ADDED : அக் 08, 2011 01:33 AM
ஆத்தூர்: ஆத்தூர் அருகே லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி., வீட்டில் கொள்ளையடித்த
மூவருக்கு, தலா நான்கு ஆண்டு சிறை தண்டனை மற்றும், 2,000 ரூபாய் அபராதம்
விதித்து, ஆத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி
பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஏ.எஸ்.பி., சந்திரசேகரின் மகள் மகேஸ்வரி.
அவர், தற்போது சென்னை தெற்கு மண்டல லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.,யாக
பணியாற்றி வருகிறார். கடந்த மே மாதம் 28ம் தேதி, சந்திரசேகர் வீட்டில்
தனியாக இருந்தபோது, நள்ளிரவில் மர்ம கும்பல் ஜன்னலை உடைத்து கொண்டு
புகுந்தனர்.தொடர்ந்து, வீட்டினுள் இருந்த பீரோவை உடைத்து, மூன்று லட்சம்
ரூபாய் மதிப்பிலான, 18 பவுன் நகை, ஒன்றரை பவுன் வைர மோதிரம் மற்றும், 50
ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.மேலும், ஒரு வார
இடைவெளியில் அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரது வீட்டில் புகுந்த
கொள்ளை கும்பல், 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆறரை பவுன் மற்றும் ரொக்க
பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இருவேறு இடங்களில் அடுத்தடுத்து நடந்த
கொள்ளை சம்பவம் குறித்து, தம்மம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து,
கொள்ளை கும்பலை தீவிரமாக தேடிவந்தனர். இதனிடையே, ஆத்தூர் டி.எஸ்.பி.,
மாணிக்கம் தலைமையிலான தம்மம்பட்டி இன்ஸ்பெக்டர் நடராஜ் உள்ளிட்ட போலீஸார்,
கடந்த ஜுலை 21ம் தேதி, ஆத்தூர் மற்றும் தம்மம்பட்டி பகுதியில் வாகன
தணிக்கை, ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, நாகியம்பட்டி - உலிபுரம்
சாலையில் பைக்கில் சென்ற கும்பலை போலீஸார் மடக்கி பிடித்து விசாரணை
செய்தனர். விசாரணையில், தம்மம்பட்டியை சேர்ந்த எஸ்.பி., வீடு உள்ளிட்ட இரு
இடங்களில் பணம், நகை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர்.விசாரணையில், சேலம்
மாமாங்கம் பகுதியை சேர்ந்த சங்கர் மகன் லாலம்பி (எ) மணிகண்டன் (24),
ஜாகீர்அம்மாபாளையம் கந்தசாமி மகன் சக்தி (எ) சக்திவேல் (25), பழனிசாமி மகன்
மாரியப்பன் (24) என்பது தெரியவந்தது. அக்கும்பலிடம் இருந்து
கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் ரொக்க பணத்தை பறிமுதல் செய்து, சேலம்
மத்திய சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு, ஆத்தூர் இரண்டாவது குற்றவியல்
நடுவர் நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த
நீதிபதி மணி, நகை, பணம் கொள்ளையடித்த மணிகண்டன், சக்திவேல், மாரியப்பன்
ஆகிய மூவருக்கும், இரு வழக்குகளில் தலா இரண்டு ஆண்டுகள் என, ஒவ்வொரு
நபருக்கும் நான்கு ஆண்டு சிறை தண்டனையும், தலா, 2,000 ரூபாய் அபராதம்
விதித்து உத்தரவிட்டார்.


