PUBLISHED ON : அக் 08, 2011 12:00 AM

தி.மு.க., மேயர் வேட்பாளர் தத்தளிப்பு; பிரபலங்கள், 'எஸ்கேப்'
''கோவையில, இந்திய கம்யூனிஸ்ட் - தே.மு.தி.க., கூட்டணி ஏற்படாம போனதுக்கு, வசூல் விவகாரம் தான் காரணம் ஓய்...!'' என, விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''தேர்தல்னாலே வசூல் தான வே... விவரமா சொல்லும்...'' என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
''கோவை மாநகராட்சியில, 100 வார்டுகள் இருக்கு ஓய்... அந்த மாவட்டச் செயலர், சொந்த கட்சிக்காராகிட்ட எல்லா வார்டுகளையும், 'சேல்ஸ்' பண்ணி, பெரிய தொகையை வசூல் பண்ணிட்டா... இதுக்கிடையில, மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டணி ஏற்பட்டதால, அக்கட்சிக்கு, 19 வார்டுகளை ஒதுக்கினா...
''இதனால, அந்த வார்டுகளுக்கு வாங்கின பணத்தை திருப்பித் தந்துட்டார்... இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதிக எண்ணிக்கையில வார்டு ஒதுக்கினா, பணத்தை திருப்பித் தர வேண்டியிருக்குமேன்னு, மாவட்டச் செயலரே, கூட்டணியை முறிச்சிட்டதா சொல்றா ஓய்... வசூல் விவகாரம், தலைமைக்கு தெரிஞ்சு நடந்ததா, இல்லையாங்கறது தான், தொண்டர்களுக்கு ஒரே குழப்பமா இருக்கு ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''பாசப் போராட்டத்தால, தலைவர் சங்கடத்துக்கு ஆளாகியிருக்காரு பா...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் அன்வர்பாய்.
''கருணாநிதியைச் சொல்றீங்களாங்க...'' என்று கேட்டார் அந்தோணிசாமி.
''ஆமாம் பா.... மகள் கனிமொழி, ஸ்பெக்ட்ரம் வழக்குல சிக்கி, ஐந்து மாசமா டில்லி திகார் சிறையில இருக்காங்க... ஏற்கனவே, ரெண்டு முறை கருணாநிதி டில்லிக்குப் போய் மகளை பார்த்துட்டு வந்தாரு... அதுக்கப்பறம் டில்லி போகலாம்னு நினைச்சாலும், ஏதாவது ஒரு காரணத்தால தள்ளிப் போயிட்டே இருக்காம்...
''இதுவரை மூணு முறை பிளைட் டிக்கெட் முன்பதிவு செஞ்சு, 'கேன்சல்' பண்ணிட்டாரு பா... போன வாரம் டில்லி போகலாம்னு இருந்த நேரத்துல, ஸ்டாலின் உடல் நலம் பாதிச்சதால, டில்லி பயணத்தை, 'கேன்சல்' பண்ணிட்டு, மகன் கூடவே இருந்தார்... இனி, திருச்சி இடைத்தேர்தல் பிரசாரத்தை முடிச்சதுக்கு
அப்பறம் தான் டில்லி போவார்னு பேச்சு அடிபடுதுங்க...'' என்றார் அன்வர்பாய்.
''நெல்லை தி.மு.க., மேயர் வேட்பாளர் நிலைமை ரொம்ப பரிதாபமா இருக்குங்க...'' என, கடைசி தகவலுக்குள் நுழைந்தார் அந்தோணிசாமி.
''என்னாச்சு வே...'' என்று கேட்டார் அண்ணாச்சி.
''பாளையங்கோட்டை மண்டல தி.முக., தலைவர் சீதாராமனின் மகள் அமுதா தான், மேயர் வேட்பாளர்...
தந்தையும், மகளும் மட்டுமே பிரசாரம் செய்துட்டு இருக்காங்க... கூட, எந்தப் பிரபலங்களும் போறதில்லைங்க...
''மாவட்டச் செயலர், தனியார் ஆஸ்பத்திரியில ஓய்வெடுத்துட்டு இருக்காருங்க... அதனால, 'என்னால முடியாது'ன்னு, சொல்லிட்டாராம்... பாளையங்கோட்டை எம்.எல்.ஏ., மைதீன் கான், திருச்சி மேற்கு தொகுதியில
பிரசாரம் செய்ய போயிட்டாரு...
''மாஜி சபாநாயகர், 'சட்ட ரீதியா ஏதாவது உதவின்னா செய்யறேன்... தெருத் தெருவா பிரசாரம் செய்ய முடியாது'ன்னு, சொல்லிட்டாராம்... அதனால, தி.மு.க., வேட்பாளர் இப்பவே தள்ளாட்டத்துல இருக்காருங்க...'' எனக் கூறி விட்டு, அந்தோணிசாமி கிளம்ப, மற்றவர்களும் நடையைக் கட்டினர்.


