Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தமிழக மின் துறைக்கு சோதனை மேல் சோதனை : மின் கருவி ஏற்றி வந்த லாரி விபத்து

தமிழக மின் துறைக்கு சோதனை மேல் சோதனை : மின் கருவி ஏற்றி வந்த லாரி விபத்து

தமிழக மின் துறைக்கு சோதனை மேல் சோதனை : மின் கருவி ஏற்றி வந்த லாரி விபத்து

தமிழக மின் துறைக்கு சோதனை மேல் சோதனை : மின் கருவி ஏற்றி வந்த லாரி விபத்து

ADDED : அக் 06, 2011 09:59 PM


Google News

தமிழக மின் நிலையத்திற்கு கருவிகள் கொண்டு வந்த லாரி, மத்தியப் பிரதேசத்தில் பாலம் இடிந்து, ஆற்றில் கவிழ்ந்தது.

இதில், 20 கோடி ரூபாய் மதிப்பிலான, 'ஸ்டேட்டார்' என்ற கருவி, தண்ணீரில் மூழ்கியது. இதனால், வடசென்னை அனல் மின் நிலையப் பணிகள், நான்கு மாதங்கள் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

வட சென்னை அனல் மின் நிலையம் அருகே, 1,200 மெகாவாட் திறனில், தலா 600 மெகாவாட் கொண்ட இரண்டு புதிய மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதன் பணிகள், கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வருகின்றன.

பாரத மிகுமின் நிலையம் (பெல்), இந்திய கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவியுடன், 4,650 கோடி மதிப்பில், இரண்டு நிலையங்களும் அமைக்கப்படுகின்றன. முதல் யூனிட் வரும் ஜனவரியிலும், அடுத்த யூனிட் பிப்ரவரியிலும் உற்பத்திப் பணிகளைத் துவங்கும் என்ற எதிர்பார்ப்புடன், பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

நாடு முழுவதும், ஏராளமான மின் நிலையங்கள் கட்டப்படுவதால், தமிழகத் திட்டங்களுக்கு, தொழில்நுட்பக் கருவிகள் கிடைப்பதில், தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், தமிழக மின் துறைக்குச் சோதனை மேல் சோதனையாக, புதிய நிலையத்திற்கு கிடைத்த தொழில்நுட்பக் கருவிகள் ஆற்றில் விழுந்து விட்டன.

இரண்டு மின் நிலையக் கட்டுமானப் பணிகளையும், பெல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையத்திற்கு, உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள ஹரித்துவார் தொழிற்சாலையிலிருந்து, 'ஸ்டேட்டார்' என்ற கருவியை, பெல் நிறுவனம், தமிழகத்திற்கு அனுப்பியது. 20 கோடி ரூபாய் மதிப்பிலான, 325 டன் எடை கொண்ட கருவியை, 100 சக்கரங்கள் கொண்ட பெரிய டிரெய்லர் லாரியில் கொண்டு வந்தனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், ஹரித்துவாரில் புறப்பட்ட லாரி, கடந்த சில தினங்களுக்கு முன், உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியை தாண்டி, மத்தியப் பிரதேச எல்லையில் வந்து கொண்டிருந்தது. அப்போது, பினார்புர் என்ற இடத்தில், குறுகிய ஆற்றுப்பாலத்தில் லாரி வந்தபோது, லாரியின் எடை தாங்காமல், பாலம் உடைந்து விழுந்தது.

இதில், லாரி ஆற்றில் கவிழ்ந்து, 'ஸ்டேட்டார்' கருவி, தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பெல் நிறுவனமும், தமிழக மின் துறையும் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக, ஆற்றிற்குள்ளேயே 'ஸ்டேட்டார்' கருவியுடன் லாரி மூழ்கியுள்ளது. லாரியும், கருவியும் அதிக எடையாக இருப்பதால், அதை மீட்க சிறப்பு கிரேன் கொண்டு வர, பெல் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஆறு மாதம் தாமதமாகும் : இதுகுறித்து, தமிழக மின்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது,'ஸ்டேட்டார்' கருவி மீட்கப்பட்டதும், மீண்டும் ஹரித்துவாருக்கு அனுப்பப்படும். அங்கு, சோதனை செய்து மீண்டும் வைண்டிங் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்படும். அது மீண்டும் இயங்காவிட்டால், புதிய கருவியை தயாரித்துத் தான் பெல் நிறுவனம் தரவேண்டும்.

லாரி மீண்டும் ஹரிதுவாருக்குச் செல்ல இரண்டு மாதங்களும், அங்கிருந்து மறுபடியும், தமிழகத்திற்கு நான்கு மாதங்களும், பராமரிப்பு மற்றும் மறு தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ள இரண்டு மாதங்களும் ஆகும்' என்றார்.

இதனால், சென்னைக்கு தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு வர, ஆறு மாதங்கள் தாமதமாகும் எனத் தெரிகிறது. இதன் காரணமாக, வட சென்னை அனல் மின் நிலைய நிறைவுப் பணிகளிலும், ஆறு மாதங்கள் தாமதம் ஏற்படும். எனவே, தமிழக மின் துறை திட்டமிட்டதை விட, கூடுதலாக ஆறு மாதங்கள், மின் பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us