ADDED : அக் 08, 2011 10:58 PM
திருப்பூர் : நொய்யல் ஆற்றின் கரையோரத்தில் தொடர்ந்து கட்டட கழிவு கொட்டப்படுகிறது.திருப்பூரின் மையப்பகுதியில் ஓடும் நொய்யல் ஆற்றின் பராமரிப்பு குறித்து பொதுப்பணித்துறை அலட்சியப்படுத்துவதால், ஆறு தன் அடையாளத்தை இழந்து வருகிறது.
தற்போது சாக்கடை கழிவு கலந்துள்ளது; மழைக்காலங்களில் மட்டும் நீர் வரத்து ஆற்றில் காணப்படுகிறது. நொய்யலாறு கரையோரத்தில் கட்டுமான கழிவு அதிகளவில் கொட்டப்படுகிறது. தினமும் திருப்பூரில் இடிக்கப்படும் கட்டடங்களின் கழிவு முழுவதும், வாகனங்களில் லோடு ஏற்றி கொண்டுவரப்பட்டு, நொய்யல் ஆற்றின் இரண்டு கரைகளிலும் கொட்டப்படுகிறது.இதனால், அகலமாக காணப்பட்ட நொய்யலாறு ஆக்கிரமிப்பில் சிக்கி குறுகி வருகிறது. பல கி.மீ.,தூரத்துக்கு தொடர்ந்து கொட்டப்படும் கட்டுமான கழிவால் , ஆற்றின் நீர் வழித்தடம் மறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெள்ள காலத்தில் ஆற்று நீர் கரையோர குடியிருப்புகளுக்குள் புகும் அபாயமும் உள்ளது.சாக்கடை கழிவு கலப்பது; கோழி, இறைச்சிக்கழிவு கொட்டுவது உள்ளிட்ட காரணங்களால் நொய்யலாறு சுகாதாரக் கேடு நிறைந்த நதியாக மாறியுள்ளது; தற்போது கட்டட கழிவு கொட்டப்பட்டு ஆறு அடையாளத்தை இழந்து வருகிறது. இந்நிலை நீடிக்காமல், பொதுப்பணித்துறை அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.


