ADDED : ஆக 03, 2011 11:03 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த கோலார்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோலார்பட்டி வட்டாரத்தில் பள்ளி மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில், எஸ்.சந்திராபுரம் துவக்கப்பள்ளியில் ஒரு வாரமும், கோமங்கலம் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மூன்று வாரமும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கோலார்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் கூறியதாவது: இரண்டு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. துவக்கப்பள்ளி மாணவர்கள் யாருக்கும் கண் கண்ணாடி போடும் அளவுக்கு பார்வையில் கோளாறுகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது; சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. உயர்நிலைப்பள்ளியில் நான்கு மாணவர்களுக்கு குறை இருப்பது அறியப்பட்டுள்ளது. செவிலியர்கள், சுகாதார இன்ஸ்பெக்டர், டாக்டர்கள் கொண்ட குழுவாக இந்த திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது, என்றனர். மகப்பேறு டாக்டர் நியமனம்: கோலார்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஐந்து டாக்டர் பணியிடங்கள் உள்ளன. அதில் இரண்டு பணியிடங்கள் காலியாக இருந்தன. இதில் ஒரு பணியிடத்துக்கு டாக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். கோலார்ப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் கூறியதாவது: காலியாக இருந்த ஒரு டாக்டர் பணியிடம் மட்டும் தற்போது நிரப்பப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து மகப்பேறு டாக்டராக செண்பக சீதா பிரியா நியமிக்கப் பட்டுள்ளார். இந்த நிலையத்தில் தற்போது மூன்று பொது மருத்துவர்கள் உள்ளனர். தற்போது மகப்பேறு சிகிச்சை அளிக்கும் டாக்டர் நியமிக்கப்பட்டுள்ளார், என்றனர்.


