கடிதம் எழுதுவதை விட்டுட்டு, இட ஒதுக்கீட்டை அமல்படுத்துங்க : மாயாவதிக்கு முஸ்லிம் அமைப்பு கோரிக்கை
கடிதம் எழுதுவதை விட்டுட்டு, இட ஒதுக்கீட்டை அமல்படுத்துங்க : மாயாவதிக்கு முஸ்லிம் அமைப்பு கோரிக்கை
கடிதம் எழுதுவதை விட்டுட்டு, இட ஒதுக்கீட்டை அமல்படுத்துங்க : மாயாவதிக்கு முஸ்லிம் அமைப்பு கோரிக்கை
ADDED : அக் 08, 2011 11:02 PM

ரேபரேலி: 'பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு, உ.பி., மாநிலத்தில் சிறுபான்மை சமூகத்தினருக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதை, முதல்வர் மாயாவதி உறுதி செய்ய வேண்டும்' என, அகில இந்திய ஐக்கிய முஸ்லிம் மோர்ச்சா கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, அந்த அமைப்பின் தலைவர் எம்.ஏ.சித்திக் கூறியதாவது: பல பிரச்னைகள் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் மாயாவதி அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்படி கடிதம் எழுதுவதை விட்டு விட்டு, மாநிலத்தில் பிற்பட்டோருக்கான, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், 8.44 சதவீதத்தை முஸ்லிம்களுக்கு அளிக்க முன்வரவேண்டும். இந்த இட ஒதுக்கீட்டை உடனே அமல்படுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை மாயாவதி அரசு அமல்படுத்தா விட்டால், அவர் பிரதமருக்கு கடிதம் எழுதுவதெல்லாம், அடுத்த சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, மக்களின் அனுதாபத்தைப் பெற, அவர் நடத்தும் நாடகமாக கருதப்படும். மதச்சார்பற்ற கட்சிகள் எனக் கூறிக் கொள்பவர்கள் எல்லாம், முஸ்லிம்களை, தங்களின் ஓட்டு வங்கியாக எப்போதும் கருதுகின்றனர். இது நீண்ட நாளைக்கு நீடிக்காது. இவ்வாறு சித்திக் கூறினார்.
சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த முகமது அசாம்கான் கூறுகையில், ''முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி, பிரதமர் மன்மோகனுக்கு முதல்வர் மாயாவதி கடிதம் எழுதுவதெல்லாம், இந்த சமூகத்தினரை இழிவுபடுத்துவது போன்றது. 2012ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு நடத்தப்படும் நாடகம்,'' என்றார்.
உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி கடந்த மாதம் 17ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், அரசு வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ,முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க, அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என, வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


