்படும்.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை அடையாளம் காண்பதில் தற்போது பிரச்னை உள்ளது. சமூக பொருளாதாரம் மற்றும் ஜாதி அடிப்படையில் நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புகளில் கிடைக்கும் விவரங்களை வைத்து, இந்த பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
திட்ட கமிஷன் துணை தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறியதாவது: ஜெய்ராம் ரமேசும், நானும், வறுமைக்கோட்டுக்கான வரையறை விவகாரம் குறித்து, விரிவாக ஆலோசித்தோம். இதில், குறிப்பிடத்தக்க கணிசமான விவகாரங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வறுமைக்கோட்டுக்கான வரையறை, 32 ரூபாய் என்பது, திட்ட கமிஷனின் கருத்து அல்ல. இது 1973ல் கணக்கிடப்பட்டது. சுரேஷ் தெண்டுல்கர் கமிட்டியை மையமாக வைத்து, புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த வரையறை நிர்ணயிக்கப்பட்டது.
வறுமையை, திட்ட கமிஷன் குறைத்து மதிப்பிட்டு விட்டதாக, ஒரு தரப்பினர் விமர்சனம் செய்கின்றனர். இது உண்மை அல்ல. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை திட்ட கமிஷன் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த 32 ரூபாய் என்ற வரையறை, அரசு திட்டங்களால் பயனடையும் பயனாளிகளை பாதிக்காது. இந்த இரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு அலுவாலியா கூறினார்.


