தேர்தலில் பாரபட்சமின்றி செயல்படணும்
தேர்தலில் பாரபட்சமின்றி செயல்படணும்
தேர்தலில் பாரபட்சமின்றி செயல்படணும்
ADDED : அக் 05, 2011 12:38 AM
தஞ்சாவூர்: ''தேர்தல் பணியில் உறுதியுடனும், நடுநிலையுடனும், பாரபட்சமின்றியும் செயல்பட வேண்டும்,'' என்று அலுவலர்களிடம் தஞ்சை கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்தார்.உள்ளாட்சி தேர்தலில் மின்னணு இயந்திரங்களை கையாள்வது குறித்த பயிற்சி வகுப்பு தஞ்சையில் நடந்தது.மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பாஸ்கரன், பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து பேசியதாவது:தஞ்சை மாவட்டத்தில் வரும் 17 மற்றும் 19 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. நகராட்சி மற்றும் பேரூராட்சி பதவிகளுக்கு முதன்முறையாக மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.நகராட்சி பதவிகளுக்கான தேர்தலில் இரண்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஒன்றில் நகராட்சி தலைவருக்கும் மற்றொன்றில் நகராட்சி உறுப்பினருக்கும் வாக்களிக்க வேண்டும்.அதே போல டவுன் பஞ்., பதவிகளுக்கான தேர்தலில் இரண்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஒன்றில் தலைவருக்கும், மற்றொன்றில் உறுப்பினருக்கும் வாக்களிக்க வேண்டும்.
வாக்குப்பதிவு தலைமை அலுவலரின் கீழ் நான்கு பேர் கொண்ட வாக்குப்பதிவு அலுவலர் குழு அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி தலைமை அலுவலர் அனைத்து பொறுப்புகளையும் தலைமை ஏற்று செயல்பட வேண்டும்.வாக்குச்சாவடி அலுவலர்-ஒன்று என்பவர், நகராட்சி தலைவர் தேர்தலுக்கான குறியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை பராமரித்தல், வாக்காளர் அடையாளர் சரிபார்த்தல், வாக்காளர் பதிவேடு பராமரித்தல், துண்டு சீட்டு வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.வாக்குச்சாவடி அலுவலர்- இரண்டு என்பவர், அழியாத மை வைக்க வேண்டும்.வாக்குச்சாவடி அலுவலர்- மூன்று என்பவர் தலைவர் தேர்தலுக்கான துண்டு சீட்டு பெற்றுக் கொள்ளுதல், தலைவர் தேர்தலுக்கான கட்டுப்பாட்டு கருவி பொறுப்பாளராக செயல்பட வேண்டும். வாக்குச்சாவடி அலுவலர்- நான்கு என்பவர் நகராட்சி உறுப்பினர்களுக்கான துண்டு சீட்டு பெறும் பணியை மேற்கொள்ள வேண்டும்.வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவை துவக்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த வாக்குகளும் பதிவு செய்யப்படவில்லை. இயந்திரம் நன்கு இயங்கும் நிலையில் உள்ளது என்பது குறித்து வாக்குச்சாவடி முகவர்களுக்கு செயல்முறை விளக்கமாக செய்து காட்ட வேண்டும்.வாக்குப்பதிவை தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் துவக்கி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும்.வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் உள்ளே செல்லவும், வரவும் தனித்தனி வழிகள் அமைக்கப்பட வேண்டும். ஆண், பெண் வாக்காளர்களுக்கு தனித்தனி வரிசைகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.வாக்குப்பதிவை அமைதியாகவும், நல்ல முறையிலும் நடத்த வேண்டும். தேர்தல் பணியில் உறுதியுடனும், நடுநிலையுடனும், பாரபட்சமின்றியும் செயல்பட வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பாஸ்கரன் பேசினார்.


