Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஆரம்ப சுகாதார நிலையங்களில் "எஸ்கேப்' ஆகும் டாக்டர்கள்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் "எஸ்கேப்' ஆகும் டாக்டர்கள்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் "எஸ்கேப்' ஆகும் டாக்டர்கள்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் "எஸ்கேப்' ஆகும் டாக்டர்கள்

ADDED : அக் 11, 2011 11:16 PM


Google News
Latest Tamil News

அரசு நிர்ணயித்துள்ள பணி நேரப்படி, பெரிய ஆரம்ப சுகாதார நிலையங்களில், 24 மணி நேரமும், ஏதாவது ஒரு டாக்டர் பணியில் இருந்தாக வேண்டும்.

ஆனால் நடைமுறையில், பெரும்பாலான மருத்துவமனைகளில், பகல் 1 மணி வரை கூட, டாக்டர்கள் இருப்பதில்லை என்பது, ஊரறிந்த ரகசியம்.



நோயாளிகள் அழைத்தால், எந்த நேரத்திலும் சிகிச்சை அளிக்க, டாக்டர்கள் முன்வர வேண்டும். ஆனால், பெரும்பாலான டாக்டர்கள், 20 முதல் 25 கி.மீ., தொலைவில் உள்ள நகர்ப்புறப் பகுதிகளில் தங்கி, தனியாக கிளினிக் நடத்தி வருவதால், ஆரம்ப சுகாதார நிலையங்களின் அருகில் அவர்கள் தங்குவதில்லை.தகவல் அறியும் சட்டப்படி பெறப்பட்ட தகவல் அடிப்படையில், ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டர்களின் பணி நேரம், குறைந்தது 6 மணி நேரமும், அதிகபட்சமாக 12 மணி நேரமுமாக உள்ளது. இரவுப் பணி வரும் போது, 12 மணி நேரம் அவர் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும். ஆனால், பல டாக்டர்கள் இரவில் தங்கியிருப்பதில்லை.



காஞ்சிபுரம் மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, சென்னையில் இருந்து ( 100 கி.மீ.,) தினமும் ஒரு டாக்டர் வந்து செல்வதாக, அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் இதுபோன்ற நிலை தான் உள்ளது.ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டர்கள் அதிக நேரம் பணிபுரிந்து களைத்துப் போய்விடுகின்றனர். இதனால், அவர்களது பணி நேரத்தை குறைக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது. பொது சுகாதாரத் துறை இயக்குனர் தலைமையில், 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, டாக்டர்களின் பணி நேரம் குறைக்கப்பட்டது. குறைக்கப்பட்ட பணி நேரப்படி கூட, யாரும் பணி செய்வதில்லை.



தமிழகத்தில், எந்த ஆரம்ப சுகாதார நிலையத்திலாவது டாக்டர்கள் பணி செய்கிறார்களா என, பரவலாக விசாரித்த போது, நமக்கு ஏமாற்றமே மிஞ்சியது.ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஒருவரிடம் கேட்ட போது,'கிராமம் அல்லது சிறு நகரங்களில் எங்கள் குழந்தைகள் படிக்க நல்ல பள்ளி இல்லை. வேறு வசதிகளும் கிடைப்பதில்லை. எனவே, அருகில் உள்ள நகரத்தில் இருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது' என்றார்.சட்டசபையில் சில உறுப்பினர்கள் பேசும் போது,'ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் தங்கியிருக்க, அவர்களுக்கு அங்கே குடியிருப்பு கட்டிக் கொடுக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர்.



இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் பொற்கைபாண்டியனிடம் கேட்டபோது,'அரசு நிர்ணயித்துள்ள பணி நேரத்தில் டாக்டர்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும். இது தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் மட்டுமல்ல, தாலுகா மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என, பெரும்பாலான மருத்துவமனைகளில், பிற்பகலில் டாக்டர்கள் யாரும் வருவதில்லை. அவசர கிசிச்சை பிரிவு உள்ளிட்ட சில பிரிவுகளில் மட்டும் டாக்டர்கள் பணியில் இருக்கின்றனர்.



அரசு டாக்டர்கள் சங்கத் தலைவர் கனகசபை கூறும்போது,'ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் முழு நேரமும் பணியில் உள்ளனர். மாவட்ட ஆட்சியருடனான ஆய்வுக் கூட்டம், தாசில்தாருடனான ஆய்வுக் கூட்டம், பல்வேறு மருத்துவ முகாம்கள் என, அவ்வப்போது அவர்கள் வெளியே செல்ல வேண்டியுள்ளதால், சில நேரங்களில் மருத்துவமனையில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், எப்போதும் பிற்பகலில் இருப்பதில்லை என, ஒட்டு மொத்தமாகக் கூறுவதில் உண்மை இல்லை' என்றார்.



சமூக, சமத்துவத்துக்கான டாக்டர் சங்கத் தலைவர் ஜி.ஆர். ரவீந்திர நாத் கூறும் போது,'ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களுக்கு இப்போது அதிக பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆய்வுக் கூட்டங்கள், சமூக திட்டங்களில் பங்கேற்பு என, மருத்துவமனைக்கு வெளியேயும் அவர்களுக்கு அதிக பணி உள்ளது. சிலர் 'ஓவர் டைம்' செய்கிறார்கள் என்றே சொல்வேன். நீங்கள் சொல்வதெல்லாம், ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை. இப்போது அப்படி இல்லை' என்றார்.



சென்னை அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த, பெயர் வெளியிட விரும்பாத கிராம செவிலியர் கூறும் போது,'மாதத்துக்கு 15 முதல் 20 'டெலிவரி' பார்க்கிறோம். ஆனால், டாக்டர் எதற்கும் வருவதில்லை. பிற்பகலில் எந்த டாக்டரும் இருப்பதில்லை என்பது உண்மை' என அடித்துச் சொன்னார்.



எஸ். ராமசாமி







      Our Apps Available On




      Dinamalar

      Follow us